பாகிஸ்தான்: சர்ச்சையாகும் இந்து மாணவியின் மரணம் - நடந்தது என்ன?

மாணவி நிம்ரிதா படத்தின் காப்புரிமை VISHAL CHANDANI
Image caption மாணவி நிம்ரிதா

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் லார்கானா நகரில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இந்து மாணவி நிம்ரிதா கழுத்து நெரிபட்டு உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்து, நீதித்துறை விசாரணை கோரியுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின்படி, நிம்ரிதாவின் கழுத்து நெரிபட்ட அடையளங்கள் உள்ளன, ஆனால் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

நிம்ரிதா லார்கானாவில் உள்ள பெனாசிர் பூட்டோ மருத்துவ பல்கலைக்கழகத்தின், ஆசிஃபா பிபி பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மாணவி. அவரது சடலம் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த விடுதி அறை எண் 3இல் இருந்து மீட்கப்பட்டது.

லர்கானாவின் எஸ்.எஸ்.பி,. மசூத் பங்காஷ் பிபிசியிடம் பேசினார். பிரேத பரிசோதனை நேரத்தில் நிம்ரிதாவின் சகோதரர் உடனிருந்தார். சம்பவம் நடந்த நேரத்தில் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இது தற்கொலையா அல்லது கொலையா என்று போலீசார் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

விசாரணை முடிவடைய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுபுறம், நிம்ரிதாவின் சகோதரர் டாக்டர் விஷால் சந்தானி, ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை நிராகரித்துள்ளார். கைகள் மற்றும் கால்கள் இரண்டிலும் காயங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் எழுதியதை தான் நேரடியாக பார்த்ததாக அவர் கூறுகிறார், ஆனால் இந்த விஷயங்கள் ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

"இரவு 11-12 மணிக்கு அறிக்கை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் மாலை 5 மணிக்குப் பிறகுதான் அறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டது. வி வடிவ வடு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. என்னிடம் உள்ள ஓர் எக்ஸ்ரேயில் கருப்பு நிறம் தெளிவாக தெரிகிறது. எனவே, இந்த அறிக்கையில் எங்களுக்கு திருப்தியில்லை. எனவே சகோதரியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நிம்ரிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி, இந்து சமூகத்தினர் புதன்கிழமையன்று இரவு கராச்சியில் தீன் தல்வார் என்ற இடத்தில் ஊர்வலம் நடத்தினார்கள்.

சிந்து மாகாண அமைச்சர் முகேஷ் சாவ்லா போராட்டக்காரர்களுடன் பேச முயன்றார், ஆனால் சிந்து முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பின்னர் முகேஷ் சாவ்லாவுடன் மாகாண ஆலோசகர் முர்தாசா வஹாப்பும் அங்கு வந்தார். விடுதி கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்வதாக இருவரும் உறுதியளித்தனர். அதே நேரம் துணைவேந்தரை காரணம் கூறாமல் நீக்க முடியாது என்பதால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, பெனாசீர் பூட்டோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் அனீலா அதவுர்ரஹ்மான் செவ்வாய்க்கிழமையன்று நிம்ரிதாவின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். அதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதில் திருப்தி அடையாத குடும்பத்தினர், நீதி விசாரணையை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் போவதாக கூறிவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்