சிரியா மீது துருக்கி தாக்குதல்: தனி நாடு கேட்டு போராடும் குர்து மக்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாறு

யார் இந்த குர்து இன மக்கள்?

துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது.

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர்.

இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஏன் அரசு இல்லை?

படக்குறிப்பு,

நீண்ட வரலாறு இருந்தபோதிலும், நிரந்தரமாக ஒரு நாடு எதையும் குர்து மக்களால் ஒருபோதும் அடைய முடியவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ``குர்திஸ்தான்'' என்று பொதுவாகக் குறிப்பிடும் - தாய் நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குர்து மக்கள் பலரும் யோசித்தனர். முதலாவது உலகப் போருக்குப் பிறகு, ஓட்டோமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு, வெற்றி பெற்ற மேற்கத்திய கூட்டுப் படையினர் 1920 ஆம் ஆண்டு பிரான்ஸில் செவ்ரெஸில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசு உருவாக்குவதற்கு வழி வகுத்தனர்.

மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. நவீன துருக்கியின் எல்லைகளை வரையறுத்த லாவ்சன்னே ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. தாங்கள் வாழும் நாடுகளில் குர்திஸ் மக்கள் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த 80 ஆண்டுகளில், சுதந்திரமான அரசை உருவாக்க குர்துகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், கடுமையாக அடக்கப்பட்டன.

ஐ.எஸ்.-க்கு எதிரான போரில் குர்துகள் ஏன் முன்னணியில் இருந்தனர்?

படக்குறிப்பு,

வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, இராக்கிய குர்திஸ்களான பெஷ்மெர்கா வீரர்கள் முன்னணியில் போரிட்டனர்.

2013 ஆம் ஆண்டின் மத்தியில், தனது கட்டுப்பாட்டில் வடக்கு சிரியாவில் இருந்த எல்லைக்குள் மூன்று குர்திஸ் வாழ்பகுதிகளை ஐ.எஸ். ஜிகாதி குழுவினர் குறி வைத்தனர். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர். சிரிய குர்திஸ் ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆயுதம் தாங்கிய மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளால் விரட்டப்படும் வரை அந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஜூன் 2014ல் வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறியதும், அந்த நாட்டு குர்து மக்களைச் சர்ச்சைக்குள் இழுப்பதாக இருந்தது. இராக்கிய ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு, தன்னாட்சி பெற்ற இராக்கில் குர்திஸ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம் தனது பெஷ்மெர்கா படைகளை அனுப்பியது.

ஆகஸ்ட் 2014-ல் ஜிகாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து பெஷ்மெர்கா படையினர் பல பகுதிகளிலிருந்து வாபஸ் ஆயினர். மத சிறுபான்மையினர் வசித்து வந்த பல நகரங்கள் வீழ்ந்துவிட்டன. குறிப்பாக சின்ஜரில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான யசிடிகளை கொலை செய்தனர் அல்லது சிறை பிடித்தனர்.

படக்குறிப்பு,

கொபானேவுக்கான போரில் துருக்கிய ராணுவத்தினர் தலையிடவில்லை.

அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் விமானத் தாக்குதலை வடக்கு இராக்கில் நடத்தி, பெஷ்மெர்காவினருக்கு உதவி செய்வதற்காக தங்களின் ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் (பி.கே.கே.) குர்திஷ் தன்னாட்சிக்காகத் துருக்கியில் மூன்று தசாப்தங்களாகப் போராடி வந்தன. இராக்கில் தளம் அமைத்திருந்த அவர்களும், உதவிக்கு வந்தனர்.

செப்டம்பர் 2014-ல் வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் கொபானே நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பல பத்தாயிரம் பேர் அருகில் உள்ள துருக்கிய எல்லைக்கு இடம் பெயர்ந்தனர். அருகிலேயே சண்டை நடந்தபோதிலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் துருக்கி மறுத்துவிட்டது. தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லை தாண்டிச் செல்ல துருக்கிய குர்திஷ்களுக்கும் அனுமதி தரவில்லை.

படக்குறிப்பு,

துருக்கிய அதிகாரிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்டுவிட்டனர் என்று சுருக்-கில் 2015ல் தற்கொலைப் படை தாக்குதல் நடந்த பிறகு, குர்திஷ் இனத்தவர்கள் குற்றஞ்சாட்டினர்

ஜனவரி 2015ல் குறைந்தது 1,600 பேர் கொல்லப்பட்ட சண்டைக்குப் பிறகு, கொபானே நகரை குர்திஷ் படைகள் மீண்டும் வசப்படுத்தின.

சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எப்.) கூட்டணி என்ற பெயரில் வந்த பல உள்ளூர் அரபு ராணுவப் பிரிவினருடன் சேர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை உதவிகளுடன் - குர்து இனத்தவர்கள் போராடி வட கிழக்கு சிரியாவில் பல பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடித்து, துருக்கியுடனான எல்லையில் பெரும் பகுதியில் கட்டுப்பாட்டை நிர்மாணித்தனர்.

அக்டோபர் 2017-ல் எஸ்.டி.எப். வீரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாகக் கருதப்பட்ட ரக்கா -வை கைப்பற்றி, தென்கிழக்கு பகுதியில் முன்னேறினர். ஜிகாதிகளின் கடைசி முக்கிய தளமாக இருந்த சிரியாவின் டெயிர் அல்-ஜவுர் மாகாணத்தை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

படக்குறிப்பு,

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எப்.) கூட்டுப் படையினர் ஐ.எஸ். களின் வலுவான ரக்கா-வைக் கைப்பற்றினர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடைசியாகப் பிடித்து வைத்திருந்த - பக்ஹோவ்ஜ் கிராமத்தை ஒட்டிய பகுதிகள் - மார்ச் 2019ல் எஸ்.டி.எப். வசம் வந்தன. ஐ.எஸ். `கலிபா'-வை `முழுமையாக அழித்துவிட்டதை' எஸ்.டி.எப். பெருமையுடன் அறிவித்தது. ஆனால், ஜிகாதிகளின் அமைதியாக இருக்கும் படைகள் உலகிற்கு ``பெரிய சவாலாக'' இருக்கும் என்று எச்சரித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டு கால போரில் சிறைபிடிக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களையும், இடம் பெயர்ந்த பல பத்தாயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளவர்களையும் கையாளும் பொறுப்பு எஸ்.டி.எப். வசம் அளிக்கப்பட்டது. அவர்களில் வெளிநாட்டவர்களைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவர்களின் பெரும்பாலான தாய்நாடுகள் அவ்வாறு கோரவில்லை.

இப்போது குர்து இனத்தவர்கள் துருக்கியின் ராணுவ அடக்குமுறையை எதிர்நோக்கியுள்ளனர். தனது எல்லையைப்பாதுகாக்க வட கிழக்கு சிரியாவுக்குள் 32 கிலோ மீட்டர் (20 மைல்) நீளத்துக்கு ``பாதுகாப்பு மண்டலம்'' அமைக்கவும், 2 மில்லியன் வரையிலான சிரிய அகதிகளை மறுகுடியமர்வு செய்யவும் துருக்கி விரும்புகிறது. ``என்ன நடந்தாலும்'' தங்கள் எல்லைகளைப் பாதுகாக்கப் போவதாக எஸ்.டி.எப். கூறுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான போரில் பெறப்பட்ட பகுதிகள் தற்போது ஆபத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

ரஷியாவின் பின்புலத்தைக் கொண்டிருக்கும் சிரியா அரசாங்கம், சிரியா முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக உறுதியாகக் கூறிவருகிறது

குர்துகளை துருக்கி ஏன் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது?

படக்குறிப்பு,

பி.கே.கே.தலைவர் அப்துல்லா ஒகேலானை 1999ல் இருந்து துருக்கி சிறை வைத்துள்ளது.

துருக்கி அரசுக்கும், மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ள அந்த நாட்டு குத்துகளுக்கும் இடையில் நீண்ட காலமாக, ஆழமான பகை உள்ளது.

பல தலைமுறைகளாக துருக்கிய அதிகார வர்க்கத்தினரால் குர்து மக்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். 1920கள் மற்றும் 1930களில் ஏற்பட்ட புரட்சிகளைத் தொடர்ந்து, குர்து மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டனர். குர்து பெயர்கள், ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. குர்து மொழி பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. குர்து என்ற இனம் இருந்தது என்பதை மறுக்கப்பட்டது. அந்த மக்கள் ``மலைப் பகுதி துருக்கியர்'' எனக் குறிப்பிடப்பட்டனர்.

1978-ல் அப்துல்லா ஒகேலன் பி.கே.கே.-வை உருவாக்கினார். துருக்கி நாட்டுக்குள் சுதந்திரமான அரசு தேவை என அவர் அழைப்பு விடுத்தார். ஆறு ஆண்டுகள் கழித்து, அந்தக் குழு ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அப்போது 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

படக்குறிப்பு,

பி.கே.கே. 1984ல் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து 40,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

1990களில் பி.கே.கே., சுதந்திரம் என்ற தனது கோரிக்கையைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பதிலாகக் கலாச்சார மற்றும் அரசியல் தன்னாட்சி தேவை எனக் கோரியது. ஆனால் அதற்காகத் தொடர்ந்து போராடியது. 2013 ஆம் ஆண்டில் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து, போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.

சிரிய எல்லை அருகே குர்திஷ்கள் அதிகம் வாழும் சுருக் -நகரில் 33 இளம் போராளிகள் உயிரிழப்புக்குக் காரணமாக 2015 ஜூலையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்தது. ஐ.எஸ். குழுவினர் அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. துருக்கி அதிகார வர்க்கத்தினர் கூட்டு சதியில் ஈடுபட்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறி, பி.கே.கே. குழுவினர் துருக்கிய ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து பி.கே.கே. மற்றும் ஐ.எஸ்.களுக்கு எதிராக ``பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த போர்'' என்ற பெயரில் துருக்கி அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கியது.

அப்பாதிருந்து, தென் கிழக்கு துருக்கியில் - பல்லாயிரம் பேர் - நூற்றுக்கணக்கான மக்களும் இதில் அடங்குவர் - கொல்லப்பட்டுள்ளனர்

படக்குறிப்பு,

துருக்கி ராணுவத்தினர் மற்றும் பி.கே.கே. இடையிலான போரில் சிஜ்ரே நகரம் சின்னாபின்னமாகிவிட்டது.

ஆகஸ்ட் 2016ல் இருந்து வடக்கு சிரியா பகுதியில் ராணுவத்தினர் இருப்பதைத் துருக்கி உறுதி செய்து வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சிரியா கலகப் படையினருக்கு ஆதரவாக தமது படைகள் மற்றும் ராணுவ டாங்குகளை அனுப்பியதிலிருந்து அதைப் பராமரித்து வருகிறது. எல்லையில் உள்ள ஜராப்ளஸ் என்ற முக்கிய நகரை அந்தப் படைகள் கைப்பற்றின. மக்கள் விடுதலைப் பிரிவினரின் தலைமையிலான எஸ்.டி.எப். பிரிவினர் அந்த எல்லையைக் கைப்பற்றி, மேற்கில் குர்திஷ்களின் ஆப்ரின் பகுதியுடன் இணைப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நகரம் கைப்பற்றப் பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஆப்ரினில் இருந்து மக்கள் விடுதலைப் பிரிவினரை வெளியேற்ற சிரியா கலகப்படையினருடன் கூட்டுச் சேர்ந்து துருக்கி ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஏராளமான பொது மக்கள் இதில் உயிரிழந்தனர். பல நூறு பேர் இடம் பெயர்ந்தனர்.

மக்கள் விடுதலைப் பிரிவும், பி.ஒய்.டி. பிரிவும் பி.கே.கே.வின் துணை அமைப்புகள் என்றும், ஆயுதப் போராட்டம் மூலம் பிரிவினையை ஆதரிப்பவை என்றும், அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்புகள் என்றும் துருக்கி அரசாங்கம் கூறுகிறது.

சிரியாவின் குர்து மக்கள் விரும்புவது என்ன?

படக்குறிப்பு,

சிரியாவின் குர்து பகுதிகளில் ஜனநாயக ஐக்கிய கட்சி (பி.ஒய்.டி.) செல்வாக்கு மிகுந்ததாக உள்ளது.

சிரியாவின் மக்கள் தொகையில் குர்து இனத்தவர்கள் 7 முதல் 10 சதவீதம் வரை உள்ளனர். 2011ல் அதிபர் பஷார் அல்-ஆசாத் -க்கு எதிராக புரட்சி உருவானதற்கு முன்னதாக, பெரும்பாலானவர்கள் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர்களிலும், தொடர்ச்சியான பகுதியாக அல்லாத கொபானேவை சுற்றிய பகுதிகளிலும், குவாமிஷ்லி நகரின் வடகிழக்குப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.

சிரியாவின் குர்து இன மக்கள் நீண்டகாலமாகவே அடக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தனர். 1960களில் இருந்து 300,000 பேருக்கு மேல் குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தனர். குர்திஷ் பகுதிகளை ``அரபு மயமாக்கும்'' முயற்சியாக, குர்திஷ்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து அரபு மக்களுக்கு வழங்கப்பட்டது.

புரட்சி பின்னர் உள்நாட்டுப் போராக உருவெடுத்தபோது, அப்போது பிரதானமாக இருந்த குர்திஷ் கட்சிகள் வெளிப்படையாகச் சார்பு நிலை எடுப்பதைத் தவிர்த்தன. 2012 மத்தியில், வேறு பகுதிகளில் கலகக்காரர்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததால் அரசுப் படைகள் திரும்பப்பெறப்பட்டநிலையில், குர்திஷ் குழுக்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன.

படக்குறிப்பு,

ஐ.எஸ். -க்கு எதிரான அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படையினரின் போரில் முக்கியமான தோழமையாக ஒய்.பி.ஜி. மாறியது.

ஜனவரி 2014-ல் குர்திஷ் கட்சிகள் - செல்வாக்கு மிகுந்த ஜனநாயக ஐக்கிய கட்சி (பி.ஒய்.டி.) உள்பட - ஆப்ரின், கொபானே மற்றும் ஜாஜிரா என்ற மூன்று ``சிறு பகுதிகளை'' தங்களுடைய ``தன்னாட்சி நிர்வாகங்களாக'' உருவாக்குவதாக அறிவித்தன.

மார்ச் 2016ல் ``கூட்டாட்சி அமைப்பு'' உருவாக்கப்படுவதாக அவை அறிவித்தன. ஐ.எஸ்.களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அரபு மற்றும் துருக்கிய பகுதிகள் இதில் பிரதானமாக இருந்தன.

இந்த அறிவிப்பை சிரியா அரசாங்கமும், சிரிய எதிர்க்கட்சிகளும், துருக்கி மற்றும் அமெரிக்காவும் நிராகரித்தன.

படக்குறிப்பு,

குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் கூட்டாட்சி அமைப்பு உருவாக்கப்படுவதாக 2016ல் அறிவிக்கப்பட்டது.

தாங்கள் சுதந்திரம் கோரவில்லை என்று பி.ஒய்.டி. கூறுகிறது. ஆனால் சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு அரசியல் தீர்வு உருவாக்கப்பட்டாலும், குர்திஷ் மக்களின் உரிமைகளுக்கும், குர்திஷ் தன்னாட்சிக்கும் சட்ட பூர்வ உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது ராணுவத்தின் மூலமாகவோ சிரியாவின் எல்லையில் ``ஒவ்வொரு அங்குலத்தையும்'' மீண்டும் கைப்பற்றுவோம் என்று அதிபர் ஆசாத் உறுதி தெரிவித்துள்ளார். குர்திஷ்களின் தன்னாட்சி கோரிக்கையை அவருடைய அரசு நிராகரித்துள்ளது. ``சிரியாவில் யாரும் தனிப்பட்ட அமைப்புகள் அல்லது கூட்டாட்சி பற்றிய பேச்சுகளை ஏற்க மாட்டார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.

இராக்கில் உள்ள குர்து மக்கள் சுதந்திரம் பெறுவார்களா?

படக்குறிப்பு,

கே.டி.பி.க்கும் இராக்கிய அரசுக்கும் இடையில் 1970ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம், நான்கு ஆண்டுகள் கழித்து முறிந்து போய்விட்டது.

இராக்கிய மக்கள் தொகையில் குர்து மக்கள் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ளனர். அருகில் உள்ள நாடுகளில் வாழும் குர்து மக்களைவிட, இவர்கள் வரலாற்றுப் பூர்வமாக அதிக அளவில் தேசிய உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் கொடூரமான அடக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

இராக்கில் தன்னாட்சி கேட்டுப் போராடுவதற்காக, 1946ல் முஸ்தபா பர்ஜானி என்பவர் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியை (கே.டி.பி.) உருவாக்கினார். ஆனால் 1961ல் தான் முழுமையான ஆயுதப் போராட்டமாக அதை மாற்றினார்.

படக்குறிப்பு,

1991 கலகம் நசுக்கப்பட்டதை அடுத்து 1.5 மில்லியன் இராக்கிய குர்து மக்கள் ஈரான் மற்றும் துருக்கிக்கு குடிபெயர்ந்தனர்.

1970களின் பிற்பகுதியில் குர்திஷ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அரசு அரேபியர்களைக் குடியமர்த்தத் தொடங்கியது. குறிப்பாக எண்ணெய் வளம் மிகுந்த கிர்குக் பகுதிகளைச் சுற்றி, குத்துகளைக் கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, இந்தக் குடியேற்றம் நடைபெற்றது.

ஈரான் - இராக் போர் நடைபெற்ற 1980களில் இந்தக் கொள்கை தீவிரமானது. அப்போது குர்து மக்கள் இஸ்லாமியக் குடியரசை ஆதரித்தனர். 1988ல் குர்துகள் மீது சதாம் உசேன் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்தார். ஹலாப்ஜாவில் ரசாயன தாக்குதல் நடந்ததும் அதில் அடங்கும்.

1991 வளைகுடா போரில் இராக் தோற்கடிக்கப்பட்ட போது, பர்ஜானியின் மகன் மஸ்ஸோவுத்தும், போட்டியாக இருந்த குர்திஸ்தான் தேசபக்தி யூனியனை (பி.யூ.கே.) சேர்ந்த ஜலால் டலபானியும் இணைந்து குர்திஷ் கலகத்தை ஏற்படுத்தினர். அவர்களின் தீவிரமான செயல்பாடு காரணமாக, வடக்கில் விமானங்கள் பறக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் குர்துகள் சுய ஆட்சி சுதந்திரத்தை அனுபவித்தனர். கே.டி.பி.யும், பி.யூ.கே.வும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டன. ஆனால் பதற்றங்கள் உருவானதால் 1994ல் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர் நான்கு ஆண்டுகள் நீடித்தது.

படக்குறிப்பு,

சதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு மஸ்ஸோவுத் பர்ஜானியின் கே.டி.பி.யும், ஜலால் டலபானியின் பி.யூ.கே.வும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டன.

2003ல் சதாம் ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பில் ஒத்துழைப்பு கொடுத்து, டாஹுக், இர்பில் மற்றும் சுலைமானியா மாகாணங்களை நிர்வகிக்க இரண்டு ஆண்டுகள் கழித்து குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தை (கே.ஆர்.ஜி.) உருவாக்கின.

மஸ்ஸோவுத் பர்ஜானி அந்தப் பிராந்தியத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இராக்கின் அரபு-அல்லாத முதலாவது மாகாணத் தலைவராக ஜலால் டலபானி பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 2017-ல் குர்திஸ்தான் பகுதியிலும், 2014ல் பெஷ்மெர்காவினரால் கைப்பற்றப்பட்ட சர்ச்சைக்குரிய கிர்குக் உள்ளிட்ட பகுதிகளிலும், சுதந்திரம் குறித்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு இராக்கின் மத்திய ஆட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அது சட்டவிரோதம் என்று அந்த அரசு கூறியது.

படக்குறிப்பு,

செப்டம்பர் 2017ல் நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில், குர்திஷ் வசம் இருந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுதந்திரத்துக்கு உறுதியாக ஆதரவு தெரிவித்தனர்.

வாக்களித்த 3.3 மில்லியன் மக்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள், பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாக்தாத் உடன் பேச்சு நடத்தத் தங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று கே.ஆர்.ஜி. அதிகாரிகள் கூறினர். ஆனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார்.

அதற்கடுத்த மாதத்தில், குர்துகள் வசமிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை, இராக் அரசின் ஆதரவுப் படைகள் மீண்டும் வசப்படுத்தின. சொந்த அரசு உருவாக்க வேண்டும் என்ற குர்திஷ் உயர் விருப்பங்களுக்கு, எண்ணெய் வளம் மிக்க கிர்குக் நகரம் மற்றும் அதன் வருவாய் இழப்பு பெரிய பின்னடைவாக அமைந்தது.

தன்னுடைய முயற்சி தலைகீழ் பலனைத் தந்துவிட்ட நிலையில், திரு. பர்ஜானி குர்திஸ்தான் பிராந்தியத்தின் அதிபர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் பிரதான கட்சிகளுக்கு இடையில் ஒப்புதலான கருத்துகள் ஏற்படாததால் ஜூன் 2019 வரையில் அந்தப் பதவி காலியாகவே இருந்தது. அப்போது அவருடைய அண்ணன் மகன் நெச்சிர்வான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :