துருக்கி - சிரியா மோதலை தடுப்போம்: ரஷ்யா உறுதி மற்றும் பிற செய்திகள்

சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் துருக்கிப் படையினர் அமெரிக்கத் தயாரிப்பான எம் 60 டாங்கிகளுடன் சிரியாவின் வட பகுதியில் மன்பிஜ் நகருக்கு வடக்கே உள்ள துக்கார் நகரின் வழியாக செல்கின்றனர். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் துருக்கிப் படையினர் அமெரிக்கத் தயாரிப்பான எம் 60 டாங்கிகளுடன் சிரியாவின் வட பகுதியில் மன்பிஜ் நகருக்கு வடக்கே உள்ள துக்கார் நகரின் வழியாக செல்கின்றனர். நாள்- அக்டோபர் 14, 2019.

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்தி வரும் நிலையில், துருக்கிக்கும், சிரியாவுக்கும் இடையில் மோதல்கள் நடப்பதை தடுக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

"இதனை ஏற்றுக்கொள்ள முடியாது...எனவே, நிச்சயமாக அனுமதிக்க முடியாது" என்று சிரியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் அலெக்ஸாண்டர் லாவ்ரென்ட்யேஃப் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த குர்து ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையை அழித்து அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பகுதியை உண்டாக்கும் நோக்கத்துடன் துருக்கி இந்த தாக்குதலைத் தொடுக்கிறது. ஐ.எஸ். படையினரை அழிக்கும் போரில் குர்து படையினர் உதவியைப்பெற்றுவந்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு முன்னதாக தமது படையை பின்வாங்கியது.

இந்நிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை.

இந்நிலையில், பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு ராணுவக் கூட்டாளியாகவும், ஆதரவாளராகவும் இருந்துவந்த ரஷ்யா இந்நிலையில் இந்த சண்டையைத் தடுக்கப்போவதாக கருத்துத் தெரிவித்துள்ளது முக்கியமான அரசியல் திருப்பமாகும்.

கடந்த வாரம் அமெரிக்க துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டதுதான், துருக்கிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய துருப்புகள் சிரியா மற்றும் துருக்கி படைப்பிரிவுகள் சந்திக்கும் பகுதியில் 2015ம் ஆண்டிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் அயின் இசா நகருக்கு அருகில் இருக்கும் அமெரிக்க தரைப்படைக்கு நெருக்கமாக வந்துள்ள துருக்கி தலைமையிலான படைப்பிரிவுகளை எதிர்கொள்ள ஃஎப்-15 போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

"அமெரிக்க துருப்புகளை அச்சுறுத்துவதில்லை" என்கிற ஒப்பந்தந்தை துருக்கி படையினர் மீறியுள்ளதாக ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிகாரி கூறியதென்ன?

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்ட அலெக்ஸாண்டர் லாவ்ரென்ட்யேஃப், "துருக்கி மேற்கொண்டுள்ள இந்த தாக்குதலை ஏற்றுகொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய ஒப்பந்தங்களின்படி, துருக்கி, சிரியாவுக்குள் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுதான் செல்லலாம். ஆனால், துருக்கி தற்போது சுமார் 30 கிலோமீட்டர் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாக கூறுகிறது. சிரியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த துருக்கிக்கு உரிமையில்லை. சண்டையை தவிர்க்க துருக்கியோடு சிரியா தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

குர்துகளுக்கும், சிரியாவுக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்பட உதவியுள்ளதை லாவ்ரென்ட்யேஃப் உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக ராணுவ உதவி அளிப்பதற்கு சிரியாவின் அரசுப் படைகளை தங்களின் எல்லைக்குள் குர்துகள் அனுமதித்துள்ளனர்.

விவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை

படத்தின் காப்புரிமை MEBIOL

ஜப்பானை சேர்ந்த யூச்சி, காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. ஏன்? அவருக்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை.

மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாலீதீன் கவர் மட்டுமே அவருக்கு தேவை.

அந்த பாலீதீன் பைகள் மீது செடிகள் வளரும்; அது தண்ணீரையும், சத்துக்களையும் சேர்த்துக் கொள்ளப் பயன்படும்.

பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படும். அந்த பாலீதீன் கவர் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும்.

செய்தியை வாசிக்க: விவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி: நரேந்திர மோதி திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர்

படத்தின் காப்புரிமை AFP

ஏழைகளின் வாழ்க்கையை, அவர்களின் அனைத்து சிக்கல்களையும் மற்றும் செழுமைகளையும் புரிந்து கொள்ளக் கடந்த 20 ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான பொருளாதார ஜோடியான அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃபலோவும் முயன்று வந்துள்ளனர்.

1961 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் பானர்ஜி.

வறுமை ஒழிப்பு தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் ஏழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளனர்.

ரகுராம் ராஜன், கீதா கோபிநாத், மிஹிர் எஸ் சர்மா ஆகியோருடன் இணைந்து "பொருளாதாரத்திற்கான இப்போதைய தேவை என்ன?" எனும் கட்டுரை தொகுப்பைத் தொகுத்துள்ளார்.

செய்தியை வாசிக்க: நரேந்திர மோதியின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த அபிஜித் பானர்ஜி - யார் இவர்?

இந்தியா - யாழ்ப்பாணம்: மீண்டும் விமான சேவை

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக தரையிறங்கியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் இன்று செவ்வாய்க்கிழமை தரையிறங்கியுள்ளது.

விமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.

செய்தியை வாசிக்க: இனி நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் போகலாம் - எப்படி?

அயோத்தி வழக்கு இன்று இறுதி விசாரணை - நீதிபதிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

அயோத்தி வழக்கில் செவ்வாய்க்கிழமை 39-வது நாளாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று புதன்கிழமை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

செய்தியை வாசிக்க: அயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை - நீதிபதிகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :