மாரத்தான் போட்டியில் வரலாறு படைத்த கென்யர் ஏலியுட் கிப்ட்சோகே: 42.2 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்துக்குள் கடந்தார்

ஏலியுட் கிப்சோட்கே படத்தின் காப்புரிமை Reuters

ஏலியுட் கிப்ட்சோகே என்னும் கென்ய நாட்டு தடகள வீரர் ஆஸ்திரியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் 2 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் 42.2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் இந்த தூரத்தை கடப்பது தடகள வரலாற்றில் இதுவே முதல் முறை.

34 வயதாகும் ஏலியுட், கென்யாவைச் சேர்ந்தவர். ஆஸ்திரியாவில் நடக்கும் 'இனியஸ் 1:59 சேலன்ஞ்' மாரத்தான் போட்டியில் இவர் 1 மணி 59 நிமிடம் 40 விநாடிகளில் 42.2 கிலோமீட்டரைக் கடந்து இலக்கை அடைந்தார்.

இது திறந்த மாராத்தான் போட்டியில்லையென்பதாலும், இந்த போட்டியில் ஏலியுட், வேகத்தை ஒழுங்குபடுத்தும் ஊக்குநர் அணி ஒன்றைப் பயன்படுத்தினார் என்பதாலும் இது அதிகாரப்பூர்வ மாரத்தான் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படாது.

”இது எல்லோராலும் முடியும் என காட்டுகிறது. இப்போது இதை நான் செய்துவிட்டேன், எனக்கடுத்து நிறைய பேர் இதை செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்” என்கிறார் கிப்ட்சோகே.

2017 மோன்ஸாவில் நடந்த இத்தாலியன் கிராண்ட் ப்ரிக்ஸ் சர்கியூட் போட்டியில் 25 விநாடிகளில் முந்தைய முயற்சியை தவறவிட்டார் கிப்ட்சோகே.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டி பிரிட்டிஷ் நேரப்படி சரியாக 07:15க்கு தொடங்கியது. இந்த போட்டியின் கடைசி நேரத்தில், அசாதாரண வேகத்தில் கிப்ட்சோகே ஓடினார் என இந்த நிகழ்ச்சியின் உரிமையாளர் ஜிம் ராட்க்ளிஃப் கூறினார்.

42 ஊக்குநர்கள் (பேஸ்மேக்கரின்) அணியின் உதவியோடு இந்த சாதனையைப் படைத்துள்ளார் கிப்ட்சோகே.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தய சாம்பியன்களான மேத்யூ செண்ட்ரோவிட்ஸ், பால் செலிமோ உள்ளிட்டவர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.

”அவர்கள் சிறந்த வீரர்கள், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் கிப்ட்சோகே.

இடையே அவருக்கு தண்ணீரும், சத்துக் களிம்பும் அவரது பயிற்சியாளர்களால் பைக்கில் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. பொதுவாக இவை அனைத்தும் ஆங்காங்கே இருக்கும் மேஜைகளின் மீதிருந்து எடுத்து கொள்ளப்படும். ஐஏஏஎஃப் தடகள கட்டுப்பாட்டு குழுவின் விதிகளின்படி இவ்வாறு கொண்டுவந்து கொடுப்பது அனுமதிக்கப்படாது. இதனாலும், இந்த சாதனை அதிகாரபூர்வமானது அல்ல. ஏலியுட் கிப்ட்சோகேவின் அதிகாரபூர்வ மாரத்தான் சாதனை கடைசியாக 2018ல் அவர் ஜெர்மனியில் ஓடிய 2:01:39 என்பதே ஆகும்.

இந்த சாதனையைப் பற்றிப் பேசிய கிப்ட்சோகேவின் பயிற்சியாளர் ஒருவர், "இந்த முயற்சியில் எல்லாம் சரியாக நாங்கள் எண்ணியபடி நடந்தன. எங்களை கிப்ட்சோகே ஊக்கப்படுத்திவிட்டார். மேலும் வாழ்வில் எங்கள் லட்சியத்தை இன்னும் விரிவாக்கிக் கொள்ள நம்பிக்கை அளித்துவிட்டார். இதை நம்பமுடியவில்லை" என கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்