ஃபுகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க நீர் கடலுக்கு அனுப்பப்படுகிறதா? மற்றும் பிற செய்திகள்

ஃபுகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க நீர் கடலுக்கு அனுப்பப்படுகிறதா? படத்தின் காப்புரிமை Reuters

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த அசுத்தமான மற்றும் கதிரியக்க நீரை சேகரிக்கும் சேமிப்பு கிடங்கு நிரம்பி வருவதால், அந்த நீர் கடலுக்கு அனுப்பப்படலாம் என்று ஜப்பான் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உருகிய உலைகளை குளிரச்செய்ய பல மில்லியன் டன்களில் இந்த மிகப்பெரிய டாங்குகளில் இந்த கதிரியக்க நீர் சேமித்து வைக்கப்படுகிறது.

கதிரியக்க நீர் கடலுக்கு அனுப்பப்படுவதை ஜப்பானின் மீனவர் குழுக்கள் மிக தீவிரமாக எதிர்க்கின்றன. அதேவேளையில் இது மிகவும் குறைந்த அளவு ஆபத்தைத்தான் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என ஜப்பான் அரசு கூறுகிறது.

இதற்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதன்தொடர்ச்சியாக சுனாமி பேரலைகளிலும் சிதைவடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருட்கள் நீரில் வெளியேறுவதை தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

நச்சுப் பொருள் கலந்த நீர் நிலத்துடன் ஓரளவு கலந்திருக்கின்றபோதிலும், அருகிலுள்ள பசிபிக் சமுத்திரத்தில் கலந்திருக்க வாய்ப்பில்லை என்று ஃபுகுஷிமா அணுமின் நிலையம் அப்போது தெரிவித்தது.

'வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் மனநிலையும் காரணம்'- நிர்மலா சீதாராமன்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் அரசே 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் கூறியிருக்கிறார்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகளை விளக்குவதற்காக மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார். செய்தியாளர் சந்திப்பு துவங்கியவுடன் கடந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படத்தை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

காஷ்மீருக்கு சலுகைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, 2022க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை முக்கிய சாதனைகளாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:’வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் மனநிலை மாற்றமும் காரணம்’

ஆச்சி மசாலா: கேரள அரசு தடை விதித்தது உண்மையா?

கேரள மாநிலத்தின் திருச்சூரில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் தூளில் ஒரு பிரிவில் (batch) நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், அந்த பிரிவின் விற்பனைக்கு திருச்சூரில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் உணவு பாதுகாப்பு துறையின் உதவி ஆணையர் ஜெனார்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதனை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அந்த அலுவலக ஆய்வு அறிக்கைக்கு பின்னர்தான், அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆனால், ஆச்சி மசாலா பொருட்கள் மீது தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், காழ்புணர்ச்சியால் இந்த விடயம் பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங் ஐசக் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூக ஊடகங்களிலும் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க:கேரளாவில் ஆச்சி மசாலாவுக்கு தடையா? உண்மை என்ன?

காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும், இந்தியாவின் பதிலும்

படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெனிவா ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இந்திய ஒன்றிய அமைச்சர் ஜித்தேந்திர சிங், "பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் ஓர் இடத்திலிருந்து வரும் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து இவ்வுலகம் தெளிவாக இருக்கிறது" என்றார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் படிக்க:காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும், இந்தியாவின் பதிலும்

மியா கலிஃபா: நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாசக் காட்சியில் நடித்தேன்?

ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக்காட்சியில் நடிக்க சொன்னபோது, "அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன்" என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் சிரித்தார்கள். செய்ய மாட்டேன் என்று சொல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது என்கிறார் பிபிசி ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலிஃபா.

அவர் எவ்வாறு ஆபாசப்படத்துறைக்கு வந்தார், அவரது அனுபவங்கள், அதிலிருந்து வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க:நான் ஏன் ஹிஜாப் அணிந்து ஆபாசக் காட்சியில் நடித்தேன்? - பிபிசியிடம் பேசிய மியா கலிஃபா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :