டெக்சாஸில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: குறைந்தது ஐந்து பேர் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள்

(கோப்புப்படம்) படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப்படம்)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஒன்றன்பின்னொன்றாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அம்மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெக்சாஸின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய குறைந்தது ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து பேசிய டெக்சாஸ் மாகாண காவல்துறையின் செய்தித்தொடர்பாளர், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தது மற்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்ததை உறுதி செய்தார். இதில் காவல்துறையினரும் அடக்கம் என்று அவர் மேலும் கூறினார்.

டெக்சாஸின் எல் பாசோ நகரில் துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிகழ்வு நடந்தேறி சரியாக நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

யார் இந்த விஹாரி?

படத்தின் காப்புரிமை Getty Images

ஜமைகாவில் நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் ஹனுமா விஹாரி.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நேற்று இந்தியா 416 ரன்களை எடுத்தது. இதில் ஹனுமா விஹாரி தனது முதல் சதத்தை அடித்தார். இஷாந்த் ஷர்மா தனது முதல் அரை சதத்தை எடுத்தார்.

விஹாரி மற்றும் இஷாந்த் கூட்டாக 112 ரன்களை எடுத்திருந்தனர்.

அதன்பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்திருந்தது. பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதாகும் ஹனுமா விஹாரி. இவர் 2012ஆம் ஆண்டு ஐசிசியின் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் இங்கு பிறந்தவர்கள்; வேறு எங்கு செல்வோம்?"

படத்தின் காப்புரிமை Reuters

தனது கையில் ஒரு காகிதத்தை வைத்துகொண்டு 45 வயதான அப்துல் ஹலீம் மஜூம்தார் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்தில் இருந்து 4 பேரின் பெயர்கள் இன்று வெளியான தேசிய குடியுரிமை பதிவுப் பட்டியலில் (என்ஆர்சி) இல்லை.

அஸ்ஸாமிலுள்ள காம்ருப் மாவட்டத்தின் துக்டாபாடா கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள என்ஆர்சி மையத்தில், அதிர்ச்சியோடும், அச்சத்தோடும் இருந்த இவரை பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அவர் முன் கூடினர்.

நேற்று முன்தினம் இரவிலிருந்து தான் அனுபவித்த துன்பத்தை பற்றி அப்துல் திணறியபடி சொல்லத் தொடங்கினார்.

விரிவாக படிக்க:அஸ்ஸாம் என்ஆர்சி இறுதிப் பட்டியல்: "நாங்கள் இங்கு பிறந்தவர்கள். வேறு எங்கு செல்வோம்?"

"வங்கிகளை இணைத்தால் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா?"

படத்தின் காப்புரிமை Getty Images

பொதுத் துறை வங்கிகள் பலவற்றை இணைக்கும் முடிவை இந்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த இணைப்பிற்குக் காரணம் என்ன, வங்கிகளை இணைப்பதன் மூலம் அரசு என்ன செய்ய நினைக்கிறது, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஒரு பார்வை.

வங்கிகள் என்பவை கடன் கொடுத்து, வட்டி பெற்று லாபம் சம்பாதிப்பவை. ஆனால், இப்போது கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருந்தாலும் பெறும் நிலையில் யாரும் இல்லை. அந்த நிலை மாற வேண்டும்.

விரிவாக படிக்க: பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: காரணம், எதிர்பார்ப்புகள், விளைவுகள்

"எங்கள் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?"

படத்தின் காப்புரிமை Getty Images

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது தந்தையும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பது உள்ளிட்ட பவ்வேறு விஷயங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

என் தந்தையை கைது செய்ய ஏன் சுவர் ஏறி குதித்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கு தேவையே இல்லை. கதவை திறக்குமாறு கூறியிருந்தால், யாரேனும் கதவை திறந்திருப்பார்கள். என் தந்தை என்ன துப்பாக்கி, குண்டுகள் வைத்துக் கொண்டு பதுங்கியா இருந்தார்.

விரிவாக படிக்க:"எங்கள் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?”: கார்த்தி சிதம்பரம் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்