இரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பிடித்தது - அதிகரிக்கும் பதற்றம்

Iranian Revolutionary Guards speedboat - 22 July படத்தின் காப்புரிமை AFP

வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை இரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை கடத்தி சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பாரசீக வளைகுடா பகுதியில் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த எண்ணெய் கப்பலில் ஏழு லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததாகவும், அதில் இருந்த ஏழு மாலுமிகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை பிடிப்பதற்கான முயற்சி கடந்த புதன் கிழமை எடுக்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

மேலும், இந்தக் கப்பலில் இருந்த எரிபொருள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிடிபட்ட இக்கப்பலில் எந்தக் கொடி இருந்தது, மாலுமிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இன்னும் தெரிய வரவில்லை.

அதிகரிக்கும் பதற்றம்

இச்சம்பவம், அப்பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பிபிசி அரபு விவகாரங்கள் ஆசிரியர் செபாஸ்டியன் உஷெர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டன் கப்பல் ஸ்டெனா இம்பெரொ இன்னும் இரானின் பிடியில் உள்ளது

இரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா அதிகப்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு இடையே இந்நிகழ்வு நடந்துள்ளது.

2015 அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, இரான் மீதான தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன.

எரிபொருளை கடத்தி செல்வதாக தற்போது இரண்டாவது முறையாக இரான் குற்றஞ்சாட்டுகிறது. கடந்த ஜூலை 13ஆம் தேதி பனாமாவின் எம்டி ரியா என்ற கப்பலை இரான் கடற்படையினர் பிடித்தனர்.

எரிபொருள் கடத்தலை தடுப்பதற்கான ரோந்து பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தபோது அக்கப்பல் பிடிப்பட்டதாக புரட்சிகர காவல்படையினரின் செப்பா செய்தித்தளம் தெரிவித்தது.

கடந்த மாதம் ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஒன்றை பிடித்தது இரான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்