‘ஆப்கானிஸ்தான் மக்கள் அதிகம் கொல்லப்படுவது அரசுப்படையால்தான்’ - ஐநா தகவல்

'ஆப்கானிஸ்தான் மக்கள் அதிகம் கொல்லப்படுவது அரசுப்படையினரால்தான்' படத்தின் காப்புரிமை Anadolu Agency/Getty Images

ஆப்கானிஸ்தானில், 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களைவிட ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம் என்றும் ஐ.நா புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.

தாலிபன் படையினருக்கு எதிராக மிகவும் தீவிரமாக அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்திவரும் இவ்வேளையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான இந்த புள்ளிவிவரத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகளால் 631 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அதேவேளையில் 717 குடிமக்கள் ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளை விலக்கிக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் இவ்வேளையில் ஐ.நாவின் மேற்கூறிய புள்ளிவிவரத் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை EPA

யுனாமா என்றழைக்கப்படும் ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் உதவி மிஷன் வெளியிட்ட இந்த புள்ளிவிவரத் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

''போரில் ஈடுபடாத குடிமக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது' என்ற உறுதிபாட்டுடன் தங்கள் செயல்படுவதாக தெரிவித்த அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் தாக்குதல்களில் இறந்தவர்கள் குறித்த தங்களின் புள்ளிவிவரத்தகவல்கள் மிகவும் சரியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தங்களின் ஆதார புள்ளிவிவரத்தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பின்போது, 2001இல் தாலிபன் அமைப்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், ஆஃப்கனின் கணிசமான பகுதிகள் இன்னும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்ததால் 2016இல் உயிரிழப்புகள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 2017ஆம் ஆண்டிலும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :