காற்றிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்க ஏற்பாடு: கனவுத் திட்டமா? கற்பனைக் கோட்டையா?

காற்றைப் பிடித்து, கரியமில வாயுவை வடிகட்டும் தொழில்நுட்பம். படத்தின் காப்புரிமை Climeworks
Image caption காற்றைப் பிடித்து, கரியமில வாயுவை வடிகட்டி...

"இதுதான் விமான போக்குவரத்தின் எதிர்காலம்" என்று கூறுகிறார் காற்றிலுள்ள கரியமில வாயுவை ஜெட் ரக விமானங்களின் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெரிங்க்.

உலகின் சில விமான நிலையங்களின் நிர்வாகங்களுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி, உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ஜெட் விமான எரிபொருளை தயாரிப்பதற்கு இவரது நிறுவனம் முயன்று வருகிறது.

காற்றை உள்ளிழுத்து, அதில் இருந்து பருவநிலை மாற்றத்துக்கு வித்திடும் முக்கிய வாயுவான கரியமில வாயுவை வடிகட்டி, அதிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்தை விமான நிலையங்களில் அமைக்கும் முயற்சியில் இவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எரிபொருள் உருவாக்கும் செயல்முறையின் தொடக்கமாக இணை - மின்னாற்பகுப்பு முறையின் மூலம் தண்ணீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. அதற்கடுத்த கட்டமாக, காற்றிலிருந்து உள்ளிழுக்கப்பட்டுள்ள கார்பன்- டை - ஆக்ஸைடுடன் இந்த ஹைட்ரஜன் கலக்கப்பட்டு செயற்கை எரிவளி தயாரிக்கப்பட்ட உடன், அது பின்பு ஜெட் எரிபொருளாக மாற்றப்படும்.

மேற்கண்ட செயல்முறையை சோதனை ரீதியில் செய்து பார்ப்பதற்கு ரொட்டர்டாம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆலை, ஒரு நாளைக்கு 1,000 லிட்டர் ஜெட் எரிபொருளை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தியை செய்வதற்கான எரிபொருள் சூரிய ஒளி ஆற்றலிலிருந்து பெறப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

2021ஆம் ஆண்டுக்குள் இந்த செயல்முறையை பயன்படுத்தி முதல் முறையாக எரிபொருள் தயாரிக்கப்படும் என்று நம்புவதாக இந்த திட்டத்தின் கூட்டாளிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஜெட் ரக விமானங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் ஏற்படுத்தும் மாசுவை விட இந்த புதிய எரிபொருள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த முறையின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது சிறப்பு வாய்ந்த ஒன்று" என்று கூறுகிறார் நேரடி காற்றுப் பிடிப்பு தொழில்நுட்பத்தை வழங்கும் கிளைம்ஒர்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த லூயிஸ் சார்லஸ்.

இருப்பினும், இந்த புதிய வகை எரிபொருள் சந்தையில் போட்டி சூழ்நிலையை உண்டாக்குவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதை ஒஸ்கர் ஒப்புக்கொள்கிறார்.

"இந்த திட்டத்தின் முக்கிய விடயமே பணம்தான்" என்று கூறுகிறார் ஸ்கைஎன்ஆர்ஜி நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெரிங்க்.

"ஒப்பீட்டளவில் புதைபடிவ எரிபொருள் விலை குறைந்தது. இந்நிலையில், இதுவரை நடைமுறையில் இல்லாத நேரடி காற்றுப்பிடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது அதிக செலவு பிடிக்கக் கூடியது."

படத்தின் காப்புரிமை Climeworks

இதே போன்ற நேரடி காற்றுப்பிடிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கனடாவை சேர்ந்த கார்பன் இன்ஜினியரிங், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் தெர்மோஸ்டாட் ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன.

எனினும், இந்த திட்டம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

"இது கண்டிப்பாக வியப்புக்குரிய திட்டம்தான். இந்த முறையில் உருவாக்கப்படும் பரிசோதனை நிலையத்தால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் எரிபொருளை தயாரிக்க முடியும். ஆனால், இந்த ஆயிரம் லிட்டர் எரிபொருள் போயிங் 747 விமானம் ஐந்து நிமிடம் பறப்பதற்கு மட்டுமே பயன்படும்" என்று கூறுகிறார் பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பை சேர்ந்த ஜோரியன் டி லெஜ்.

காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுப்பதற்காக பல உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதை செய்வதற்கு மிகவும் எளிமையான வழி ஏற்கனவே உள்ளது; ஆம், அது மரங்களை வளர்ப்பதுதான். அதுமட்டுமின்றி, ஏற்கனவே தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருளை கொண்டு விமானங்கள் இயங்கி வருகின்றன.

இதுமட்டுமின்றி, சர்க்கரை, புல் அல்லது பாமாயில் மற்றும் விலங்கு கழிவுகள் அல்லது கார்பனை கொண்டுள்ள பொருட்களை தக்க செயல்முறைக்கு உட்படுத்தி அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

ஆனால், இந்த மாற்று எரிபொருள்கள் பாரம்பரிய புதைபடிவ ஜெட் எரிபொருளின் கதையை முடிவுக்கு கொண்டுவருமா?

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆம், ஆனால் இதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிப்பது மிகவும் கடினம்" என்று கூறுகிறார் டெலிபிட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விமானப் பொறியியல் துறையின் மூத்த விரிவுரையாளரான ஜோரிஸ் மெல்கிர்ட்.

விமானப் பயணத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியே கட்டணம் வசூலிக்க தொடங்கினால், மாற்று எரிபொருள்கள் விலை கட்டுப்படியாவதாக மாறும் என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்த நடவடிக்கை விமான பயணச்சீட்டு விலையுயர்வுக்கு வழிவகுக்கும்.

"இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் ஒரு தடையாக இல்லை. இது முழுமுழுக்க சமூக அழுத்தத்தை சார்ந்தது. அடிப்படையில் போக்குவரத்தை இன்னும் நீடித்த நிலைத்த வழிமுறைக்கு மாற்றுவது எப்படி என்று ஆராய்ந்தால், இருப்பதிலேயே விமானப் போக்குவரத்து துறையை மாற்றுவதுதான் கடினம்."

உலகின் கார்பன் உமிழ்வில் சுமார் மூன்று முதல் ஐந்து சதவீதத்துக்கு விமானப் போக்குவரத்தே காரணமாக உள்ளது. இந்த அளவு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

புதுமையான வழிகள்

படத்தின் காப்புரிமை Anna Holligan
Image caption ஒஸ்கர் மீஜெரிங்க்

வரும் 2050ஆம் ஆண்டிற்குள் விமானப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசுபாட்டை ஐம்பது சதவீதம் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவை நிறுவனங்கள் புதைபடிம எரிபொருளின் பயன்பாட்டை குறைக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளன.

எஸ்ஏஎஸ் எனும் விமான சேவை நிறுவனம் தங்களது விமானங்களில் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தவும், அடுத்த தசாப்தத்திற்குள் கார்பன் உமிழ்வை 25 சதவீதம் குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த கேஎல்எம் எனும் விமான சேவை நிறுவனமோ, மக்களை விமானத்தை விடுத்து ரயில்களில் பயணம் செய்யவும், அலுவலக கூட்டங்களை இணையதள காணொளி வழியாக நடத்தவும் பரிந்துரை செய்கிறது.

கார்பன்- டை- ஆக்ஸைடு உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன், ஒரு விமானப் பயணத்துக்கு தேவையான எரிபொருளின் அளவை சிறப்பாகக் கணக்கிட வடிவமைக்கப்பட்ட ஒரு சோதனையில், சமீபத்தில் நெதர்லாந்தை சேர்ந்த குறைந்த விலை விமான சேவை நிறுவனமான டிரான்சாவியா, ஐன்ட்ஹோவன் விமான நிலையத்தில் பயணிகளின் எடையை கணக்கிட தொடங்கியுள்ளது.

ரொட்டர்டாம் விமான நிலையத்தில் சோதனை ரீதியில் தயாரிக்கப்படவுள்ள புதிய வகை ஜெட் எரிபொருளை பரிசோதித்து பார்க்கும் முதலாவது விமான சேவை நிறுவனமாகவும் டிரான்சாவியா திகழ உள்ளது.

இந்த பிரச்சனைக்கு மின்சாரம் அல்லது கலப்பு தன்மை கொண்ட விமானங்கள் ஒரு தீர்வாக அமையக்கூடும் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

ஈஸிஜெட் எனும் விமான சேவை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்த தூரம் செல்லும் மின்சார விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

என்னதான் தொழில்நுட்பம் சார்ந்த சவால்கள் களையப்பட்டு புதிய தயாரிப்புகள் உருவாக்கப்பட்டாலும், ஒரு விமானத்திற்கு சராசரியாக 26 ஆண்டுகள் ஆயுட்காலம் இருப்பதால், தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து விமானங்களின் பயன்பாட்டையும் உடனடியாக நிறுத்திவிட முடியாது.

வழக்கமான எரிபொருட்களின் மீதான விமானப் போக்குவரத்து துறையின் சார்பை குறைக்க, உயிரி எரிபொருட்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புகிறார்.

படத்தின் காப்புரிமை Friends of the Earth
Image caption ஜோரியன் டி லெஜ்

"அதே சமயத்தில், புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும். தற்சமயம், இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும், விமானப் போக்குவரத்து துறைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில், தொழில் நுட்ப மாற்றங்களை மட்டுமே சார்ந்திராமல் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களது பயணத்திற்கு விமானங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பை சேர்ந்த டி லெஜ்.

"நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, நமது விமான பயணங்களை குறைப்பதே இது சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். நாம் கடுமையான தேர்வுகளை செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். விமானப் பயணங்கள் இல்லாமலே நமது வாழ்க்கையை வேறுபட்ட வகையில் மிகவும் வசதியாக உணர முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்