சிரியா மீதான துருக்கி தாக்குதல்: ஐ.எஸ் கைதிகளை இனியும் எங்களால் காக்க முடியாது - குர்துகள் மற்றும் பிற செய்திகள்

ஐ.எஸ் கைதிகளை இனியும் எங்களால் காக்க முடியாது: குர்துகள் - சிரியாவில் நடப்பது என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

இனியும் எங்களால் ஐ.எஸ் கைதிகளைக் காக்க முடியாது. அவர்களைக் காப்பதற்கும் எங்களால் முக்கியத்துவம் தர முடியாதென குர்து படை தெரிவித்துள்ளது. ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர்.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியிலிருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. இப்போது துருக்கி குர்துகள் வசம் இருக்கும் வடக்கு சிரியா மீது தாக்குதல் தொடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

எங்களின் உயிரும் உடைமையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் போது, எங்களால் ஐ.எஸ் கைதிகளைக் காக்க முடியாதென குர்து படை கூறி உள்ளது. எங்கள் நிலத்தையும், மக்களையும் காப்பதுதான் எங்களது முன்னுரிமை என அவர்கள் கூறி உள்ளனர்.

"பொருளாதாரம் நல்லாதான் இருக்கு " - ரவிசங்கர் பிரசாத்

படத்தின் காப்புரிமை Getty Images

"தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2-ம்தேதி வெளியான மூன்று இந்தி திரைப்படங்கள் அன்றைய தினமே ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

வார், ஜோக்கர், சாயிரா ஆகிய மூன்று படங்களைக் குறிப்பிட்டு இவைதான் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சினிமா வணிக பகுப்பாய்வாளர் கோமல் நத்தாவை மேற்கோள் காட்டி வசூல் சாதனை பற்றி தெரிவித்த அமைச்சர் இதனால், பொருளாதாரம் வலுவாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:3 படத்தில் ரூ.120 கோடி வசூல்: "பொருளாதாரம் நல்லாதான் இருக்கு" - ரவிசங்கர் பிரசாத்

ஜப்பானில் 225 கி.மீ. வேகத்தில் புயல், 60 ஆண்டில் இல்லாத பாதிப்பு

படத்தின் காப்புரிமை Reuters

ஜப்பானில் 60 ஆண்டுகளில் காணாத கனமழை மற்றும் புயலால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக் கடந்தது.

இது கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கையால் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளிறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் 50 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளனர்.

மேலும் படிக்க:ஜப்பானில் 225 கி.மீ. வேகத்தில் புயல், 60 ஆண்டில் இல்லாத பாதிப்பு

பிகில் டிரைலர் வெளியீடு: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

சர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

பிகில் டிரைலர் சனிக்கிழமை வெளியானது.

செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள்." என்று பேசி இருந்தார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் பிகில் திரைப்படத்துடன் கைதி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க:”இந்த விளையாட்டாலதான் நம்ம அடையாளமே மாறப் போகுது” - பிகில் டிரைலர் வெளியீடு

தமிழ்நாடு - ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டுக்கும் சீனாவின் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையில் சகோதர மாநில உறவு ஒன்றை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கும் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய ஒரு கல்வி நிறுவனம் அமைக்கப்படும். ஏற்கனவே இந்தியாவின் அஜந்தா - சீனாவின் துன்ஹுவாங் இடையே இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவும் விரிவான தொடர்புகளை கணக்கில் கொண்டு கடல்சார் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழ்நாடு - சீனாவின் ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு

நிறைவுபெற்ற மோதி மற்றும் ஷி ஜின்பிங் சந்திப்பை அலசுகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :