மாட்டு சாணத்தில் வெளியான நச்சுக்காற்று - இத்தாலியில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகள்

மாட்டு சாணத்தில் வெளியான நச்சுக்காற்று படத்தின் காப்புரிமை Getty Images

மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் இத்தாலியில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நால்வருமே பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள்.

இந்த சம்பவம் வடக்கு இத்தாலியில் உள்ள பாவியா எனும் இடத்துக்கு அருகில் நடந்துள்ளது.

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தில் இருந்து வெளியேறிய கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) அவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பிரேம் சிங், (48) மற்றும் தார்செம் சிங் (45) ஆகியோர் சம்பவம் நடந்த பண்ணனையின் உரிமையாளர்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

அவர்கள் 2017ஆம் ஆண்டு இந்தப் பண்ணையை வாங்கினார்கள். உயிரிழந்த மற்ற இருவரான அர்மிந்தர் சிங், (29) மற்றும் மஜிந்தர் சிங், (28) ஆகியோர் அங்கு பணியாற்றியவர்கள்.

உரம் உள்ள தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்களில் ஒருவர் உள்ளே விழுந்தபோது அவரை காப்பாற்றும் முயற்சியின்போது பிற மூவரும் இறந்திருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாவியா பகுதியில் உள்ள மிகப்பெரிய பண்ணைகளில் இந்தப் பண்ணையும் ஒன்று என இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி நடந்து வருகிறது.

இறந்தவர்களின் மனைவிகள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் படையினர் சடலங்களை மீட்டனர்.

இந்த ஆண்டு மட்டும் பணியிடங்களில் உண்டான விபத்தால் இத்தாலியில் 486 பேர் இறந்துள்ளனர்.

இந்தியர்கள் உயிரிழந்த இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள இத்தாலியின் வேளாண்மைத் துறை அமைச்சர் தெரேசா பெல்லனோவா பணியிடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

தனது பதின் வயதுகளில் தாமே வேளாண் தொழிலாளியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்