விவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை

ஜப்பான் மனிதர் படத்தின் காப்புரிமை Getty Images

ஜப்பானை சேர்ந்த யூச்சி, காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. ஏன்? அவருக்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை.

மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாலீதீன் கவர் மட்டுமே அவருக்கு தேவை.

அந்த பாலீதீன் பைகள் மீது செடிகள் வளரும்; அது தண்ணீரையும், சத்துக்களையும் சேர்த்துக் கொள்ளப் பயன்படும்.

பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படும். அந்த பாலீதீன் கவர் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும்.

படத்தின் காப்புரிமை Mebiol

ஜப்பானில் ஆட்கள் பற்றாக்குறையும், விவசாய நிலங்கள் பற்றாக்குறையும் இருப்பதால் அவர்கள் இம்மாதிரியான புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அதனை சரி செய்து வருகின்றனர்.

"டயாலிஸிஸ் முறையில் ரத்தத்தை வடிகட்ட பயன்படுத்தப்படும் பாலீதின் கவரை நான் பயன்படுத்திக் கொண்டேன்." என இந்த முறையை கண்டறிந்த அறிவியலாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவரின் நிறுவனமான மிபியோல், இந்த தொழில்நுட்பத்தின் உரிமையை வைத்துள்ளது. இது 120 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள விவசாய நிலங்கள் தற்போது தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் பயிர்களைப் பாதுகாக்கவும், பேணவும் துல்லியமான வழிமுறைகளை கண்டுபிடிப்பதே விவசாய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்காகும்.

யூச்சி மோரி கண்டுபிடித்துள்ள இந்த தொழில்நுட்பம், ஜப்பானில் 150 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விவசாய முறை, சுனாமியால் தேங்கிய பொருட்கள் மற்றும் பெரிய நில அதிர்வு மற்றும் அணு உலை விபத்தால் வெளியாகும் கதிர்வீச்சு இவற்றால் மண் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானின் வட கிழக்கு பகுதிகளில் பெரும் உதவியாக உள்ளது.

ரோபோட் தொழில்நுட்பம்

படத்தின் காப்புரிமை Yanmar

வரும் 2050ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 7.7 பில்லியனிலிருந்து 9.8 பில்லியனாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுகளை தயாரிக்கும் வர்த்தக வாய்ப்புகளுக்கு சர்வதேச அளவில் தேவை ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு இயந்திரங்களின் தேவையும் அதிகரிக்கக்கூடும்.

எனவே விவசாயத்தில் விதைகளை தூவும் பணிமுதல் அறுவடை செய்யும் பணி வரை மேற்கொள்ள 20 வகையான ரோபோக்களை உருவாக்க ஜப்பான் அரசு மானியம் வழங்கி வருகிறது.

ஹொக்கைடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இன்ஜின் தயாரிக்கும் நிறுவனமான யான்மர், ரோபோ ட்ராக்டர் ஒன்றை வடிவமைத்து வயலில் சோதனை செய்துள்ளது.

சென்சாரின் உதவியுடன் ஒரு நபர் ஒரு சமயத்தில் இரு டிராக்டர்களை இயக்கலாம்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான், ஜிபிஎஸ் மற்றும் வைஃபை கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் ரோபோக்களை உருவாக்கியது.

பெட்டி வடிவிலான அது, நீர் தேங்கியுள்ள வயலுக்கு சென்று தேங்கியுள்ள நீரில் ஆக்ஸிஜனை கூட்டும். அதனால் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தும் தேவையில்லை இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

குறைந்த ஆட்களே தேவை

இம்மாதிரியான தொழில் நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் ஜப்பான் பல இளைஞர்களை விவசாயப் பணியை நோக்கி இழுக்கிறது.

ஆட்கள் குறைவால் ஏற்படும் பொருளாதார சரிவையும் இது சரி செய்ய உதவுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜப்பானில் வயலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாக குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Mebiol

மேலும் ஒரு பணியாளரின் சராசரி வயது 67ஆக உள்ளது. மேலும் பல விவசாயிகள் பகுதி நேரத்தில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், ஜப்பானின் நில அமைப்பும், நாட்டின் உணவுத் தேவையில் வெறும் 40% மட்டுமே பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

சுமார் 85% நிலப்பகுதி, மலையாக உள்ளது. மீதியுள்ள நிலம் அரிசி மட்டுமே பயிர் செய்வதற்கு ஏதுவாக உள்ளது.

