இரான் இன்ஸ்டாகிராம் ஸ்டார் சாஹர் தாபர் தெய்வ நிந்தனை செய்ததாக கைது

இரான் இன்ஸ்டாகிராம் ஸ்டார் தெய்வ நிந்தனை செய்ததாகக் கைது படத்தின் காப்புரிமை Instagram

இரான் இன்ஸ்டாகிராம் ஸ்டார் சாஹர் தாபர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது தாஸ்னிம் செய்தி முகமை.

சாஹரின் இன்ஸ்டாகிராம் பதிவொன்று கடந்தாண்டு வைரலாக சென்றதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார்.

சாஹருக்கு 50 பிளாஸ்டிக் சர்ஜரி அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவும் படங்களை அனைத்தும் அதிகமாக திருத்தம்செய்தே அவர் பகிர்கிறார்.

யார் இந்த சாஹர்?

சாஹருக்கு 22 வயதாகிறது.

அவர் கடந்தாண்டு பகிர்ந்த ஒரு படம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஜோம்பியாக இருந்தால் எப்படி இருப்பாரோ அது போல அந்தப் படத்தில் காட்சி தருகிறார் எனச் சர்வதேச ஊடகங்கள் விவரித்தன.

குழி விழுந்த கன்னங்கள், கார்ட்டூன் கதாபாத்திரம் போல மூக்கு என அந்தப் படத்தில் காட்சி அளித்திருந்தார்.

இவ்வாறாகக் காட்சியளிக்க தாம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அப்போது அவர் கூறி இருந்தார்.

இதன் காரணமாக அவர் சர்வதேச கவனம் பெற்றார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

படத்தின் காப்புரிமை Instagram

பின்னர் அவரே, அந்த படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவி கொண்டு திருத்தி அமைக்கப்பட்டவை என்று விளக்கமளித்தார்.

ஏன் அவர் கைது செய்யப்பட்டார்?

தெய்வ நிந்தனை, வன்முறையைத் தூண்டுதல், சட்டத்திற்குப் புறம்பாக சொத்துகளைக் குவித்தல், நாட்டின் ஆடை கட்டுப்பாட்டை மீறுதல், ஊழல் செய்யத் தூண்டுதல் ஆகியவை சாஹர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்.

அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

இரானில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், ஃபேஷன் குறித்து எழுதும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இப்போது சாஹரும் இணைகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்