அமெரிக்காவில் மோதி பங்குபெறும் நிகழ்ச்சி: இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

டிரம்ப் மோதி படத்தின் காப்புரிமை Getty Images

ஐந்து வருடங்களுக்கு முன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க மண்ணில் கால் வைத்தவுடன், அவருக்கு ஆதரவான கோஷங்களும், இந்தியாவை போற்றியும், பல கோஷங்கள் எழுப்பப்பட்டன. பலர் அதைத் துணிச்சலான செயல் என்றும் பாராட்டினர்.

ஒரு ராக் ஸ்டாருக்கு வழங்கக்கூடிய வரவேற்பு, அவருக்கு நியூயார்க்கின் மேடிசன் ஸ்கோயர் கார்டனில் வழங்கப்பட்டபோது, அமெரிக்காவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலும் வருகை மறுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு வழங்கக்கூடிய வரவேற்பைப் போல் அது இருந்தது.

நாளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தனது ஆதரவாளர்கள் மத்தியில் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனில் பேசவுள்ளார். அப்போது அவருக்கு அருகில் நிற்கப் போவது அமெரிக்க அதிபர் டிரம்ப், இது சமீப காலத்தில் காஷ்மீர் குறித்தான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் மோதியின் மீது எழுந்த சர்வதேச விமர்சனங்களைக் குறைக்கும் எனப் பலர் நம்புகின்றனர்.

`ஹெளடி மோடி!` என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில், 50,000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவுக்கு வெளியே மோதியின் ஆதரவாளர்கள் கூடும் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்வு மோதிக்கு ஆதரவான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே வளர்ந்து வரும் உறவின் சாட்சியாகவும் இது அமையும்.

ஒரு சில வழிகளில் இது தவிர்க்க முடியாத ஒன்று, மேலும் இந்திய - அமெரிக்க மக்களின் ஒற்றுமையை இது பிரதிபலிக்கும் என ஒபாமாவின் நிர்வாகத்தில், துணை வெளியுறவுச் செயலராக இருந்த நிஷா பிஸ்வால் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அமெரிக்க அதிபர் டெக்சாஸுக்கு போக ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்," என அவர் தெரிவிக்கிறார்.

"இந்த உறவு தற்போது தனிமனிதர்கள், அரசியல் என இரண்டையும் கடந்துவிட்டது," என்கிறார் பிஸ்வால். இவர் தற்போது அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் டெக்சாஸ் இந்தியா ஃபோரம், இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரண்டு கட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து இது இருக்கட்சிக்கும் பொதுவான நிகழ்ச்சி என்பதை நிரூபிக்க முயற்சித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான இடமாக ஹூஸ்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இந்தியா, ஹூஸ்டனின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளி. மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றல் தேவை, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான விற்பனையை மேலும் அதிகரிக்கும்.

இந்தியாவுக்கு, அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை போக்கும் ஒரு வாய்ப்பாக இது அமையும். இது டிரம்பிற்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களில், ஏற்பட்ட வலுவான வர்த்தக வேற்றுமைகளைக் களையும், முயற்சிகளை இருநாடுகளும் அறிவிப்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

"இது நடைபெற்றால் வெற்றி பெறுதல் குறித்த பேச்சு எழும். அதற்கு தானே காரணம் என டிரம்ப் கருத நினைப்பார்," என வாஷிங்டனில் உள்ள ப்ரூகிங் இன்ஸ்டிட்யூடின் இந்தியத் திட்ட இயக்குநர் தான்வி மதான் தெரிவிக்கிறார்.

இதைத் தவிரப் பெரிய கூட்டங்களையும், அதன் வரவேற்பையும் விரும்பும் டிரம்ப், இந்தப் பெரிய நிகழ்ச்சியை வரும் அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவை பெரும் ஒரு வாய்ப்பாகப் பார்ப்பார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் 3.2 மில்லியன் மக்கள் தொகையில் 1% அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் அமெரிக்காவில் சொத்துகள் அதிகம் கொண்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.

அதில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனுக்கு வாக்களித்ததாக ஆசிய அமெரிக்க சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியம் எடுத்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மோதியின் தேசியவாத கொள்கைக்கும், இந்தியாவின் மேதகுத்தன்மையை காப்பதாக அவர் உறுதியளித்தமைக்காகவும் மோதிக்கு அமெரிக்காவில் பெரும் ஆதரவு உள்ளது.

"எனவே வாக்காளர்கள் தங்களின் ஆதரவை மாற்றக் கூடும் என குடியரசுக் கட்சியினரும் நம்புகின்றனர்." என்கிறார் தான்வி மதன்.

பல ஆய்வாளர்கள் இந்த நிகழ்வு இருதலைவர்களுக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு எனவே கருதுகின்றனர். ஆனால் அந்த மகிழ்ச்சி அனைவருக்குமானதாக இல்லை.

மோதியின் இந்த வருகை, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு, அங்கு தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட சில வாரங்களில் நடைபெறுகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரை உரிமைகோரி வரும் பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவுவதுடன், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்துக்கு நரேந்திர மோதி உள்ளாகியுள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், காஷ்மீர் விவகாரத்தில் மோதியின் அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த நிகழ்வில் பங்கேற்பது மோதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும் என்று செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

"இது ஒரு தவறான முடிவு. இந்த நிகழ்வில் பங்கேற்க டிரம்ப் ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது" என்று கூறுகிறார் மனித உரிமைகள் வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான அர்ஜுன் சேத்தி.

"ஹௌடி (நலமா) மோதி என்று கூறுவதற்கு பதிலாக, நாம் அடியோஸ் (பிரியாவிடை) மோதி என்று கூறியிருந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"மோதிக்கு அருகில் டிரம்ப் தோன்றுவாரா அல்லது டிரம்புக்கு அருகில் மோதி தோன்றுவாரா என்பதை விட சங்கடமான ஒன்று இருக்க முடியாது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரட்ஜ்ர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆட்ரேய் ட்ருஸ்கே.

இந்த நிகழ்வு நடக்கும் மைதானத்திற்கு அருகில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஹூஸ்டனில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பின்னர், அடுத்த சில நாட்களிலேயே, இந்தியா முழுவதும் தனது "தூய்மை இந்தியா" பிரசாரத்தின் மூலம் லட்சக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டதை பாராட்டும் வகையில், கேட்ஸ் பவுண்டேஷன் அளிக்கும் சிறப்பு விருது ஒன்றை பெறுகிறார் நரேந்திர மோதி.

இந்நிலையில், இந்த விருதை பயன்படுத்தி, மோதியின் காஷ்மீர் நடவடிக்கை குறித்து மக்களிடையே கவனத்தை ஈர்ப்பதற்கு போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மோதிக்கு இந்த விருதை வழங்க கூடாது என்றும், இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை விண்ணப்பம் போராட்டக்காரர்களின் சார்பாக சியாட்டிலிலுள்ள கேட்ஸ் பவுண்டேஷனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

"நீங்கள் ஒரு அறையில் கழிவறையை கட்டிவிட்டு, மற்றொரு அறையில் ஒருவரை சிதைவதைக்குள்ளாக்கினால், நீங்கள் மனித உரிமை அங்கீகாரத்திற்கு தகுதியற்றவர்" என்று காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரால் அங்குள்ள மக்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மையப்படுத்தி கூறுகிறார் சேத்தி.

"சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எடுத்த நடவடிக்கைகாகவே இது வழங்கப்படுகிறது. அது கவனிக்கத்தக்கது" என்று இந்த விருது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மோதிக்கு விருது வழங்கவுள்ள அறக்கட்டளையின் நிறுவனரான பில் கேட்ஸ் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :