செப்டம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும்

போரிஸ் ஜான்சன். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போரிஸ் ஜான்சன்.

பிரெக்ஸிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் எம்.பி.க்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கி சில நாள்களிலேயே நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும்.

நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசியின் உரை அக்டோபர் 14ம் தேதி இடம் பெறும் என்றும் அதில் தமது ஆச்சரியமளிக்கும் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடை செய்யும் (நோ டீல் பிரெக்ஸிட் ) சட்டம் ஒன்றை அக்டோபர் 31-ம் தேதி நிறைவேற்றுவதற்கு எம்.பி.க்களுக்குத் தேவைப்படும் காலம் இருக்காது.

இது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவைத்தலைவர் ஜான் பெர்கோ தெரிவித்துள்ளார்.

மரபுரீதியாக அரசியல் ரீதியான அறிவிப்புகள் குறித்து அவைத்தலைவர் விமர்சனங்கள் செய்வதில்லை என்றபோதும் இத்தகைய கருத்தை அவர் வெளியிட்டார்.

மேலும் இது குறித்துப் பேசிய ஜான் பெர்கோ,

"என்னவிதமான மேற்பூச்சுடன் வந்தாலும், நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதன் காரணம், இது பற்றி எம்.பி.க்கள் விவாதிக்காமல் தடுப்பதும், நாட்டின் போக்கை வடிவமைப்பதில் நாடாளுமன்றத்துக்குள்ள கடமையைத் தடுப்பதுமே ஆகும்".

நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தெரிவித்துள்ளார்.

"அடுத்த செவ்வாய்க்கிழமை ஹவுஸ் ஆப் காமன்ஸ் அவைக்கு எம்.பி.க்கள் திரும்பும்போது பிரதமர் செய்ய முயல்வதை தடுப்பதற்கு ஒரு சட்டம் கொண்டுவர முயல்வதுதான் முதல் வேலை " என்றும் கார்பின் தெரிவித்தார்.

ஆனால், போரிஸ் ஜான்சனுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது ஜெர்மி கார்பினுக்கு கடினமாக இருக்கும் என்று தெரிவித்த அவர், போரிஸ் போன்ற மனிதரைத்தான் பிரிட்டன் தேடிக்கொண்டிருந்தது என்று கூறியுள்ளார் டிரம்ப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்