பயணியின் பெட்டியில் ஏவுகணை இயக்கும் கருவி: முன்னாள் ராணுவ வீரர் ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

பிற செய்திகள் படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பயணி ஒருவரின் பொருட்களை சோதனை செய்ததில் அதில் ஏவுகணையை இயக்கும் கருவி இருந்ததை கண்டறிந்த அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் அதனை கைப்பற்றினர்.

தான் ராணுவத்தில் பணியாற்றியதாக தெரிவித்த அந்த நபரின் பெட்டியில் ஏவுகணை இயக்கும் கருவி இருந்தது சோதனையின்போது கண்டறியப்பட்டது.

பால்டிமோர்/வாஷிங்டன் சர்வதேச விமானநிலைய அதிகாரிகளிடம் அந்த நபர் தன் பெட்டியில் இருந்த பெட்டியில் ஏவுகணை இயக்கும் கருவி ராணுவ பணிக்காக குவைத்தில் இருந்ததற்கு அடையாளமாக தான் வைத்திருப்பதாக தெரிவித்தார்.

ஏவுகணை இயக்கும் கருவியை பாதுகாப்பாக செயலிழக்க வைக்க அது அரசு தரப்பு தீயணைப்பு பிரிவுப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிஎஸ்ஏ என்றழைக்கப்படும் அமெரிக்காவின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக பிரிவு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில், ''டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த இந்நபர் அதிகாரிகளிடம் தான் ரானுவத்தில் பணியாற்றியதாக தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

''அதிர்ஷ்டவசமாக இந்த கருவி செயலில் இல்லை. அது உடனடியாக கைப்பற்றப்பட்டு உரிய துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்நபர் தனது விமான பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்'' என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் ஒருவர் கைது

படத்தின் காப்புரிமை TWITTER

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயரான தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 21ஆம் தேதியன்று ரெட்டியார் பாளையத்தில் இருந்த அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் அவருடைய கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

உமா மகேஸ்வரி தி.மு.கவின் நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணியின் துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.

இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவராத நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிவதில் துவக்கத்தில் பிரச்சனைகள் இருந்தன. மேலும் உமா மகேஸ்வரியின் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால், யார் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விரிவாக படிக்க: திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை வழக்கில் ஒருவர் கைது

பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

படத்தின் காப்புரிமை ANUBHAV SWARUP YADAV

உன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சென்ற கார் மீது லாரி மோதியதில் அவருடன் பயணித்த உறவினர் இருவர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இந்த விபத்து நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்குரைஞரும் விபத்தில் பெற்ற காயங்களுக்கு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்துகுள்ளான பெண் உன்னாவ், பாங்கர்மவு தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கர் மீது வன்புணர்வு குற்றம்சாட்டியவர்.

மாகி கிராமத்தில் தமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சிறுமியை வன்புணர்வு செய்ததாக குல்தீப் சிங் மீது புகார் எழுந்தது. அவர் அதற்காக சென்ற ஆண்டு ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விரிவாக படிக்க:பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

பிக் பாஸ் 3ல் பேருந்தில் பெண்களை இடித்த பேச்சு: கண்டித்த கமல், மன்னிப்பு கோரிய சரவணன்

பிக் பாஸ் 3 போட்டியாளர் சரவணன் கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சியின் போது, தன்னுடைய கல்லூரி நாட்களில் பேருந்துகளில் பெண்களை இடித்திருக்கிறேன் என்று கமல் ஹாசன் முன்னிலையில் கூறியது பெரும் சர்ச்சையானது.

இச்சூழலில், அது பெரும் விவாதத்துக்குள்ளானது. இன்று திங்கள்கிழமை ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், சரவணனை கன்ஃபஷன் அறைக்கு அழைத்த பிக் பாஸ் கமல் ஹாசன் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு வேண்டினார்.

அதற்கு சரவணன், "நான் பேசியது மிகப் பெரிய தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் இளம் வயதில் செய்தது போல் யாரும் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நினைத்தேன். தயவு செய்து மக்கள் என்னை மன்னித்துவிடுங்கள்." என்றார்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின்போது, இயக்குநர் சேரனுக்கும் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இயக்குநர் சேரன் தன்மீதான முன்பகையால் டாஸ்கின் போது கடுமையாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், நிகழ்ச்சியின்போது அவர் சேரன் மீது குற்றச்சாட்டை வைத்த விதம் அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நேயர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விரிவாக படிக்க:பேருந்தில் பெண்களை இடித்த பேச்சு: கண்டித்த கமல், மன்னிப்பு கோரிய சரவணன்

விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை"

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று இந்தியாவிலிருந்து புறப்படுகிறது.

அதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையிலான மோதல் தொடர்பான பேச்சுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த கோலி, "எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. நாங்கள் எப்போதும் போல் தான் இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் முன்னிலை பெற செய்வதற்கு நாங்கள் பணியாற்றிவரும் சூழ்நிலையில், எங்களது இருவருக்கிடையே மோதல் இருப்பதாக அபத்தமான வகையில் புரளி பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் இருவரும் அணியின் மூத்த வீரர்கள். வீரர்களின் அறையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பொய்கள் மற்றும் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இது அவமரியாதை" என்று கூறினார்.

விரிவாக படிக்க:"எனக்கும் ரோஹித்துக்கும் பிரச்சனை ஏதுமில்லை" - விராட் கோலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :