ஜாகிர் நாயக் - பினாங்கு ராமசாமி இடையே வலுக்கும் மோதல் - “ஜாகிர் நாடு கடத்தப்பட வேண்டும்”

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி - மத போதகர் ஜாகிர் நாயக் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி - மத போதகர் ஜாகிர் நாயக்

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் குறித்து தான் தெரிவித்த கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மலேசிய போலிசார் அவரிடம் நடத்திய விரிவான விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதையடுத்து ஜாகிர் நாயக், ராமசாமி இடையேயான மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் மலேசியாவில் பங்கேற்ற கூட்டத்தில் பேசும்போது மலேசிய வாழ் இந்தியர்கள், சீனர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் கொடுத்த புகார்

இதையடுத்து அவரை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Anadolu Agency

ஜாகிர் நாயக் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளை அடுத்து, ராமசாமி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, மலேசிய மனித வளத் துறையின் அமைச்சர் குலசேகரன் உள்ளிட்ட நால்வர் மீதும் ஜாகிர் நாயக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் மலேசிய காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் பினாங்கு சென்று, ராமசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது.

பினாங்கு ராமசாமியிடம் 4 மணி நேரம் நீடித்த விசாரணை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, முன்பு ஜாகிர் நாயக் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

ஜாகிர் நாயக் இந்தியாவால் தேடப்படும் நபர் என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய ஒருவருக்கு மலேசிய அரசின் அதிகார அமைப்புகள் பாதுகாப்பு அளிப்பதாக போலிசிடம் தாம் தெரிவித்ததாகக் கூறினார்.

ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்றும், ஜாகிர் நாயக் நாடு திரும்பி தமக்கு எதிரான நீதி விசாரணையை எதிர்கொள்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் பேராசிரியர் ராமசாமி குறிப்பிட்டார்.

ஜாகிர் நாயக் தமது சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் உண்மையாக மன்னிப்பு கேட்கவில்லை என்றும் பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்து”

இதேபோல் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் முனியாண்டியிடமும் 3 மணி நேர விசாரணை நடைபெற்றது. இவர் ஜாகிர் நாயக் குறித்து பல பத்திரிகைகளில் கட்டுரை எழுதியவர். இருவரும் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக ஜாகிர் நாயக் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வேறொரு நாட்டைச் சேர்ந்த ஜாகிர் நாயக் தெரிவிக்கும் கருத்துகளால் மலேசியர்கள் மத்தியில் இன, மத நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள சதீஷ் முனியாண்டி, அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை காவல்துறையிடம் மீண்டும் வலியுறுத்தியதாக கூறினார்.

"தம்மை ஏற்றுக்கொள்ள 13 நாடுகள் தயாராக இருப்பதாக ஜாகிர் நாயக் பெருமையுடன் கூறுகிறார். எனவே, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் மலேசிய அரசு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், ஜாகிர் நாயக் குறிப்பிடும் 13 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க வேண்டும்," என்றும் சதீஷ் முனியாண்டி தெரிவித்ததாக மலேசிய ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் அளித்துள்ள புகாரின் பேரில், மலேசிய மத்திய அமைச்சர் குலசேகரன் உள்ளிட்ட மூவரிடம் அடுத்தடுத்து விசாரணை நடக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: