ஆன்லைனில் அரசை விமர்சித்ததால் அடித்து கொல்லப்பட்ட மாணவர்: வங்கதேசத்தை உலுக்கும் போராட்டங்கள்

அரசை விமர்சித்ததால் அடித்து கொல்லப்பட்ட மாணவர்: படத்தின் காப்புரிமை ABRAR FAHAD/FACEBOOK

வங்கதேச அரசை விமர்சித்து சமூகவலைதளத்தில் கருத்து வெளியிட்ட அந்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பல மணி நேரங்களாக கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு அவர் இறந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு, தான் தங்கும் விடுதி அறையிலிருந்து வெளியே அழைத்து செல்லப்பட்ட அப்ரார் ஃபாஹட் மீது குறைந்தது 4 மணி நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

21 வயதான அப்ரார் ஃபாஹட்டின் உடலில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், அப்ராரின் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக பிபிசியிடம் உறுதி செய்தார்.

வங்கதேச தலைநகரான டாக்காவில் உள்ள பங்களாதேஷ் பொறியியல் பல்கலைக்கழகத்தில் (பியுஇடி) படித்து வருகிறார்.

வங்கதேசத்தின் ஆளும்கட்சியான அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணி பிரிவான பிசிஎல்லை சேர்ந்த பலர் இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர்.

வங்கதேசத்தில் மாணவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பிசிஎல் மீது பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அப்ரார் மரணம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்துக்கு காரணமாக அமைந்துள்ளது

அப்ரார் ஃபாஹட்டின் விடுதியில் உள்ள சிசிடிவியில் அவரது உடலை சிலர் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த விடுதியில் இருந்த ஒன்பது பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதில் ஐந்து பேர் பிசிஎல் பிரிவை சேர்ந்தவர்கள்.

அப்ரார் ஃபாஹட் அடித்து கொல்லப்பட்டதை டாக்கா போலீஸ் ஆணையர் உறுதி செய்தார்.

சில நாட்களுக்கு முன்பு அப்ரார் ஃபாஹட், இந்தியாவுடனான நதிநீர் ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்தபிறகு, அவருக்கு இஸ்லாமிய கட்சி ஒன்றுடன் தொடர்புள்ளதா என்று பிசிஎல் அமைப்பினர் விசாரணை செய்து அவரை அடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

பியுஇடி மாணவர் ஒருவர் இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''விடுதியின் 2005-ஆம் எண் அறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் நான் அப்ராரை உயிருடன் கண்டேன். சில ஜூனியர் மாணவர்களின் உதவியோடு நான் அவரை கீழ் தளத்துக்கு கொண்டு சென்றேன். தயதுசெய்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்'' என்று சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில் அப்ரார் கொலை சம்பவம் வங்கதேசம் முழுவதும் கடுமையான அதிர்வலைகளையும், டாக்காவில் போராட்டங்களையும் தூண்டியுள்ளது.

வங்கதேச ஆளும்கட்சி மீது மனிதஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு சுமத்திவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்