துபாய்: சட்டம், மனித உரிமைகளில் உண்மை முகம் என்ன?

துபாய்: சட்டம், மனித உரிமைகளில் உண்மை முகம் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு துபாய்க்குச் செல்ல வேண்டும் என்றொரு ஆசையும் இருக்கக்கூடும்.

நன்றாக ஷாப்பிங் செய்யலாம். விடுமுறையை கழிக்கலாம்

மின்னொளி மின்னும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை ரசிக்கலாம் என பலர் எண்ணுவர்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி துபாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன.

பணம்

துபாய் எண்ணெய் வளம் மிக்க ஒரு நாடு என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது.

துபாயின் ஜிடிபியில் 5% மட்டும்தான் எண்ணெய் வளத்தின் பங்கு.

துபாய் எரிவாயு மூலமாகவும் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் துபாயின் வெற்றிக்கு பின் இருப்பது ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, வர்த்தகம்,வங்கி மற்றும் நிதி முதலீடுகள்தான்.

துபாயின் பொருளாதாரம் திடுமென வளர்வதற்கு முன்னால் அங்கே துறைமுகம் மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்று பிரமிக்கத்தக்க கட்டடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 200 வானளாவிய கட்டடங்கள் இருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய கட்டடம் இங்கு தான் இருக்கிறது. 830 மீட்டர் உயரம் கொண்டது புர்ஜ் கலிஃபா.

ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் உண்மையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் துபாயை ஆட்சி செய்த ஷேய்க் ரஷீத் அல் மக்டூம். சில நாடுகளுக்கு விமானத்தில் செல்பவர்கள் துபாயில் இறங்கி விமானம் மாறி செல்லவேண்டியிருந்தது. அப்போது பயணிகள் துபை விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருப்பர். ஆனால் வெறும் transit stop ஆக மட்டும் துபாய், இருந்த நிலையை மாற்றி துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பிற நாட்டு மக்களுக்கு ஆர்வம் ஏற்படும் வண்ணம் தனது நாட்டை மாற்றிக்காட்டினார்.

தற்போது துபாயை ஆளும் அவரது மகன், நாட்டின் மேம்பாட்டை முடுக்கிவிட்டிருக்கிறார்.

சட்டங்கள்

துபாயில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக இருக்கும் ஒரு பொய்யான பிம்பத்தை நம்பி மக்கள் செல்கிறார்கள். அங்கு கடற்கரைகள், மதுபான விடுதி இருக்கும். இரவு நேர மது விடுதியில் தாராளமாக ஆல்கஹால் அருந்தலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் துபாயில் இன்னமும் சட்டங்கள் சற்று கடுமையாகவும் பழைமையானதாகவும் உள்ளன. கருத்து சுதந்திரம் அறவே இல்லை. அரசுக்கு எதிராக நீங்கள் எதுவுமே கூற முடியாது.

நீங்கள் போடும் ஒரு ட்வீட் அவர்களுக்கு பிடிக்கவில்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். துபாய் குறித்த பொய் பிம்பங்களை நம்பி மேற்குலக மக்கள் அங்கே சுற்றுப்பயணம் செல்லும்போது சுதந்திரமாக செயல்பட முனைந்து சிக்கலில் மாட்டிய கதைகள் நிறைய உண்டு.

எப்படி என்கிறீர்களா? பொது இடத்தில் மதுபானம் அருந்தியதற்காக, எதிர்பாலினத்தவரை பொது இடங்களில் கட்டியணைத்து முத்தமிட்டதற்காகவெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தபோது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஐந்து மாதங்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமைகள்

துபாயின் உண்மை முகத்திற்கும் அது எப்படி பிறரால் பார்க்கப்படுகிறது என்பதற்கும் முரண் உள்ளது.

துபாய் மட்டுமல்ல அரபு தீபகற்பத்தில் உள்ள ஒரு மிக முக்கிய சர்ச்சைக்குரிய விவகாரம் சொற்ப சம்பளத்துக்கு வேலையாட்கள் அமர்த்தப்படுவதே.

வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியமர்த்துகிறார்கள். தெற்காசியாவில் இருந்துதான் இங்கே பெரும்பாலானவர்கள் வேலைக்கு வருகிறார்கள்.

அடிக்கடி அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிக மோசமான சூழலில் பலர் சிக்கியது குறித்து பல ஆவணங்கள் உள்ளன. ஆகவே அரபு அமீரகத்தில் சட்டங்கள் கடுமையானவை ஆனால் நடைமுறையில் சட்டங்கள் பெரும்பாலும் மீறப்படுகின்றன.

எதிர்காலம்

உலக அளவில் மனித மேம்பாடு, கண்டுபிடிப்புகள், பசுமை சார்ந்த உயிரி தொழில்நுட்பம், மின்னணுவியல், பயணம், விமான போக்குவரத்து உள்ளிட்டவற்றில் மிக முக்கிய பங்கை வகிக்கக்கூடிய நாடு இது.

சில சமயங்களில் அதிகப்படியான வளர்ச்சியை எட்ட முனைகிறது. ரியல் எஸ்டேட் துறையை பொருத்தவரை பல கட்டடங்கள் இன்னும் பாதி கட்டப்பட்ட நிலையில் அப்படியே விடப்பட்டு கிடக்கின்றன.

துபாய் சில துணிவான முயற்சிகளை எடுக்கிறது. துபாயின் துணிச்சலுக்கு உரிய வெற்றி கிடைக்கிறது என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :