பருவநிலை மாற்றம்: ஐநா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமி ஜனனியின் குரல்

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
ஜனனி சிவக்குமார்
படக்குறிப்பு,

ஜனனி சிவக்குமார்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான்.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட்டத்தில் ஜனனி எடுத்துரைத்தார்.

ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்துள்ள அதே காலகட்டத்தில், அதே ஐநா சபையில் ஜனனி ஆற்றிய உரையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்காக அவரிடம் பேசியது பிபிசி தமிழ்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே பங்கேற்பாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி உலக அமைதி தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'பருவநிலை மாற்றம்' எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, பருவநிலை மாற்ற பிரச்சனையை வித்தியாசமான முறையில் அணுகும் பத்து மாணவ தலைவர்கள் நியூயார்கில் அமைந்துள்ள தங்களது தலைமையகத்தில் போட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உரையாற்றுவதற்கான வாய்ப்பை ஐநா அளித்தது.

அதன்படி, தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 10ஆம் வகுப்பு படித்து வருபவருமான ஜனனி, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் தனது திட்டத்தை விவரிப்பதற்கு ஐநா தேர்ந்தெடுத்தது. இந்த அவையில் பேசிய பத்து மாணவ தலைவர்களில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே பங்கேற்பாளர் தான்தான் என்று அறிந்தபோது பெருமகிழ்ச்சியடைந்ததாக கூறுகிறார் ஜனனி.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்'

தமிழகத்தை சேர்ந்த கவிஞரான கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற சிறப்புமிக்க வரிகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை தொடங்கிய ஜனனியிடம் அதுகுறித்த மேலதிக தகவலை கேட்டபோது, "ஐநா சபையின் தலைமையகத்தின் சுவர்களிலேயே 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை முதலாக கொண்டு, உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை 'உலகத்தின் குடிமகனாக' கருதி செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எனது உரையை தொடங்கினேன்" என்று கூறினார்.

'கேர்ல்ஸ் பிளே குளோபல்' எனும் லாபநோக்கமற்ற அமைப்பின் நிறுவனரான ஜனனி, அதன் மூலம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை முதலாக கொண்டே ஐநாவில் பேசினார். இந்நிலையில், அந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "நான் ஓராண்டுக்கு முன்பு 'கேர்ல்ஸ் பிளே குளோபல்' எனும் அமைப்பை தொடங்கினேன். பாலின பாகுபாட்டாலும், பொருளாதார சூழ்நிலையாலும் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகளுக்கு கால்பந்து உள்ளிட்ட பெரிதும் வாய்ப்பளிக்கப்படாத விளையாட்டுகளை கற்று கொடுத்து அதன் மூலம் அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பது முதன்மையான நோக்கம். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்கை அடைவதன் முக்கியத்துவமும் அதன் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தின் கோயம்புத்தூரிலுள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் இருபது மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான ஆடைகள், காலணிகள், உபகரணங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை கொண்டு கால்பந்து பயிற்சி வாரந்தோறும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக அளவிலும், தத்தமது சுற்றுப்புறத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவிகள் தங்களது வாழ்விடத்தில் முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் எனது அமைப்பின் வாயிலாக ஊக்குவிக்கப்படுகிறது" என்று பெருமையுடன் கூறுகிறார் 15 வயதே ஆகும் ஜனனி.

கோயம்புத்தூரை சேர்ந்த இந்த இருபது மாணவிகளிலிருந்து சிறப்பாக செயல்படும் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்கும் 'குளோபல் கோல்ஸ் வேர்ல்ட் கப்' தொடரில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றிபெறும் பட்சத்தில் சௌதி அரேபியா அல்லது அமெரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இவர்கள் பங்கேற்பார்கள்.

எப்படி தொடங்கியது இந்த திட்டம்?

அமெரிக்காவில் இருந்து கொண்டு எப்படி தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள் என்று ஜனனியிடம் கேட்டபோது, "நான் வாரத்திற்கு ஒரு முறையாவது கோயம்புத்தூரிலுள்ள மாணவிகளுடன் வாட்ஸ்ஆஃப் குழு மற்றும் காணொளி அழைப்பு வழியாக தொடர்பு கொண்டு அவர்களது கால்பந்து பயிற்சி குறித்தும், பருவநிலை மாற்றம் தொடர்பான மற்ற செயல்பாடுகள் குறித்தும் உரையாடி வருகிறேன். மேலும், ஆண்டிற்கு ஒருமுறையாவது நேரில் வந்து பணிகளை மேற்பார்வையிடுவதற்கு எனது பெற்றோருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளேன்.

இதுவரை எனது பெற்றோரின் நிதியுதவி வாயிலாகவே இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்நிலையில், பல தரப்பினரிடமிருந்து நிதி திரட்டி, இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் மாதம் கோயம்புத்தூருக்கு வந்து, சுமார் 2,000 பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன்" என்று கூறுகிறார் ஜனனி.

மென்பொருள் பொறியாளர்களான ஜனனியின் தந்தை சிவக்குமார் மற்றும் தாய் கார்த்திகா ஆகிய இருவருமே கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள். பணிநிமித்தமாக 1997இல் அமெரிக்கா சென்ற சிவக்குமார், 2001இல் திருமணமானவுடன் அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்றுவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஜனனி, தந்தையின் பணிச் சூழல் காரணமாக 2014 முதல் 2018ஆம் வரை சென்னையில் வசித்து படிக்க நேரிட்டது. இடைப்பட்ட இந்த நான்காண்டுகளே தனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததுடன், தனது அமைப்பை நிறுவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறுகிறார் ஜனனி.

"நான் சென்னையின் பிரபல பள்ளியில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். கல்வியை போன்றே சிறுவயது முதலே விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட நான், இப்பள்ளியில் கால்பந்து அணியில் சேர்ந்து விளையாட விரும்பியபோது, பெண்களுக்கென தனி அணி இல்லை என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். எனினும், ஆர்வத்தின் காரணமாக பள்ளியிலுள்ள ஆண்களுக்கான கால்பந்து அணியில் சேர்ந்து விளையாட தொடங்கினேன்; இருப்பினும் பல்வேறு காரணங்களால் என்னால் அதை தொடர முடியாமல் போய்விட்டது.

படக்குறிப்பு,

பெற்றோருடன் ஜனனி

மாநில தலைநகரிலுள்ள பிரபல பள்ளியிலேயே இந்த நிலை என்றால், கிராமப்புற பகுதிகளில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைக்க தோன்றியதன் விளைவே எனது அமைப்பின் தொடக்கமும், இந்த கால்பந்து அணியும்" என்று விவரிக்கும் ஜனனி, தமிழ் மொழி பரவல் இல்லாத அமெரிக்க பள்ளிகளில் கூட தமிழில் பேசலாம் என்றும், ஆனால் தான் சென்னையில் படித்த பள்ளியில் தமிழ் மொழியில் பேசினாலே அபராதம் விதிப்பது நடைமுறையாக இருந்தது தனது மொழி வளர்ச்சிக்கு ஏமாற்றத்தை அளித்ததாக மேலும் கூறுகிறார்.

பருவநிலை மாற்றமும், விழிப்புணர்வின் அவசியமும்

பருவநிலை மாற்றத்தினால் உலகம் சந்திக்க வேண்டிய சவால் குறித்தும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும் என்று ஜனனி வலியுறுத்துகிறார்.

"முன்னெப்போதுமில்லாத வகையில், பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. உலகின் முன்னேறிய நாடுகள் தங்களது வளர்ச்சிக்காக இயற்கை வளத்தை அழித்ததன் விளைவே இதன் தொடக்கம் என்றால், தற்போது வளரும் நாடுகள் தங்களது பங்கிற்கு போட்டிபோட்டுக்கொண்டு சூழியல் சீர்கேடுகளை செய்து வருகின்றன. எனவே, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகள், வளரும் நாடுகள் இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சி அடைய வழிகாட்டுவதற்கு கடமைபட்டுள்ளன.

பருவநிலை மாற்றம் குறித்து ஒவ்வொரு தனிநபரும் தெரிந்துகொள்ள வேண்டியது மட்டுமின்றி அதை எதிர்த்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து நான் கோயம்புத்தூரில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். இப்பணியை மென்மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்" என்று கூறுகிறார் ஜனனி.

அமெரிக்காவில் பள்ளிக்கல்வியும், மருத்துவத்தில் மேற்படிப்பையும் நிறைவு செய்துவிட்டு தமிழகத்திற்கு வந்து சேவை செய்ய விரும்புவதே தனது எதிர்கால லட்சியம் என்று கூறுகிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :