குர்து இன மக்கள் மீதான துருக்கி தாக்குதல்: டொனால்ட் டிரம்பை கடுமையாகச் சாடும் குடியரசு கட்சியினர்

குர்துகள் மீதான தாக்குதல்: டொனால்ட் டிரம்பை கடுமையாகச் சாடும் குடியரசு கட்சியினர் படத்தின் காப்புரிமை Getty Images

குர்து இன மக்கள் மீதான துருக்கி தாக்குதல்: டொனால்ட் டிரம்பை கடுமையாக சாடும் குடியரசு கட்சியினர்

சிரியா தொடர்பான அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கையை அமெரிக்க செனட் சபை தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா துருப்புகளைத் திரும்பப் பெற்றதை கொடுங்கனவென்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட்ச் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு எழுதிய ஒரு பத்தியில் விமர்சித்துள்ளார்.

ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த ஒருவரே டிரம்பை விமர்சித்துள்ளது பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்ன நடக்கிறது சிரியாவில்?

ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர்.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியிலிருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனை அடுத்து துருக்கி குர்துகள் வசம் இருக்கும் வடக்கு சிரியா மீது தாக்குதல் தொடுத்தது.

அமெரிக்கா செய்ததை சிரிய ஜனநாயக படை அந்த நேரத்தில் 'முதுகில் குத்தியதாக' கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்படியான சூழலில் துருக்கியின் எல்லைத் தாண்டிய தாக்குதலை நிறுத்த சிரியா அரசு தங்கள் படையை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சிரியாவில் வாழும் குர்து கிளர்ச்சியாளர்கள் கூறினர்.

பின் அமெரிக்காவும் துருக்கிக்குப் போர் நிறுத்தம் செய்யுமாறு அழுத்தம் தந்தது.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைப்பேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்துப் போர் நிறுத்தம் செய்யவும் துருக்கி ஒப்புக் கொண்டது. அதாவது, குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டது.

அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயினில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

மீள்குடியேற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போரின் காரணமாக வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்ட சிறுமி

துருக்கியால் பயங்கரவாதிகள் என்று கருதப்படும் குர்திஷ் போராளிகளை - வடக்கு எல்லையிலிருந்து விலக்கி, அந்தப் பகுதியில் தற்போது துருக்கியில் உள்ள இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீள்குடியமர்த்த ஒரு "பாதுகாப்பான மண்டலத்தை" உருவாக்குவதே அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் செயல்பாடுகளின் நோக்கமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சண்டை தொடங்கியதிலிருந்து 160,000 முதல் 300,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது, மேலும் துருக்கிய செயல்பாடுகளால் உள்ளூர் குர்து இனம் அழிய வழிவகுக்கும் என்ற அச்சங்கள் நிலவுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அக்டோபர் 9 ஆம் தேதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து துருக்கி மற்றும் அதனுடன் இணைந்த பயங்கரவாதிகளால் ஏற்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் கவலை அதிகரித்து உள்ளது. சிரியாவில் துருக்கியப் படைகள் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியுள்ளன என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிட்ச் மெக்கனெல் கூறுவது என்ன ?

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில், அமெரிக்கா துருப்புக்களைத் திரும்பப் பெற்றது ''கடுமையான யுக்தி என்ற பெயரில் செய்த தவறு'' என்று ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான செனட் பெரும்பான்மைத் தலைவர் மெக்கனெல் குற்றம் சாட்டியுள்ளார்.

துருக்கி தாக்குதல் மற்றும் அமெரிக்கா துருப்புகளைத் திரும்பப் பெற்றது உள்ளிட்டவை , இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் ஐ .எஸ் குழுவுக்கு எதிரான வாஷிங்டனின் நடவடிக்கையை "பின்னுக்குத் தள்ளிவிட்டன". இந்த பின்வாங்கும் நடவடிக்கையால் ரஷியா மற்றும் ஈரானின் செல்வாக்கு இந்த பிராந்தியத்தில் வளர வழிவகுக்கும் என்றும் மெக்கனெல் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமை அன்று, அதிபர் டிரம்ப் ,''அவர்கள் எல்லையில் பிரச்சினை உள்ளது"என்று அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர், " இது நம் எல்லை அல்ல. இதற்கு மேல் நாம் உயிர்களை இழக்கக்கூடாது" என்றும் தெரிவித்தார்.

குர்துக்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல என்றும் டிரம்ப் கூறி இருந்தார்.

சிரியா விவகாரத்தில் அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கையை விமர்சிக்கும் சமீபத்திய குடியரசு கட்சிக்காரர் மெக்கனெல் ஆவார். பொதுவாக அதிபர் டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிர நட்புடன் இருக்கும் செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதைக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

போர்க்குற்றங்கள்

தாக்குதல் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இறந்தவர்கள் பட்டியலில் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளைச் சேர்ந்த 224 உறுப்பினர்களும், 183 துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் , 72 பொதுமக்களும் அடங்குவர். குறைந்தது 20 துருக்கிய பொதுமக்களும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியாவில் துருக்கியப் படைகள் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியதாக சில செய்தித்தாள்களில் வந்த செய்திகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்