இம்ரான் கான்: பாகிஸ்தானின் கடினமான உண்மைகளை எதிர்கொண்ட ஓராண்டு காலம்

இம்ரான் கான் படத்தின் காப்புரிமை Getty Images

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு காலம் ஆகிறது.

இம்ரான் கான் 2018 தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று சிலர் நினைத்திருந்தனர். இருபது ஆண்டு காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவருக்கு வெற்றி கிடைத்தது. போராட்டத்தின் பெரும் பகுதி அரசியலில் துறவுக் காலமாக இருந்தது.

ஆனாலும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளி அவர் அரசியலில் நீடித்து நின்றார். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானை அவ்வப்போது ஆட்சி செய்து வந்த ராணுவம், இம்ரானின் பி.டி.ஐ. அரசியல் கட்சிக்கு ஆதரவாக திரைமறைவில் தலையீடுகள் செய்து வந்தது.

இந்தப் பின்னணியிலும், பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள அடுக்கடுக்கான சவால்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இம்ரானின் முதலாவது ஆண்டு ஆட்சிக் காலம் அமைதியாக அமைந்திருக்கிறது என்று தெரிகிறது. அவர் உலகிற்கு ஒரு முகத்தைக் காட்டுகிறார், பாகிஸ்தானுக்குள் வேறு முகத்தைக் காட்டுகிறார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அவர் என்ன செய்திருக்கிறார்?

பொருளாதாரம்

பிரபலத்துவத்தை மையமாகக் கொண்டும், ஊழல் எதிர்ப்பு என்ற முழக்கத்துடனும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், ``புதிய பாகிஸ்தானை'' உருவாக்கப் போவதாக தன் ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான் கான் உறுதி அளித்தார். ஏறத்தாழ ஒபாமாவை போல அவர் ``டப்டீலி'' (மாற்றம்) ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

கடன்களை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பொருளாதாரத்தைக் காப்பாற்றுவது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

முதல் எட்டு மாதங்களுக்குள், நீண்டகால நட்பு நாடான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் சீனா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, பொருளாதாரத்தைக் காப்பாற்ற 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன்களைப் பெற்றார். ஆனால், நெருக்கடி தீரவில்லை, வளர்ச்சியின் வேகம் குறைவாகவே இருந்தது, ரூபாயின் மதிப்பு சரிந்தது, பணவீக்கம் 10 சதவீதத்தைத் தாண்டியது,2013க்குப் பிறகு முதல் முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டது.

பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்.) உதவி கேட்பதைவிட நான் செத்துவிடுவேன் என்ற தனது தேர்தல் வாக்குறுதியில் இருந்து இம்ரான் கான் முற்றிலும் மாறுபட வேண்டியதாயிற்று.

ஜூலை மாதம் பன்னாட்டு நிதியத்துடன் 6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. 1980களில் இருந்து பன்னாட்டு நிதியம் பாகிஸ்தானுக்கு அளிக்கும் 13வது பொருளாதார மீட்புத் திட்டம் இது.

கொள்கை திட்டமிடலில் உள்ள குறைபாடு தான் இம்ரான் அரசின் மோசமான பொருளாதார செயல்பாட்டுக்கு மிகப் பெரிய காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பிரைட் ஸ்டோன்பிரிட்ஜ் குழுமத்தின் தெற்காசிய செய்தியாளர் உஜயர் யூனுஸ் கூறியுள்ளார்.

``அவர்கள் உயர்ந்த எதிர்பார்ப்புடன் வரி வருவாய் இலக்குகள் நிர்ணயித்தார்கள். ஆனால், அந்த இலக்குகளை எட்ட முடியாமல் போகும் தருணத்தில், ஒட்டுமொத்த திட்டங்களும் பாதிக்கப்படும்'' என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் ``எங்கள் பணியைச் செய்து வருகிறோம்' என்று பாகிஸ்தான் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் பவத் சவுத்ரி பிபிசி செய்தியாளரிடம் கூறினார்.

``பொருளாதார விஷயங்களைக் கவனிக்க நாங்கள் ஒரு குழு அமைத்துள்ளோம். அடுத்த தேர்தல், நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் தான் நடக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

இம்ரான் கட்சியின் பெரிய பலமாக இருக்கும் நடுத்தர வர்க்க வாக்காளர்களுக்கு சிறிதளவு நிவாரணத்தை அளிக்கும் வகையில் பொருளாதார சூழ்நிலைகள் மாறியுள்ளன என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

இம்ரான் அரசு பதவிக்கு வந்த போது அளித்த 34 வாக்குறுதிகளில் இதுவரை மூன்று வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளன என்று பிபிசி உருது ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய இ-விசா திட்டத்தை முக்கியமான சாதனை என்று அதை மட்டும் குறிப்பிடுகிறார் திரு. சவுத்ரி.

ராஜதந்திரம்

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொலைக்காட்சியில் முதன்முதலாக ஆற்றிய உரையில், ``இந்தியா எங்களை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவர்களை நோக்கி நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம்'' என்று கூறி பரம-விரோதியாகக் கருதப்படும் பக்கத்து நாட்டுக்கு நேசக் கரம் நீட்டினார் இம்ரான் கான்.

அதை நிரூபிக்கும் வகையில், கர்ட்டார்பூர் நெடுஞ்சாலையை மேம்படுத்த விரைவில் அவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபூர்வமான ஒத்துழைப்பின் அம்சமாக அது கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து வரும் சீக்கிய யாத்ரிகர்கள் பாகிஸ்தானில் ஒரு புனிதத் தலத்தை தரிசிக்க வசதி கிடைக்கும்.

ஆனால் சமரச வார்த்தைகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்கள் நடத்துவதாகக் கூறி அவற்றைக் குறி வைத்து பிப்ரவரி மாதம் இந்தியா விமானத் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் போர்ச் சூழல் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் காஷ்மீர் அகதிகள் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிறகு இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, அதன் பைலட்டை கைது செய்தது. அதனால் பதற்றம் அதிகரித்தது. ஆனால் 48 மணி நேரம் கழித்து, சமரசத்தின் முன்முயற்சியாக அந்த பைலட்டை விடுதலை செய்ய இம்ரான் கான் முடிவு செய்தார். அதற்குப் பாராட்டுகள் கிடைத்தன. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியுடன் ராஜிய உறவில் அவர் முன்னிலை பெற்றார்.

ஆண்டின் பிற்பகுதியில், அனைவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பாகிஸ்தான் தலைவர் ரஷிய அதிபர் புதினுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கிர்கிஸ்தானில் பிஷ்கேக் -ல் இருவரும் சந்தித்துப் பேசினர்.

பின்னர் ஜூலை மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். ``நல்ல அதலெட்டிக் வீரர் மற்றும் மிகவும் பிரபலமானவர்'' என்று இம்ரான் பற்றி ட்ரம்ப் அப்போது குறிப்பிட்டார். வாஷிங்டனில் இருந்தபோது நாடாளுமன்றத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அனைத்து நல்ல விஷயங்களும் முயற்சிக்கப் படுவதாக அப்போது அவர் கூறினார்.

``நல்ல அதலெட்டிக் வீரர் மற்றும் மிகவும் பிரபலமானவர்'' என்று இம்ரான் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.

ஆனால் இம்ரானின் வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பயன்கள் கிடைத்தன என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

``பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்பு பாராட்டி, உதவிகளை மீண்டும் அளிக்குமா?'' என்று கேட்கிறார் அரசியல் நிபுணர் சுஹைல் வார்ரெய்ச். ``பாகிஸ்தான் குறித்து ரஷியாவின் நடவடிக்கைகள் கொள்கை அளவில் மாறுமா? இந்தச் சந்திப்புகள் மூலம் குறிப்பிடும்படி என்ன கிடைத்திருக்கிறது?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாயகத்தில் கடும் நடவடிக்கை

வளர்ச்சியை விரும்பும், பாசத்துக்குரியவராக தம்மையும் நாட்டையும் வெளிநாட்டுப் பயணங்களில் இம்ரான் கான் முன்னிறுத்திக் கொள்கிறார். இருந்தாலும் அரசியல் ரீதியில் வேறு வகையில் மக்கள் அவரைப் பார்க்கிறார்கள்.

சொற்பொழிவுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் முந்தைய அரசுகள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் இம்ரான் கான். முந்தைய அரசுகள் ஊழல்களில் ஈடுபட்டு, நாட்டை அழிவின் விளிம்புக்குக் கொண்டு வந்துவிட்டதாகப் பேசுகிறார்.

கடைசி கணக்கின்படி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் குறைந்தது 13 பேர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மர்யம் நவாஸ், முன்னாள் அதிபர் ஆசிப் ஜர்தாரி ஆகியோரும் இதில் அடங்குவர்.

முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்கள்.

எதிராளிகள் மீது அடக்குமுறை நடவடிக்கை எடுப்பதாக இம்ரான் அரசு மீது குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான வழக்குகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ``பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் இல்லை'' என்கிறார் திரு. சவுத்ரி.

படத்தின் காப்புரிமை Getty Images

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பிறகு, பேச்சுரிமைக்கு எதிராகவும், எதிர்கருத்து கூறுவோருக்கு எதிராகவும் அச்சுறுத்தலான நடவடிக்கைகள் நயவஞ்சகமாக எடுக்கப் படுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ரிப்போர்டர்ஸ் சான்ஸ் பார்டர்ஸ் அமைப்பின் பத்திரிகை சுதந்திரத்துக்கான குழுவினர் ``பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் அச்சப்படும் அளவுக்கு குறைந்து வருகிறது'' என்று புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்ரான் கானை அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நீதியாளர்கள் கமிஷனுடன் தொடர்புள்ள வழக்கறிஞர் ரீமா உமர் என்பவர், கடுமையான விமர்சகர்களே அஞ்சும் அளவுக்கு அரசு அதிக அடக்குமுறைகளை ஏவி விடுகிறது என்று கூறியுள்ளார்.

``எதை செய்தியாக்கலாம், எதை செய்தியாக்கக் கூடாது என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ``சில விஷயங்களில் அரசின் செயல்பாடுகள்பற்றி கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்புகளே வேகமாகக் குறைந்து வருகின்றன'' என்கிறார் அவர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரமும், ஆதிக்கமும்

நீண்ட காலத்துக்கு முன்பு சுதந்திரவாதியாக தம்மைக் காட்டிக் கொண்ட இம்ரான் கான் இப்போது முழுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் நபராக மாறிவிட்டாரா என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் கொள்கை மற்றும் அரசு குறித்த ஸ்ச்சார் கல்லூரி பேராசிரியர் அஹ்சன் பட் கேள்வி எழுப்புகிறார்.

``இந்த நடவடிக்கைகள் முதன்மையாக ராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப் படுகின்றன. இம்ரான் கான் அதில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ பங்குதாரராக இருக்கிறார். அவற்றைத் தடுப்பதைவிட பார்வையாளராக இருக்கிறார்'' என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக சீரற்ற நிலை இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், யாருடைய நிர்வாகம் நடக்கிறது என்பது பற்றி கருத்து கூறுவதற்கு பலரும் தீவிர மவுனம் காட்டுகின்றனர். தலைமை ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவி பஜ்வா நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

``ராணுவத்தின் உதவி மற்றும் ஆசியுடன் தான் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கிறார். அதை அவர் அறிந்திருக்கிறார்'' என்று மேலாண்மை நிர்வாகம் குறித்த லாகூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமீன் மோஹ்சின் கூறுகிறார். ``அந்த வகையில் அவர்கள் ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். முடிவுகள் எடுப்பதில் இம்ரானுக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாக நான் கருதவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

தனது முதலாவது ஆண்டு ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கேள்விகள் இம்ரானுக்கு எதிராக எழுகின்றன - வரும் காலத்தில் விரைவில் இவற்றையெல்லாம் அவர் புறந்தள்ளுவதற்கு சிறிதளவே வாய்ப்புகள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: