ஹம்சா பின் லேடன்: ஒசாமா பின் லேடன் மகன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஹம்சா பின்லேடன் படத்தின் காப்புரிமை CIA
Image caption ஹம்சா பின்லேடன்

அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

ஹம்சா பின் லேடன் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக உளவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் கடந்த மாதம் தெரிவித்தன.

தந்தை ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து, அல்-கய்தா அமைப்பின் தலைவராக இவர் வருவார் என்று நம்பப்பட்டது.

அல்-கய்தாவின் முக்கிய உறுப்பினரும், ஒசாமா பின் லேடனின் மகனுமான ஹம்சா பின் லேடன், ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்கா நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார்” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.

சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலிப்பதிவுகள் மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒசாமா பின் லேடன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஹம்சா பின் லேடனை தீவிரவாதி என்று அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

ரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட அறிக்கைகளில், ஹம்ஸா பின் லேடன் இறந்த இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.

2001ஆம் ஆண்டு நடந்த செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் இவர் இருந்ததாக அல்-கய்தா கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :