காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன செய்ய முடியும்?

  • ஸ்ருதி அரோரா
  • ஆசிய பசிபிக் வல்லுநர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக பிரிக்கின்ற இந்தியாவின் முடிவு வந்துள்ளது.

இந்த எதிர்பாராத சூழ்நிலையில், இது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இனி என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த தன்னாட்சி உரிமையான சிறப்பு மாநில அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத அரசு ஆகஸ்ட் 5ம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது.

இதன் மூலம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலத்தை மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளதோடு, நீண்டகாலமாக சர்வதேச பிரச்சனையாக இருக்கும் காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தை தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு இந்தியா எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு என்பது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் "உள்நாட்டு விவகாரம்" என்று உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாகும்.

இந்த மாற்றம், இந்தியாவின் பார்வையில் இருந்து எல்லாவற்றையும் மாற்றியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தானுக்கு, காஷ்மீர் பதற்றம் மிகுந்த பிரச்சனையாகவே தொடர்கிறது. இந்தப் பிரச்சனை பாகிஸ்தானின் வரலாறு, அரசியல், பிராந்திய மற்றும் அடையாள முக்கியத்துவத்தோடு தொடர்புடைய ஒன்றாகும்.

1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இரண்டு போர்கள் நடைபெறுவதற்கு காரணமாக காஷ்மீர் இருந்துள்ளது.

இரண்டு நாடுகளும் காஷ்மீரை உரிமை கொண்டாடினாலும், அவற்றின் ஒரு பகுதியைதான் இரு நாடுகளும் தங்களின் நிர்வாகத்தில் வைத்துள்ளன.

இந்த முடிவுக்கு பாகிஸ்தான் தயாராக இல்லையா?

காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்று சொல்வதற்கு அறிகுறிகள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தியாவோடு காஷ்மீர் ஒன்றிணைவதை அம்மாநிலத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 370 வாயிலாக கொடுக்கப்பட்டு வந்த சிறப்புரிமை தடுக்கிறது என்று பல தசாப்தங்களாக, இந்தியாவின் வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக), அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸூம் சொல்லி வந்தன.

இந்த சட்டப்பிரிவு நீக்கப்படும் என்பது பாஜக நீண்டகாலமாக வழங்கி வந்த வாக்குறுதியாகும்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையை ஆளும் பாஜக பெற்றது.

காஷ்மீர் பற்றிய இந்த முடிவை எடுக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெரும் பங்காற்றியுள்ளார்.

ஆனால், இந்தியாவின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீருக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு ஆளும் பாஜக அரசு, குடியரசு தலைவரின் ஆணையை பயன்படுத்திய பின்னர், பெரும்பாலான இந்தியர்களைபோல, பாகிஸ்தானும் இந்த முடிவுக்கு தயாராக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, "இந்தியாவின் இந்த நடவடிக்கை எதிர்பாராமல் திடீரென வந்தது" என்று கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

"இந்த நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்று நினைத்திருந்தோம். படிப்படியாக நாம் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருந்தோம். ஆனால், 24 மணிநேரத்திற்குள் இவை அனைத்தும் நடைபெறும் என்று எங்களுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்ததாக ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஆனால், இந்த நடவடிக்கை திடீரென வரவில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்தியாவின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீர் பகுதிகளில் நிகழ்ந்த விடயங்கள் அனைத்தும், இத்தகைய நிலைமைக்கு செல்லும் என்பதை சுட்டிக்காட்டின என்று அவர்கள் கூறுகின்றனர்.

காஷ்மீர் பற்றிய இந்தியாவின் அறிவிப்பு வருவதற்கு முன்னால், பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை உள்பட உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதில் பாகிஸ்தான் பெரும் கவனம் செலுத்தி வந்தது.

எதிர்க்கட்சி அரசியல்வதிகளுக்கு எதிரான புலனாய்வுகள், ஊடக மிரட்டல் வழக்குகள் என உள்ளூர் ஊடகங்களின் குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துவிட்டது.

"இதன் விளைவாக, காஷ்மீர் தொடர்பான பாஜகவின் உயரிய மட்டத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது என்ற தகவல்களை சேகரிக்க நேரம் இருக்கவில்லை" என்று உள்ளூர் நாளேடான "பாகிஸ்தான் டுடே" குறிப்பிட்டிருந்தது.

"பிடிஐ (பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப்) அரசும், அதனுடைய ஆதரவாளர்களும், இந்திய மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எழுகின்ற அறிகுறிகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இந்த அறிவிப்புக்கு தயாரகவில்லை" என்று அதன் தலையங்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் எவ்வாறு பதிலளித்தது?

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி உரிமையை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, எதிர்பார்த்ததுபோல, பாகிஸ்தான் கோபமாகவே பதிலளித்து வருகிறது.

இந்தியாவின் அறிவிப்புக்கு பின்னர், சட்டவிரோத நடவடிக்கையை நிராகரிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

"இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் (இந்திய நிர்வாக காஷ்மீர்) சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியாகும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின்படி, இந்திய அரசு எடுக்கும் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையும் இந்த சர்ச்சையை மாற்றிவிடாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர், ராணுவ மற்றும் உயரிய அரசு அதிகாரிகளோடு பாதுகாப்பு தொடர்பான பல கூட்டங்களை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்தியுள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

வியாழக்கிழமை இந்தியாவோடு இருக்கும் ராஜீய உறவுகளை குறைத்து கொள்வதாக அறிவித்த பாகிஸ்தான், இருதரப்பு வர்த்தக உறவை இடைநிறுத்தியதோடு, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை நாட்டை விட்டு வெளியேற்றியது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மோயினுல் ஹக் பொறுப்பு எடுக்கமாட்டர் என்றும் பாகிஸ்தான் முடிவு எடுத்தது.

"சட்டப்பிரிவு 370 தொடர்பான சமீபத்திய முடிவுகள் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" என்று இந்தியா கூறியுள்ளதே டெல்லியுடனான ராஜீய உறவுகளை குறைத்து கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பதற்கு காரணமாக இருக்கக் கூடும்.

காஷ்மீர் பற்றிய இறுதி முடிவை ஐக்கிய நாடுகள் அவைதான் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறுகிறது.

அதேவேளையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல ராஜீய நடவடிக்கைகளை பாகிஸ்தான் விரைவாக எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் முறையிட போவதாக ஆகஸ்ட் 6ம் தேதி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதே நாளில், பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கிய வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூட் குரோஷி, சௌதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தோடு கூட்டம் நடத்தினார்.

பிரதமர் இம்ரான் கான் மீதான அழுத்தம் என்ன?

இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், நரேந்திர மோதி வெற்றிபெற்றால் அமைதிக்கான நல்ல வாய்ப்பு அமையலாம் என்று இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் பற்றிய இந்தியாவின் இந்த திடீர் நடவடிக்கை, ஓராண்டு பதவிக்காலம் நிறைவாகவுள்ள பிரதமர் இம்ரான் கான், மிகவும் வலிமையாக பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை இம்ரான் கான் செய்ய தவறினால், அவரது தலைமைத்துவ தோற்றமும், பாகிஸ்தானுக்கு அவர் விட்டு செல்லும் அம்சங்களும் பாதிக்கப்படும்.

அதே வேளையில், காஷ்மீர் நிலைமை இம்ரான் கானின் அரசின் ராஜீய திறமைகளை உரசி பார்க்கும் கல்லாக அமைகிறது.

சௌதி அரேபியா, பிரிட்டன், மலேசியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களோடு காஷ்மீர் நிலைமை பற்றி அவர் கலந்துரையாடியுள்ளார்.

பிற நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதில் எந்த அளவுக்கு இம்ரான் கான் வெற்றிபெறுவார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பாகிஸ்தானின் திட்டம் வேலை செய்யுமா?

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வளரும் பதற்றம் தொடர்பாகவே இதுவரை பல சர்வதேச பதில்கள் வந்துள்ளன.

அணு ஆயுதங்கள் கொண்டுள்ள இரு நாடுகளும் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டுமென பல நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை, முக்கிய சர்வதேச தலையீடு எதுவும் இல்லாமலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை வெளியேற்றுவதற்கு டிரம்ப் வைத்திருக்கும் முக்கிய நோக்கத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால், அவரது வாக்குறுதியில் நிலைத்து இருப்பாரா என்று நாம் உறுதியாக சொல்லிவிட முடியாது. புவிசார் அரசியல் எதார்த்தங்களும், மாறுப்பட்ட, கடுமையான நிலைமை கொண்ட இந்தியாவின் காஷ்மீர் மக்களிடம் சரியாக வேலை செய்யவில்லை" என்று இன்னொரு பாகிஸ்தான் ஊடகமான "த நியூஸ்" தெரிவித்தது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்து, இந்தியாவின் முடிவை மாற்றும் அளவுக்கு செயல்முறை நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் இருப்பதற்கு, இந்த நாடுகளோடு இந்தியா முக்கிய வர்த்த உறவு கொண்டிருப்பது காரணமாகும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தனியாகவே இதனை கையாள வேண்டியுள்ளதாக தெரிகிறது.

இரு தரப்பு உறவு நடவடிக்கைகளை பொறுத்தவரை, இவற்றால் பாதிக்கப்படுவது பாகிஸ்தானா, இந்தியாவா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

இனி என்ன?

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும்போதெல்லாம், இரு நாடுகளிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் போரிடுமா? என்ற கேள்வி விவாதிக்கப்படும்.

பொதுவாக இதற்கான விடை இல்லை. குறைந்தபட்சம் ஒரு வழக்கமான போர் நிகழாது. போரால் ஏற்படும் பொருளாதார சுமைக்கு இரு நாடுகளும் தயாராக இல்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.

எல்லையின் குறுக்கே வன்முறை சம்பவங்கள், கோழைத்தனமான ராணுவ நடவடிக்கைகள், பிராக்ஸி போரை தொடர்வது ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவுக்கும், ஆப்கன் தலிபான் குழுவுக்கும் இடையில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தனது செல்வாக்கை பாகிஸ்தான் நிறுத்தலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர்.

"காஷ்மீர் பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களின்படி நடப்பதற்கு இந்தியாவை கட்டாயப்படுத்துவதில், அமெரிக்காவும், அதன் நேட்டோ உறுப்பு நாடுகளும் நேர்மறையான பங்களிப்பு செய்யாத வரை ஆப்கன் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் வழங்கும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நிறுத்த வேண்டும்" என்று "த டெய்லி டைம்ஸ்" விவரித்துள்ளது.

"சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை தடைபடாமல் தொடர்ந்து செயல்படுவது உறுதிப்படுமானால், பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிக்கும். காஷ்மீர் பிரச்சனைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை, ஆப்கானிஸ்தான்-இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு உதவும் பாதை மற்றும் பாகிஸ்தானின் வான்பரப்பு இந்தியாவுக்கு மூடப்பட வேண்டும்" என்றும் பரிந்துரைக்கப்படுகிறது,

ஆனால், இதனை எளிதாக சொல்லலாம்; செய்வது கடினம். அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதார நாடுகளின் ஆதாயங்களுக்காக பாகிஸ்தானின் நலன்கள் சுருக்கப்பட்டு விட்டதே இவ்வாறு செயல்படுத்த முடியாமல் போவதற்கு காரணமாகும்.

"இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு சில தெரிவுகளே உள்ளன. அதிகபட்சமாக ராஜீய வழிமுறைகள் மூலம், உலக நாடுகளிடம் பொதுக் கருத்தை ஏற்படுத்த முயலலாம்" என்று பாகிஸ்தானின் உள்ளூர் செய்தித்தாளன "த எக்ஸ்பிரஸ் டிரைஃபன்" கருத்து வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: