ஜாகிர் நாயக்: இந்தியாவில் தேடப்படும் மத போதகரால் மலேசியாவில் கொந்தளிப்பு

ஜாகிர் நாயக் படத்தின் காப்புரிமை Anadolu Agency

ஜாகிர் நாயக். இந்தப் பெயர்தான் இன்று மலேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறுகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாக ஒட்டுமொத்த நாடும் இவரைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறது.

பல்லின மக்கள் வாழக்கூடிய மலேசியாவில், ஒரு தனி மனிதரால், அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரது பேச்சால் கொந்தளிப்பான சூழல் ஏற்படும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தற்போது ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவர் இனிமேலும் இங்கு தங்கி இருந்தால், மலேசிய நாட்டில் மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு கேடு விளையும் என்பதே ஜாகிர் எதிர்ப்பாளர்களின் வாதம்.

யார் இந்த ஜாகிர் நாயக்... அவர் அப்படியென்ன பேசிவிட்டார்...?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இந்த ஜாகிர். இவர் ஒரு மத போதகர். பண பரிமாற்றம் தொடர்பில் 115 மில்லியன் ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை இந்தியாவில் எதிர்நோக்கி உள்ளார் என மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவில் மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட அவர் வந்ததாகக் கூறப்பட்டது. இந்தியாவில் அவர் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக தகவல் வெளியான பிறகு அவர் ஊடகங்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

Image caption மோகன் ஷான்

ஜாகிர் கூறியதாக வெளியான கருத்துகள் குறித்து துவக்கத்தில் எந்தவித சலசலப்பும் எதிர்ப்பும் எழவில்லை. நாட்களின் போக்கில் நிலைமை மாறியது.

இந்நிலையில் அண்மையில் கிளந்தான் என்ற மாநிலத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாக சில கருத்துகள் வெளியாகின. இது தொடர்பான காணொளிப் பதிவு வெளியானதும் சர்ச்சையும் வெடித்தது.

"மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூதாயத்தினரைவிட நூறு மடங்கு நன்றாக உள்ளனர். அதே வேளையில் மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோதியை ஆதரிக்கின்றனர்," என்று ஜாகிர் நாயக் தமது உரையில் குறிப்பிட்டார் என்பதே தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு மூலாதாரம்.

எந்த ஆய்வின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது. அவரது பேச்சு மத, இன நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காதா? என்றும் எதிர்பார்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியா போன்ற நட்பு நாட்டில் தேடப்படும் ஒரு நபரை இவ்வாறு சுதந்திரமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேச அனுமதிப்பது சரிதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜாகிர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா-மலேசியா இடையேயான நல்லுறவு பாதிக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கேள்விகளுக்குப் பதில் அளித்த மலேசிய பிரதமர்

இந்தக் கேள்விகளுக்கு மலேசிய பிரதமர் டாக்டர் துன் மகாதீரே பதிலளித்துள்ளார். இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஜாகிர் நாயக்கை (இந்தியாவுக்கு) திருப்பி அனுப்ப முடியாது, ஏனெனில் அவர் அங்கு கொல்லப்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவர் இங்கேதான் (மலேசியாவில்) இருப்பார்" என்று பிரதமர் மகாதீர் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை VCG
Image caption பிரதமர் மகாதீர்

அதே சமயம் ஜாகிர் நாயக்கால் மலேசிய அரசுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் மறுக்கவில்லை.

"மலேசியாவில் பல்லின மக்கள் வாழும் சூழ்நிலையில், இன உறவுகள் மற்றும் பிற மதங்களைப் பற்றி தீவிர கருத்துகளை வெளிப்படுத்தும் எவரையும் இந்நாடு விரும்பவில்லை," என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இந்தக் காரணத்திற்காக மலேசியா ஜாகிரை இங்கு வைத்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அதே வேளையில், பல நாடுகள் ஜாகிரை வைத்திருக்க விரும்பாததால் அவரை வெளியேற்ற இயலவில்லை என்றும் கூறுகிறார்.

இதற்கிடையே தாம் கூறியதை சில இந்து மதக் குழுக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக ஜாகிர் நாயக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது எதிர்ப்பாளர்கள் தாம் கூறிய சில கருத்துகளை அரசியலாக்குவதாகவும், மலேசியர்கள் மத்தியில் நிலவும் மத ஒற்றுமையை அவர்கள்தான் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

"எனக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு குறியீடு கொண்ட எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எதையும் வெளியிடவில்லை. எனக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், சில இந்துக் குழுக்கள் தான் மோதி அரசாங்கத்திடம் என்னை ஒப்படைக்க வேண்டும் என்கின்றன. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன," என்கிறார் ஜாகிர் நாயக்.

"ஒரு மத போதகர் யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது"

மலேசிய இந்தியர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஜாகிர் நாயக்கிற்கு எந்தவித அருகதையும் இல்லை என்றும், அவரது பேச்சு கண்டித்தக்கது என்றும் கூறுகிறார் மலேசியாவில் வெளியாகும் தமிழ் மலர் நாளேட்டின் நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமி.

ஜாகிர் தெரிவித்த கருத்துக்காகவே அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் பெரியசாமி வலியுறுத்தி உள்ளார்.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

"இந்தியர்கள் காடு, மலையாக இருந்த மலைநாட்டை சமப்படுத்தி மலேசியாவை உருவாக்கிய உழைக்கும் சமூகம். 120 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து சஞ்சிக் கூலிகளாக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைகள் இங்குள்ளனர். அப்படிப்பட்டவர்களின் விசுவாசம் குறித்து ஜாகிர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் பெரியசாமி.

ஜாகிரை மலாய் சமுதாயத்தினரும் ண்டித்துள்ளதாகச் சுட்டிக்காட்டும் அவர், மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கூட ஜாகிரை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியிருப்பதை வரவேற்பதாகச் சொல்கிறார்.

ஜாகிர் கருத்தால் கொதி நிலையை எட்டிப் பிடித்த விவகாரம்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் தனது கருத்துகளை ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார் தற்போது மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக்.

மேலும், தாம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டிராத சீனர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர் கூறியதாக மற்றொரு செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மலேசியாவுக்கு தாம் விருந்தினராக வருவதற்கு முன்பே சீனர்களும் இந்தியர்களும் அங்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஜாகிர், புதிய விருந்தினரான தாம் வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் எனில், பழைய விருந்தினர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதும் தான் இந்த விவகாரம் கொதிநிலையை எட்டிப் பிடித்தது.

படத்தின் காப்புரிமை Hindustan Times

மலேசியா, இஸ்லாமிய நாடாக முழுமையாக மாறிய பிறகே சீனர்களும் இந்தியர்களும் வந்து சேர்ந்ததாக ஜாகிர் சுட்டிக் காட்டியுள்ளார்.

'துன் மகாதீர் யாருக்கு பிரதமர் என்பதை தீர்மானிக்கட்டும்'

இந்நிலையில் ஜாகிர் நாயக் வரம்பு மீறிப் பேசியுள்ளதாக வழக்கறிஞரும், மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியகத்தின் தலைவருமான சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார். எனவே ஜாகிர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

"ஜாகிர் நாயக்கை பொறுத்தவரை மலேசியாவில் நிரந்தரமாக தங்கும் உரிமையை மட்டுமே பெற்றுள்ளார். மாறாக அவர் மலேசிய குடியுரிமை பெற்றவர் அல்ல. எனவே மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் பற்றியோ, சீன வம்சாவளியினர் குறித்தோ பேசுவதற்கு அவருக்கு உரிமையோ அனுமதியோ கிடையாது.

"அவர் சரியாக செயல்பட்டால், நடந்து கொண்டால் மலேசியாவில் இருக்கலாம் என்று பிரதமர் மகாதீர் முன்பு கூறியிருந்தார். ஆனால் சர்ச்சையைக் கிளப்பியது மூலம் தாம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை ஜாகிர் நாயக்கே நிரூபித்துவிட்டார்.

"கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் முறைகேடாக நிரந்தர தங்கும் உரிமையைப் பெற்றுள்ளார். எனினும் அவர் மலேசியாவில் தங்கலாம், சாப்பிடலாம், தூங்கலாம், அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளலாமே தவிர, மலேசியர்களைப் பார்த்து கேள்விகளை எழுப்ப முடியாது. நாங்கள் சார்ந்துள்ள மதம், மார்க்கம் குறித்து பேச எந்த உரிமையும் அவருக்கு கிடையாது.

"அவர் வரம்பு மீறி போய்விட்டதால், உள்துறை அமைச்சு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது நிரந்தர தங்கும் உரிமையைப் பறிக்க வேண்டும். நாடு தழுவிய அளவில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"எனவே துன் மகாதீர் மலேசிய மக்களுக்கு பிரதமரா? அல்லது ஜாகிர் நாயக்கிற்கு மட்டுமே பிரதமரா? என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும்," என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.

ஜாகிருக்கு எதிராக திரும்பிய இந்திய அமைச்சர்கள்

இதற்கிடையே, மலேசிய அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நான்கு அமைச்சர்களுக்கும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. ஜாகிர் விவகாரத்தில் அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இவர்களும் ஆதரித்துள்ளனர்.

மலேசிய இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

(கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இந்து ஆலயங்கள் தொடர்ந்து இடிக்கப்படுவதாக புகார் எழுந்த போது, ஆலயங்களைக் காக்கும் பொருட்டு ஹிண்ட்ராஃப் அமைப்பு உருவானது. அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராக லண்டனில் இருந்தபடியே செயல்பட்டவர் இவர்.)

ஜாகிர் நாயக்கின் பல உரைகள் காரணமாக முஸ்லிம் அல்லாத சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களாக உணர்ச்சிகரமான உணர்வுகள் நிலவியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜாகிர் மீண்டும் மற்ற மதங்கள், அவர்களின் நம்பிக்கைகள் குறித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Anadolu Agency

"பெரும்பாலான மலேசியர்கள் தங்கள் இனம் மற்றும் மதத்தை பாதுகாப்பதாக நான் கருதுகிறேன். இது நமது நாட்டின் பல்லின மற்றும் மத சமூக உணர்வுகளை அழிக்கக்கூடிய எல்லைகளை கடப்பதன் மூலம் சங்கடத்தை உருவாக்கிவிடும்," என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிரின் கருத்துகளால் நாட்டில் மோதல் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை நியாயமாக விசாரணை நடத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பொன்.வேதமூர்த்தி.

தற்போது மலேசியாவில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளும் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ (சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்) மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன் ஆகிய இருவரும் இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தங்களது நிலைப்பாட்டை பிரதமரிடம் வெளிப்படுத்தி இருப்பதாகவும், தங்களது கவலைகளை பிரதமர் கவனத்தில் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை ROBERTUS PUDYANTO/GETTY IMAGES

"மலேசியாவில் இஸ்லாமியர்களுக்கும், பிற மதத்தவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தக் கூடிய, தேசத்துரோக அறிக்கைகளை வெளியிடும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை," என்று காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார் நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் .

இளம் மலாய் அமைச்சரின் அதிரடி

இந்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, சீனர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளும் ஜாகிர் நாயக்குக்கு எதிராக வரிந்துகட்டி உள்ளன.

எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மசீச (மலேசிய சீனர்கள் சங்கம்) ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதை ஆதரித்துள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாதிக் வெளியிட்ட அறிக்கை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பிரதமரே ஜாகிருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், அந்த மத போதகரை வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் இளம் அமைச்சரான சைட் சாதிக்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீனர்கள், இந்தியர்களை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times

"சீன மற்றும் இந்திய சகோதரர்கள் மீதான தாக்குதல்களை ஒட்டுமொத்த மலேசியர்கள் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும். மலேசியர்களை விருந்தினர்கள் என்று குறிப்பிடுவது அபத்தம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் வலிமை என்பது, நாட்டு மக்களின் ஒற்றுமையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சைட் சாதிக், இம்மக்களின் விசுவாசத்தை குறைத்து மதிப்பிட்டது போதும் என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் அமைச்சர் ராயிஸ் யாத்திம் ஆதரித்துள்ளார்.

ஜாகிர் விவகாரத்தால் இந்தியா, மலேசியா இடையே உறவில் விரிசல் ஏற்படலாம், ராஜ தந்திர ரீதியில் சங்கடம் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நீதித் துறை விசாரணை மிக நியாயமான ஒன்று - இந்திய வெளியுறவுத் துறை

"ஜாகிர் நாயக்கிற்கு நியாயமான நீதி விசாரணை கிடைக்காது எனக் கருதினால் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுக்கும் உரிமை மலேசியாவுக்கு இருக்கிறது," என மலேசிய பிரதமர் மகாதீர் சில தினங்களுக்கு முன்னர் திட்டவட்டமாகக் கூறினார்.

அவர் இவ்வாறு அறிவித்த இரண்டே நாட்களில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பத்தைச் மலேசிய அரசிடம் சமர்ப்பித்தது இந்திய அரசு.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்த விவகாரத்தை மலேசியாவுடன் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். பல நாடுகளுடன் நாங்கள் நாடுகடத்தும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளோம். அதன்படி வெற்றிகரமாக பலரை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தியாவின் நீதித் துறை விசாரணை மிக நியாயமான ஒன்று என்பதை அனைத்துலகம் அறியும்," என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்ததாகவும், மலேசிய ஊடகங்களில் முன்பே ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

மலேசியாவின் ஒற்றுமை உணர்வுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் ஜாகிர் : மலேசிய இந்து சங்கம்

இன மோதலை உண்டாக்கும் நோக்கத்திலேயே ஜாகிர் நாயக் பேசி வருவதாக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் மீண்டும் பிரதமர் ஆனதில் இந்தியர்களின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"ஜாகிர் தான் சார்ந்துள்ள மதத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திப் பேசட்டும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் மற்ற மதங்களைச் சிறுமைப்படுத்தி பேசுவது ஏற்க முடியாது.

"மலேசிய இந்தியர்கள், இந்துக்கள் இந்திய பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுவது தவறு. தாம் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்று இப்போது கூறுகிறார். ஆனால் அவர் பேசியது தொடர்பான காணொளிப் பதிவு வெளியாகி உள்ளது. அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், பிறகு மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. பிரச்சினை என்று வரும்போது அனைத்தையும் மாற்றிப் பேசுகிறார்கள்.

"ஜாகிரை அழைத்துப் பேச வேண்டும் என்று ஒருசிலர் கூறுவதை நான் ஏற்கவில்லை. அவருடன் எவ்வளவு பேசினாலும் அவரது போக்கு மாறாது. இந்நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்கிறார்கள். ஆனால் அந்த ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒருவரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேட்கிறார் மோகன் ஷான்.

"இரு பிரதமர்களின் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ள ஜாகிர் தவறிவிட்டார்."

மலேசியாவின் இன, மத நல்லிணக்கத்தை ஜாகிர் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் முத்தரசன்.

ஜாகிரின் செயல்பாடு தேன்கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

"ஜாகிர் நாயக் மலேசியாவின் இரண்டு பிரதமர்களின் ஆதரவைப் பெற்றவர். முன்னாள் பிரதமர் நஜீப், இந்நாள் பிரதமர் மகாதீர் இருவருமே அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். துன் மகாதீர் ஒருபடி மேலே சென்று, அவரை இந்நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்று அறிவித்துள்ளார்.

"இவ்வாறு பிரதமர், அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ள ஜாகிர், அதை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். மலேசியாவின் இன, மத நல்லிணக்கத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. அன்று தொட்டு இன்று வரை மலேசியர்கள் இடையே உள்ள புரிந்துணர்வு, ஒற்றுமை அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். அது புரிந்திருந்தால் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்க மாட்டார்.

மலேசிய இந்தியர்கள் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்திய பிரதமர் மோடியை அதிகமாக ஆதரிப்பதாக கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற மலேசிய பொதுத் தேர்தலில் பெரும்பாலான இந்தியர்களின் ஆதரவுடன் தான் மகாதீர் வெற்றி பெற்று இன்று பிரதமராகவும் இருக்கிறார். அதை ஜாகிர் மறந்துவிட்டார் போலும்.

"மலேசிய இந்தியர்களின் விசுவாசம் குறித்து ஜாகிர் எழுப்பியுள்ள கேள்வி கோபத்தை ஏற்படுத்தவே செய்யும். மலேசியாவின் முதல் கடற்படை தளபதி தனபால சிங்கம் ஓர் இந்தியர் என்பது தான் வரலாறு.

"மலேசிய ராணுவத்திலும், காவல்துறையிலும் பணியாற்றிய பல இந்தியர்கள் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்துள்ளனர். இந்த வரலாறு புரியாமல் ஜாகிர் பேசியதால் தான் பலர் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை TIM GRAHAM

"இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர்களையும் வம்புக்கு இழுத்துவிட்டார். இதனால் தேன்கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிட்டது. மலாய்க்கார சகோதரர்களும் அவருக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

"இன, மத, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டே இன்றைய மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக் கூறுகளையே தகர்த்தெறியும் வகையில் ஜாகிர் செயல்பட்டது தான் பிரச்சனை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுக்க காரணம்," என்கிறார் அரசியல் ஆய்வாளர் முத்தரசன்.

மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?

இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை ஜாகிர் நாயக்கை இன்று வரை சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று கடந்த ஜூலை மாதமே சுட்டிக்காட்டி உள்ளார் மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களின்படி ஜாகிர் நாயக் இன்னும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

ஜாகிர் நாயக்கிற்கு எந்தவித சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும், அவர் மலேசியாவிற்கு சட்டப்பூர்வமாகவே வந்தார் என்றும், சட்டபூர்வமாகவே மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் என்றும் மொகிதின் யாசின் தெளிவுபடுத்தியிருந்தார்.

என்ன தான் ஜாகிருக்கு ஆதரவாக மலேசிய பிரதமரும் உள்துறை அமைச்சரும் இவ்வாறு தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவர்களது முடிவு மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்