இந்திய சுதந்திர தினம் - லண்டனில் ஒருபுறம் கொண்டாட்டம், மறுபுறம் போராட்டம்

இந்தியா காஷ்மீர் படத்தின் காப்புரிமை TOLGA AKMEN

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் பரவலாக வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, லண்டனில் கொண்டாட்டம் மட்டுமின்றி, போராட்டமும் நடைபெற்றது.

லண்டன் நகரின் இந்தியா பிளேஸ் பகுதியிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்புறம் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் காலை முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதே வீதியின் மறுபுறம் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தியாவுக்கு எதிரான பதாகைகளுடன், முழக்கங்களையும் வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்தியாவின் நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கப்பட்டு, அதை குறைந்த அதிகாரங்களை கொண்ட இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு அறிவித்ததை எதிர்த்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை Reuters

ஒருபுறம் இந்தியாவின் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பிறகு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "இந்நாள் எங்களுக்கு கருப்பு தினம்" என்று குறிப்பிடும் வகையிலான அட்டைகளையும், கொடிகளையும் பிடித்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் மற்றும் காஷ்மீரின் கொடிகளை ஏந்தியிருந்ததாகவும், இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடியவர்கள் குழுமியிருந்த பக்கத்தை நோக்கி அவர்கள் முட்டை, உருளைக்கிழங்கு, கண்ணாடி பாட்டில்கள், ஆப்பிள்கள் போன்றவற்றை வீசியதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு தவறிவிட்டதாக கூறி லண்டன் நகர மேயர் சாதிக் கானை விமர்சித்து பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.

ஆனால், காஷ்மீர் விவகாரம் பிரிட்டனை சேர்ந்த தெற்கு ஆசிரியர்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்ற கேள்வியை ரிஸ்ஸிடம் பிபிசி எழுப்பியது.

34 வயதாகும் ரிஸ் அலி இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காகவே பீட்டர்பரோ நகரிலிருந்து மூன்றரை மணிநேரம் பயணித்து லண்டனுக்கு வந்ததாகவும், தனது மூதாதையர்களின் பிறப்பிடமான காஷ்மீரில் நடக்கும் விடயங்கள் "வெறுக்கத்தக்கவை" என்றும் அவர் கூறுகிறார்.

"இது ஹிட்லர் செய்ததன் மற்றொரு பதிப்பு" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இருந்தபோதிலும், காஷ்மீர் விவகாரம், தனது தினசரி வாழ்க்கையையோ அல்லது இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரிட்டன் மக்களுடனான உறவிலோ எவ்வித பிரச்சனையையும் தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும், "நாங்கள் முஸ்லிம்கள். எங்களது மதம் அமைதியை சொல்லி கொடுக்கிறது" என்றும் ரிஸ் அலி கூறுகிறார்.

Image caption ரசாக் ராஜ்

பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை பூர்விகமாக பெற்றோருக்கு பிறந்த பிரிட்டனை சேர்ந்த விரிவுரையாளரான ரசாக் ராஜ், தான் எப்போதுமே இந்திய தயாரிப்புகளை வாங்க மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார்.

"நாம் அனைவரும் ஆசிய பாரம்பரியத்தை பின்புலமாக கொண்டவர்கள். மற்ற நாட்டினரை போன்றே இந்தியர்களையும் நான் மதிக்கிறேன். பிரச்சனை அந்நாட்டு அரசுடனே தவிர, மக்களிடம் அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: