டெக்ஸாஸ், ஓஹியோ துப்பாக்கிச் சூடு பற்றி டொனால்டு டிரம்ப்: "மனநோயால் நடந்தது" மற்றும் பிற செய்திகள்

டிரம்ப் படத்தின் காப்புரிமை ALASTAIR PIKE

அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் ஓஹியோ மாகாணங்களில் நடந்த இரு வேறு துப்பாக்கிசூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸில் ஸ்பானிஷ் மக்கள் அதிகம் குடியேறுவதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த இருசம்பவங்களும் மனநோயால் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார் டிரம்ப்.

"நடந்த இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் மனநோய். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் மிக மிக மோசமான மனநோய் கொண்டவர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் குடியேறுபவர்கள் விஷயத்தில் டிரம்ப் நடந்து கொள்ளும் முறையும் துப்பாக்கி கட்டுப்பாட்டை அவர் கொண்டுவர மறுப்பதும்தான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

காஷ்மீர் பதற்றம்: வீட்டுச்சிறையில் அரசியல் தலைவர்கள்

படத்தின் காப்புரிமை GETTY IMAGES / TWITTER
Image caption சஜித் லோன், மெஹ்பூபா முஃப்டி மற்றும் ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.

ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில்

காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம் - பாகிஸ்தான் பிரதமர்

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு ஸ்திரதன்மையை கொண்டுவர நிச்சயம் மூன்றாம் தரப்பு தலையீடு அவசியம் என கூறி உள்ளார்.

இம்ரான் கான் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் எல்லையில் நிலைமை மோசமாகி வரும் சூழலில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

சர்வதேசப் பதக்கம் வென்றவருக்கு டீ கோப்பை பரிசளித்த இலங்கை அரசு

Image caption மாதவன் ராஜகுமாரன்

இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளி மகனான மாதவன் ராஜகுமாரன் சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேநீர் அருந்தும் கோப்பையொன்றை பரிசாக வழங்கியுள்ளது.

இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் மாதவன் ராஜகுமாரன் குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க: சர்வதேச பதக்கம் வென்ற மலையகத் தமிழருக்கு டீ கோப்பை பரிசளித்த இலங்கை அரசு

பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா

படத்தின் காப்புரிமை Getty Images

தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா.

என்ன... பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.

விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது.

ஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், கிரோசின் நிரப்பப்பட்ட பையை சுமந்து பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் பறந்துள்ளார். அதாவது 35.4 கி.மீ.

மேலும் படிக்க: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதர், சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :