உடல் சுகத்துக்கான திருமணம் - பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் - விரிவான தகவல்கள் #BBCInvestigation

A girl being proffered several wedding rings

``உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு'' எளிதில் இலக்காகும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் பற்றி பிபிசியின் பிரத்தியேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது

இராக்கில் உள்ள மதகுருமார்கள், உடல் சுகத்துக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை, ஷியா பிரிவினரிடம் நடைமுறையில் உள்ள ``உடல் சுகத்துக்கான தற்காலிக திருமணம்'' என்ற வழக்கம் குறித்து பிபிசி அரபிக் செய்தி புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இராக்கில் மிகவும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களின் அருகில் மதகுருமார்களால் நடத்தப்படும் திருமண அலுவலகங்களில், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இந்தக் குழுவினர் விசாரித்ததில், ``உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு'' மிகவும் குறுகிய காலங்களுக்கு ஏற்பாடு செய்ய பெரும்பாலான மதகுருமார்கள் தயாராக இருந்தது தெரிய வந்தது. சில நேரங்களில் அது ஒரு மணி நேர உறவாக, உடலுறவு அளிப்பதற்கான அவகாசமாகவும் இருந்தது தெரிய வந்தது. ஒன்பது வயது மட்டுமே ஆன சிறுமிகளையும் கூட இந்த, குறித்த காலம் வரையிலான திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் சிலர் தயாராக இருந்தனர்.

உடல் சுகத்துக்கான திருமணங்களுக்குப் பெண்களையும், வயது குறைந்த சிறுமிகளையும் மணமகள்களாக ஏற்பாடு செய்ய அவர்கள் முன்வந்தனர்.

மதகுருமார்கள் பாலியல் தரகு வேலை பார்ப்பதும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்குவதற்கு மத ரீதியிலான ஆசி வழங்குவதும் ஆவணப்படத்தில் தெரிய வருகிறது.

Image caption பிபிசி புலனாய்வை சுமார் ஒரு வருடம் மேற்கொண்ட நவல் அல்-மக்ஹாஃபி

உடல் சுகத்துக்கான திருமணம்

உடல் சுகத்துக்கான திருமணம் - நிக்கா முட்டாஹ் - என்பது ஷியா முஸ்லிம்களிடம் வழக்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மத நடைமுறையாக உள்ளது. இந்தத் தற்காலிக திருமணத்துக்கு பெண்களுக்குப் பணம் தரப்படுகிறது. சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் `மிஸ்யாஹ்' என்ற திருமணம் இதேபோன்ற செயல்பாட்டைப் பூர்த்தி செய்கிறது.

பயணத்தின் போது மனைவி ஒருவரை உடன் அழைத்துச் செல்வதாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது குறிப்பிட்ட காலத்துக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பதாக இது மாறியுள்ளது. இந்த நடைமுறை முஸ்லிம் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது. விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக ஆக்குவதாக இது உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஒரு திருமணம் என்பது எவ்வளவு குறுகிய காலத்துக்கானதாக இருக்கலாம் என்பது பற்றி விவாதமும் நடைபெறுகிறது.

பிபிசியின் இராக் மற்றும் பிரிட்டிஷ் குழுக்கள் 11 மாத காலம் புலனாய்வு செய்து, மதகுருமார்களின் திரைமறைவு செயல்பாடுகள் பற்றி வீடியோக்கள் எடுத்துள்ளன. பாலியல் ரீதியில் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் பெண்களுடனும், `உடல் சுகத்துக்கான மணமக்களை' ஏற்பாடு செய்து தரும் மத குருமார்களுக்குப் பணம் கொடுத்த ஆண்களிடமும் இந்தக் குழுக்கள் கருத்துகளை கேட்டறிந்தது.

15 ஆண்டு கால போருக்குப் பிறகு, இராக்கில் ஒரு மில்லியன் பெண்கள் விதவைகளாகிவிட்டனர் என்றும், மேலும் பலர் குடிபெயர்ந்துள்ளனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. வறுமை காரணமாக, உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பல பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக பிபிசி குழு கண்டறிந்துள்ளது.

பரவலாகக் காணப்படுகிறது

இராக்கில் மிகவும் புனிதமான இரண்டு வழிபாட்டுத் தல பகுதிகளில், உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாடுகள் நடப்பதற்கான ஆதாரங்களை, ஆவணப்படக் குழு கண்டறிந்துள்ளது.

உதாரணமாக, பாக்தாத் காடிமியாவில் 10 மதகுருமார்களை அவர்கள் அணுகினர். ஷியா முஸ்லிம்களின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அவர்களில் எட்டு பேர் உடல்சுகத்துக்கான திருமண ஏற்பாடு செய்வதாக முன்வந்தனர்; 12 அல்லது 13 வயது சிறுமியுடன் உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாடு செய்வதாகப் பாதி பேர் கூறினர்.

உலகில் ஷியா முஸ்லிம்களின் மிகப் பெரிய புனித யாத்திரை தலமான கர்பாலாவில் நான்கு மதகுருமார்களை இந்தக் குழு அணுகியது. இளம் சிறுமிகளுடன் உடல் சுகத்துக்கான திருமணம் செய்து வைக்க இரண்டு பேர் ஒப்புக்கொண்டனர்.

நான்கு மதகுருமார்களை ரகசியமாக படம் பிடித்தனர். பெண்களை ஏற்பாடு செய்வதாக மூன்று பேர் கூறினர். நான்கில் இரண்டு பேர், இளம் சிறுமிகளை ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.

பாக்தாத் நகரைச் சேர்ந்த சய்யித் ராட் என்ற மதகுரு, பிபிசியின் திரைமறைவுக் குழு நிருபரிடம் பேசியபோது, உடல் சுகத்துக்கான திருமணத்துக்குக் கால வரம்பு எதையும் ஷரியத் சட்டம் நிர்ணயிக்கவில்லை என்று கூறினார். ``ஓர் ஆண் தனக்கு விருப்பமான எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு சிறுமியை அரை மணி நேரத்துக்கு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அது முடிந்ததும் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

ஒன்பது வயது மற்றும் அதிகமானவர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கதிமியா

சிறுமியருடன் உடல் சுகத்துக்கான திருமணம் செய்து கொள்வது சரிதானா என்று சய்யித் ராட்டிடம் புலனாய்வு நிருபர் கேட்டதற்கு, ``தன்னுடைய கன்னித்தன்மையை சிறுமி இழப்பதில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்'' என்று அவர் பதிலளித்தார்.

``உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளை அந்தச் சிறுமியுடன் செய்யலாம், உடலை, மார்பகங்களைத் தொடலாம். பிறப்புறுப்பு வழியாக நீங்கள் பாலுறவு கொள்ள முடியாது. ஆனால் ஆசனவாய் வழியாக செய்யலாம்'' என்று அவர் கூறினார். ``சிறுமிக்கு காயம் ஏற்பட்டால் என்னவாகும்'' என்று கேட்டதற்கு, ``அது உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான விஷயம். அவளால் வலியைத் தாங்க முடியுமா, முடியாதா என்பதைப் பொருத்த விஷயம்'' என்று சாதாரணமாக பதிலளித்தார்.

முட்டாஹ்-வுக்கு 12 வயது சிறுமியை ஏற்பாடு செய்வது சரிதானா என்று கர்பாலாவில் மதகுரு ஷேக் சலாவி என்பவரிடம் புலனாய்வு நிருபர் கேட்டார். ``ஆம், ஒன்பது வயதைத் தாண்டியவர்களுக்கு - பிரச்சினை எதுவும் இல்லை. ஷரியா படி எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்று அவர் கூறினார்.

அந்தச் சிறுமி கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பது தான் முக்கியம் என்று சய்யித் ராட் போல இவரும் கூறினார். உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளும், மைனர் பெண் ஒப்புக்கொண்டால் ஆசனவாய் வழியான உறவும் அனுமதிக்கப்பட்டது என்று கூறிய அவர், ``உங்கள் விருப்பத்தின்படி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்.

தொலைபேசி மூலம் திருமணம்

சிறுமியுடன் உடல் சுகத்துக்கான திருமணத்தின் நடைமுறைகளைக் கண்டறிவதற்காக, சய்யித் ராட்-டிடம் 13 வயதான ``ஷாய்மா'' என்ற சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாக நிருபர் கூறினார். உண்மையில் பிபிசி குழுவில் இருந்த ஒருவரே ஷாய்மாவாக நடித்தார்.

அவரை சந்திக்க வேண்டும் என்றோ அல்லது அவருடைய குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்றோ சய்யித் ராட் கேட்கவில்லை. விசாரணையில் ஈடுபட்டிருந்த நிருபருடன் வாடகைக் காரில் அமர்ந்திருந்த அவர், தொலைப்பேசி மூலமாக திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புதல் தெரிவித்தார்.

``இவரைத் திருமணம் செய்து கொள்ள உனது ஒப்புதலை என்னிடம் தெரிவிக்கிறாயா ஷாய்மா, ஒரு நாளுக்கு அவர் உனக்கு 150,000 தினார்கள் பணம் தருவார்'' என்று சிறுமியிடம் ராட் கேட்டார். முடிவில் அவர், ``இப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்களாகிவிட்டீர்கள், ஒன்றாக இருப்பது ஹலால் ஆக இருக்கும்'' என்று கூறினார்.

சில நிமிடங்கள் நடந்த அந்த சம்பிரதாயத்துக்காக, புலனாய்வு செய்தியாளரிடம் அவர் 200 டாலர்கள் கட்டணம் வாங்கிக் கொண்டார். மானசீகமான அந்த 13 வயது சிறுமியின் நலன் பற்றி எந்த கவலையும் அவரிடம் இல்லை.

மதப் போர்வை

திருமணமாகி, மதகுருமார்கள் ஏற்பாடு செய்யும் அறிமுகமில்லாத பெண்களுடன் இன்பம் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ஒருவர், ``12 வயதான சிறுமிகளுக்கு விலை அதிகம், ஏனென்றால் அவர்கள் `புத்தம் புதிதாக இருப்பார்கள்.' அதற்கு - $500, $700, $800 - என செலவாகும். அதுதான் மதகுருமார்களுக்குக் கிடைக்கும் வருமானம்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நடத்தைக்கு மதத்தின் பெயரில் பாதுகாப்பு உள்ளது என்று அவர் நம்புகிறார்: ``மதவாதி ஒருவர் உடல் சுகத்துக்கான திருமணம் ஹலால் என்று உங்களுக்குக் கூறுவார் என்றால், அது பாவமாகக் கருதப்படாது'' என்று அவர் கூறுகிறார்.

பெண்களை மனிதர்களாக நடத்தாமல், ``வணிகப் பொருளாக'' கையாள்கிறார்கள் என்று இராக் முழுக்க பெண்கள் தங்குமிடங்களை நடத்தி வரும் பெண்கள் உரிமை ஆர்வலர் யானர் முகமது கூறுகிறார்.

``குறிப்பிட்ட வழிகளில் வணிகப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் கன்னித்தன்மையானது பெரிய விற்பனைக்காகத் தக்கவைக்கப் படுகிறது. அதைப் பிற்காலத்தில் செய்வார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார். `பெரிய விற்பனை' என்று கூறுவது திருமணத்தை.

ஏற்கெனவே கன்னித்தன்மையை இழந்த பெண்கள், திருமணம் செய்வதற்கானவள் அல்ல என்று கருதப்படுகிறது. தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, குடும்பத்தினரே கூட கொன்றுவிடும் ஆபத்தும் இருக்கிறது. ``எப்போதும் சிறுமிகளும், பெண்களும் தான் தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாலியல் தரகு வேலை

மதகுருமார்கள் இளம் சிறுமிகளை வாங்கித் தருவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறும் உரையாடல்களையும், ஆவணப்படத்தைத் தயாரித்தவர்கள் ரகசியமாகப் பதிவு செய்துள்ளனர்.

தனக்கு பாலியல் தரகு வேலை பார்த்து இதில் தள்ளியது ஒரு மதகுரு தான் என்று ஒரு சிறுமி கூறியதையும், மற்ற சாட்சிகள் அதை உறுதிப் படுத்தியதையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புலனாய்வில் ஈடுபட்ட செய்தியாளருக்கு, 24 மணி நேர உடல் சுகத்துக்கான திருமணத்துக்காகத் தாம் வாங்கிய ஒரு இளம் பெண்ணை ஏற்பாடு செய்த மதகுருமார் பற்றிய காட்சிகளையும் இந்தக் குழு ரகசியமாகப் படம் பிடித்துள்ளது. உண்மையில் அந்த மதகுரு, பாலியல் தரகு வேலை பார்த்துள்ளார்.

உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாட்டை இந்த செய்தியாளர் ஏற்க மறுத்தபோது, டீன் ஏஜ் வயதில் உள்ள ஒரு பெண்ணை தேர்வு செய்யலாம் என்று கூறி, ஒருவரை மதகுரு காட்டியுள்ளார்.

Image caption கர்பாலா மசூதி

தண்டனை வழங்குதல்

இராக்கில் முன்பு உயர்நிலையிலிருந்த ஷியா மதகுருவான காய்த் டமிமி என்பவர், அடிப்படைவாத செயலுக்கு எதிராகப் பேசியதால், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தற்போது லண்டனில் இருக்கிறார்.

உடல் சுகத்துக்கான திருமணம் என்ற பெயரில் பெண்கள் சுரண்டப்படுவதை, குறிப்பாக மிகவும் இளவயது சிறுமிகள் மதகுருமார்களால் சுரண்டப்படுவதை அவர் கண்டித்துள்ளார் : ``அவர் கூறுவது குற்றச் செயலானது. சட்டத்தின்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று கூறுகிறார்.

குழந்தை வயதுள்ளவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது என்று சில இராக்கிய ஷியா மதத் தலைவர்கள் எழுதியுள்ளனர். இத்தகைய நடைமுறைகளைக் கண்டிக்க வேண்டும் என்று ஷியா தலைவர்களுக்கு டமிமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிசி அரபிக் செய்திப் பிரிவால் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட மூன்று மதகுருமார்களில் இரண்டு பேர், தாங்கள், ஷியா முஸ்லிம்களின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான அயதுல்லா சிஸ்டானியை பின்பற்றுவதாகக் கூறினர்.

இருந்தபோதிலும், பிபிசிக்கு அயதுல்லா அளித்த அறிக்கையில், ``நீங்கள் கூறுகிறபடி இத்தகைய நடைமுறைகள் நடந்து வந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நாங்கள் அதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும், பெண்களின் மனித்தன்மையை சிறுமைப்படுத்தும் வகையிலும் பாலியலை விற்பனை செய்யும் ஒரு கருவியாகத் தற்காலிக திருமணங்கள் செய்வது அனுமதிக்கப்படவில்லை'' என்று கூறியுள்ளார்.

``மதகுருமார்களுக்கு எதிராகக் காவல் துறையில் பெண்கள் புகார் செய்யாவிட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது சிரமம்'' என்று பிபிசி அரபிக் பிரிவுக்கு அளித்த பேட்டியில் இராக்கிய அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :