இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கட்சி பின்னடைவு: ஐக்கிய அரசு அமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு

நெதன்யாகு படத்தின் காப்புரிமை AFP

இஸ்ரேலில் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது தலைமையிலான ஆளும் கட்சி பெரும்பான்மை பெற முடியாத நிலையில், எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் கட்சியுடன் இணைந்து ஐக்கிய ஆட்சி அமைப்பதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், நாட்டின் இரண்டு முன்னணி கட்சிகளும் ஆட்சியை அமைப்பதற்கு தேவையான வாக்குகளை பெறமுடியவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கான்ட்ஸ் உடனடியாகத் தொடக்கவேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தினார். ஆனால், ஐக்கிய அரசு தேவைதான் என்று கூறிய கன்ட்ஸ் அந்த அரசு தமது தலைமையில்தான் அமையவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள நெதன்யாகு தலைமையிலான ஐக்கிய அரசில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பென்னி கண்ட்ஸ்

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய அந்நாட்டின் ஜனாதிபதி ருவன் ரிவ்லின், பெஞ்சமின் நெதன்யாகுவின் ஐக்கிய அரசு குறித்த நிலைப்பாட்டை "முக்கியமான முடிவு" என்று குறிப்பிட்டு வரவேற்று பேசினார்.

இஸ்ரேலில் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு சிறந்த வாய்ப்புள்ள ஒருவரை முன்னிறுத்தும் முன்பு, அதுகுறித்து பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ரிவ்லின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டு வருகின்றன. கிரீன்விச் நேரப்படி, காலை 11.56 நிலவரப்படி, வெறும் 68.6 சதவீத வாக்குகளே எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.

இதில் வலதுசாரி கொள்கை கொண்ட பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் லிகுட் கட்சியை விட, கண்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் கூட்டணி 0.77 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் வென்றுள்ளன என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், நெதன்யாகுவின் கட்சியை தோற்கடிக்கும் நிலையில் எதிர்க்கட்சி உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி 55 இடங்களில் வெற்றிபெறும் என்றும், கண்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சி 57 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்