ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

Screen grab from social media shows fireworks fired from moving car in Hong Kong. 31 July 2019 படத்தின் காப்புரிமை Twitter

ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் மீது கார் ஒன்றில் இருந்து பட்டாசுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

டின் ஷுய் வாய் மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது பட்டாசுகள் வீசப்பட்டதும் பாதுகாப்பு கருதி மக்கள் கலைந்து ஓடுவது சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் காணொளியில் பார்க்க முடிகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹாங் காங் போராட்டக்காரர்கள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

அந்தக் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறு எண்ணிக்கையிலான சக போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

குற்ற விசாரணைக்கு ஆளாகும் நபர்களை சீனா அல்லது தைவானுக்கு நாடு கடத்த வழிவகை செய்யும் சட்டத்தை ஹாங்காங் அரசு அறிமுகம் செய்தபின், அது ஹாங்காங் தன்னாட்சி உரிமையை பாதிக்கும் என்று அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

போராட்டங்களைத் தொடர்ந்து அந்த சட்ட மசோதாவை அரசு இடைநிறுத்தி வைத்தபோதும் முழுமையாக அதை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் தொடர்ந்தன.

சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா 'செயலிழந்துவிட்டது' என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் இந்த மாதத் தொடக்கத்தில் தெரிவித்தார்.

இன்றைய தாக்குதலைக் கண்டிப்பதாகவும் இதற்குக் காரணமானவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று, காவல் துறை உடனான மோதலின்போது கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 40 செயற்பாட்டாளர்கள் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்