அரிசிதான் ஜப்பானின் முக்கிய உணவாக உள்ளது. மேலும் அரிசி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியமும் வழங்கி வருகிறது.

ஆனால் உணவு முறை வெகுவாக தற்போது மாறியுள்ளது.

அரிசி உண்பதில் குறைவு

தனிநபர் ஆண்டொன்றிற்கு அரிசி உண்ணும் அளவும் குறைந்துள்ளது. 1962ஆம் ஆண்டில் 118 கிலோவிருந்து 2006ஆம் ஆண்டு 60ஆக குறைந்துள்ளது. இதனால் ஜப்பானில் அரிசியை தவிர வேறு விதமான பயிர்களை விவசாயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பணிசெய்ய ஆட்கள் கிடைக்காத நிலையில் விவசாயிகள் தொழில் நுட்பத்தையும் சார்ந்துள்ளனர்.

எனவே பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதில் ட்ரோன்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு மனிதர் ஒரு நாள் முழுவதும் செய்யும் பணியை இந்த ட்ரோன்கள் அரை மணி நேரத்தில் செய்துவிடும்.

இம்மாதிரியான தொழில்நுட்பம், நிலம் இல்லாமலும் பயிர்செய்ய உதவுகிறது.

பசுமைகுடில் வாயுக்களை தயாரிப்பதிலும், மண் இல்லாமல் சத்துக்கள் நிறைந்த நீரில் செடிகளை வளர்ப்பது மூலமும் பழம் மற்றும் காய்கறி உற்பத்தியை அதிகரித்துள்ளது ஜப்பான்.

சிபாவில் உள்ள மிராய் குழுதான், இம்மாதிரியான தொழில்நுட்பத்தை முதன்முறையாக கண்டுபிடித்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நூறு மடங்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறது. சென்சார் கருவியின் உதவியுடன், செயற்கை வெளிச்சம், நீர் போஷாக்கு, கார்பன் டை ஆக்ஸைடின் அளவுகள் மற்றும் தட்ப வெப்பநிலை ஆகியவை கண்காணிக்கப்படும்.

இந்த செயற்கை வெளிச்சம், செடிகள் வேகமாக வளர உதவும். மேலும் முறையான கண்காணிப்பின் மூலம் பயிர்களில் ஏற்படும் நோயும் தடுக்கப்படுகிறது.

எனவே இம்மாதிரியாக செடிகளை வளர்க்கும் தொழிற்சாலைகள் ஜப்பானில் அதிகரித்துள்ளது. தற்போது 200 தொழிற்சாலைகள் அங்கு உள்ளன.

தொழில்நுட்ப உதவி

ஆப்ரிக்க நாடுகள் அரிசி உற்பத்தியை 2030ஆம் ஆண்டிற்குள் 50 மில்லியனாக உயர்த்த ஜப்பான் உதவி செய்து வருகிறது. ஏற்கனவே சில திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பலருக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக ஹெக்டர் ஒன்றுக்கு உற்பத்தி நான்கிலிருந்து ஏழு டன்களாக உயர்ந்தது. அதன்மூலம் வருமானமும் 20% உயர்ந்தது.

ஆப்ரிக்கா முழுவதும் விவசாய தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டு செல்வதில் ஜப்பான் கவனம் செலுத்தி வருகிறது.

படத்தின் காப்புரிமை Mebiol

வியட்நாம், மியான்மர் மற்றும் பிரேசிலுடனும் இணைந்து ஜப்பான் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் தனது நாட்டின் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதே ஜப்பானின் நோக்கம். 2050ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உணவு தேவையில் 55 சதவீதத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு வைத்துள்ளது.

இதை தொழில்நுட்பத்தைக் கொண்டும் சாதிக்க விரும்புகிறது ஜப்பான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்