பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்தித்த இந்திய அதிகாரி

குல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. படத்தின் காப்புரிமை PAKISTAN FOREIGN MINISTRY
Image caption குல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. (கோப்புப் படம்)

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தூதர அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்:

"இந்திய உளவாளியும், பணியில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியும், இந்திய உளவு நிறுவனமான 'ரா' வுக்காக செயல்பட்டவருமான கமாண்டர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அதிகாரியான கௌரவ் அலுவாலியா, தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்துக்கு ஏற்பவும், சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்பவும், பாகிஸ்தான் சட்டங்களுக்கு ஏற்பவும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. 12 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு, பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னிலையில் 2 மணி நேரம் நீடித்தது. இந்திய வேண்டுகோளை ஏற்று, உரையாடல் மொழிக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மை மற்றும் திட்ட செயல்முறைகளுக்கு ஏற்பவும், முன்பே இந்தியத் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டபடியும், இந்த சந்திப்பு ரெக்கார்ட் செய்யப்பட்டது.

சர்வதேச சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினராக, சர்வதேசக் கடமைகளுக்கு ஏற்ப, தடையில்லாத, தடங்கலில்லாத முறையில் கமாண்டர் ஜாதவை அணுக தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்தது" என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் எதிர்வினை

தூதரக அதிகாரி குல்பூஷன் ஜாதவை சந்தித்தது தொடர்பாக ஊடகத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியவை:

படத்தின் காப்புரிமை Getty Images

"இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அலுவலர், குல்பூஷன் ஜாதவை சந்தித்தார். தூதரக உறவு தொடர்பான 1963-ம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பல வழிகளில் மீறியதாக ஜூலை 17-ம் தேதி சர்வதேச நீதிமன்றம் ஒரு மனதாக முடிவு செய்து, பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், பாகிஸ்தான் இந்த சந்திப்புக்கு அனுமதி அளித்தது.

விரிவான அறிக்கைக்கு காத்திருக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் கூறுகிற ஏற்க முடியாத கூற்றுகளுக்கு வலுவூட்டும் வகையில் பொய்யான பேச்சை வெளியிடவேண்டிய கடுமையான அழுத்தத்தில் ஜாதவ் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. தூதரக அதிகாரியிடம் இருந்து விரிவான அறிக்கை வந்த பிறகு, எந்த அளவுக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவு ஏற்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம். விசாரணை நாடகத்தில் ஜாதவுக்கு வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்பு மற்றும் தண்டனையை சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி சீராய்வு மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதை உறுதி செய்வதற்கு, தூதரக அதிகாரி சந்திப்பதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருந்த கட்டாயக் கடமையாகும். இன்று நடந்தவை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜாதவின் தாயிடம் விவரித்தார். ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைப்பதையும், அவர் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதையும் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பாடுபடுவதை அரசு கடமையாக கருதுகிறது" என்று ரவீஷ்குமார் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்