விமான நிலைய சோதனையில் சிக்கிய சிங்கங்களின் எலும்புகள்

Lion South Africa படத்தின் காப்புரிமை Getty Images

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் 342 கிலோ எடையுள்ள சிங்கங்களின் எலும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகள் சிலவற்றில் பாரம்பரிய மருத்துவ காரணங்களுக்காக சிங்கங்களின் எலும்புகள் கடத்தப்படுகின்றன. சில நேரங்களில் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

12 அலுமினிய காகிதங்களில் அடைக்கப்பட்டிருந்த இருந்த அந்த எலும்புகள் வேறு பொருட்கள் என்று கணக்கு காட்டப்பட்டிருந்தன.

இந்த 342 கிலோ எலும்புகளும் எலும்புக்கூடாக இருந்தால் அவை சுமார் 38 சிங்கங்களின் எலும்புக்கூடாக இருக்கும்.

தென்னாப்பிரிக்காவில் சுமார் 11,000 சிங்கங்கள் உள்ளன. அவற்றிலே வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ள வனப் பகுதிகளில் சுமார் 3,000 சிங்கங்கள் வாழ்கின்றன.

கைதான மூவரில் இருவர் ஜிம்பாப்வே நாட்டவர்கள். இவற்றை மலேசியாவுக்கு கடத்த கைதானவர்கள் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டில் வாழாமல், அடைத்து வளர்க்கப்படும் சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்ய தென்னாப்பிரிக்காவில் அனுமதி உண்டு. ஆனால், அதற்கு அரசிடம் உரிமம் வாங்க வேண்டும்.

கைப்பற்றப்பட்டுள்ள எலும்புகளுக்கு உரிய சிங்கங்கள் காட்டில் இருந்து சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டவையா, மனிதர்களால் வளர்க்கப்பட்டவையா என்று இதுவரை தெரியவில்லை.

சீனாவில் புலிகளின் எலும்புகளுக்கு சந்தை உள்ளதால், சிங்கங்களின் எலும்புகளைப் புலிகளின் எலும்புகள் என்று கூறி போலியாக விற்கப்படுவதும் உண்டு என்று பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் விசாரணை முகமை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :