சீனாவின் வரலாற்றுக்கு சவால் விடுக்கும் புதிரான பழங்கால உருவம்

சீனாவின் வரலாற்றுக்கு சவால் விடுக்கும் புதிரான பழங்கால உருவம் படத்தின் காப்புரிமை Getty Images

சிறகுகள் சேர்த்து உருவாக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த, விகாரமான முகத்தைக் கொண்ட உருவம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பெரிய விலங்கின் மீது அமர்ந்து செல்லும் காட்சி.

அவர் வலிமை மிக்கவராக இருக்கலாம், அநேகமாக கற்பனைக்கு எட்டாதவராகவும் இருக்கலாம். ஏனெனில் கூரான பற்களைக் கொண்ட, துருத்திக் கொண்டிருக்கும் கண்களைக் கொண்ட அந்த விலங்கை அவர் சிரமம் இல்லாமல் கையாள்வது போல உள்ளது. உண்மையில் அது யார்? மாந்திரீகரா? கடவுளா? சீனாவின் வரலாறு குறித்து காலம் காலமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கால நிர்ணயத்தை வரலாற்றாளர்கள் மறு ஆய்வு செய்யும் கட்டாயத்தை இது ஏற்படுத்தியிருப்பதன் காரணம் என்ன?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனாவின் மகத்தான பொக்கிஷங்கள், என்ற ஆறு பகுதிகளைக் கொண்ட தொலைக்காட்சி ஆவணப்படத்தை பிபிசி உலகச் செய்திகள் பிரிவுக்காக படமாக்கியபோது, அற்புதமான பழமையான பச்சை மாணிக்கக் கல்லில் செலுக்கப்பட்டிருந்த இந்த புதிரான உருவத்தை நான் பார்த்தேன். இப்போது அது ஹாங்ஜாவ் நகரில் ஜெஜியாங் மாகாண அருங்காட்சியகத்திற்குச் சொந்தமானதாக உள்ளது. ட்ஸ்-சாங் என்று குறிப்பிடப்படும், பச்சை மாணிக்கக் கல் உருளையான, வெளியில் சதுர அமைப்புடன், உள்ளே குழாய் போன்ற அமைப்புடன் உள்ளது.

தூண் போன்ற இந்த அமைப்பு மேல்தட்டு மக்களுக்கான கல்லறையில் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் மீட்கப்பட்டுள்ளது. ஷாங்காய்க்கு தென் மேற்கே சுமார் 100 மைல்கள் (160 கிலோ மீட்டர்) தொலைவில் புதிய கற்கால மனிதர்கள் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் செழிப்பாக வாழ்ந்த பகுதியில் இது கண்டெடுக்கப்பட்டது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வெண்கல காலத்தில் ஷாங் பகுதியில் ஆட்சி செய்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் சீனாவின் ஆதிகால மனிதர்கள் என்று பாரம்பரியமாக வரலாற்றாளர்கள் கற்பித்து வருகின்றனர்.

கலைநயமிக்க தொன்மையான கைவினைப் பொருட்கள் - பாரம்பரிய உணவு மற்றும் ஒயின் பாத்திரங்கள், அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான கோடாரிகள், இறுக்கமான முகங்கள் கொண்டவர்களைக் காட்டும் கலைப் பொருட்கள் - மஞ்சள் நதியின் கரையில் நவீன கால ஹெனான் மாகாணத்தில் ஷாங் நகரப் பகுதிகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவற்றில் முகத்தை மூடியிருக்கும், துருத்திக் கொண்டிருக்கும் கண்களைக் கொண்ட ராட்சத உருவாங்கள், `டாவோட்டி' (இதன் சரியான பொருள் பற்றி இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.) என்று கூறப்படும் வளைந்த கொம்புகள் கொண்ட உருவங்களுடன் அவை உள்ளன.

இருந்தபோதிலும் அனியாங்கின் கடைசி ஷாங் தலைநகருக்கு 600 மைல்களுக்கும் (965 கிலோ மீட்டர்கள்) அதிகமான தொலைவில் உள்ள யாங்ட்ஜே ஆற்றுப் படுகையின் கீழ்ப் பகுதியில் உள்ள லியாங்ஜ்ஹூ பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள், சீன வரலாற்றின் சரியான வரலாற்று காலத்தை வரிசைப்படுத்துவதாக உள்ளன.

தொல்லியல் நிபுணர்களைப் பொருத்த வரையில், லியாங்ஜ்ஹூ பகுதியில் பழங்காலத்தில் நடந்த குடியேற்றங்கள், ஷாங் உருவாக்கத்திற்கு 1,700 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்பாக இருந்த நாகரீகம் நிலவிய பகுதி என்று கருதப்படுகிறது. மேற்கில் ஏஜியன் கடல் பகுதியில் இருந்த பழங்கால சைக்ளாடேஸ் நாகரிகத்தை ஒட்டியதாக இருக்கும் இந்த நாகரிகம், கிழக்கு ஆசியாவில் மிகவும் தொடக்க நிலையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அன்றாடம் உணவைத் தேடியாக வேண்டும் என்ற நிலையில் இருந்து மாறிய பிறகு, லியங்ஜ்ஹூ மேல்தட்டு மக்களுக்கு கலைகளின் மீது மோகம் ஏற்பட்டது.

புகழ்பெற்ற ஷாங் `டாவோட்டி' கலைகளின் ஆரம்பம் தான் விலங்கு உருவிலான, தவளையைப் போன்ற விழிகளைக் கொண்ட ராட்ச உருவங்களைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். லியாங்ஜ்ஹு பகுதியில் இருந்து கிடைத்த கலைப் பொருட்களில் இவை இடம் பெற்றுள்ளன. ஜெஜியாங் மாகாண அருங்காட்சியகத்தில் நான் பார்த்த ட்ஸ்-சாங் என்ற தூண் போன்ற அமைப்பு 6.5 கிலோ (14.33 பவுண்ட்) எடையுள்ளதாக இருந்தது. இது `ட்ஸ்-சாங் -ன் ராஜா' என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லியாங்ஜ்ஹூவில் தொல்லியல் ஆய்வு நடந்த பகுதிகள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டன. இப்போது அழகிய லியாங்ஜ்ஹூ அருங்காட்சியகத்தில் அசாதாரணமான கலைப் பொருள்களின் அற்புதத்தை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இதை பிரிட்டன் கட்டடக் கலை வல்லுநர் டேவிட் சிப்பர்பீல்டு அமைத்துக் கொடுத்துள்ளார். இவற்றில் இன்னும் பல பச்சை மாணிக்கக் கல் பொருட்களும் உள்ளன. கோடாரிகளின் தலைப் பகுதிகள், கலைநயம் மிகுந்த சீப்புகள், நடுவில் துளையுள்ள வட்டமான தட்டுகள் பெரிய அளவிலான போலோ போன்றது)- இவை `பை' என்றும் குறிப்பிடப்படுகின்றன - இவையும் அதில் அடங்கும்.

மவுண்ட் டியன்மியு அடிவாரத்தில் அமைந்துள்ள லியாங்ஜ்ஹூவின் முதன்மையான குடியேற்றப் பகுதியான அங்கு, பாதுகாப்பு அரணுடன் கூடிய நகரமாக உள்ளது. சுமார் 740 ஏக்கர்கள் (299 ஹெக்டர்) பரப்பில் செவ்வக வடிவில் உள்ள இந்தப் பகுதி அகழிகளால் பாதுகாக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்சம் 65 அடி (19.8 மீட்டர்) அகலமான உறுதியான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு நீர் வழி நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் ஒரு நுழைவாயில் வழியே பயணிகள் நுழையலாம். தொல்லியலாளர்கள் கோலின் ரென்பிரெயூ மற்றும் பின் லியூ ஆகியோரின் சொற்களில் கூறுவதானால், ``இது சாலைகளைப் போன்ற எண்ணிக்கையில் கால்வாய்கள் நிறைந்த நகரம்'' என்பதாக உள்ளது.

மக்கள் வாழ்ந்த பகுதியின் சிறப்பு அடையாளம்?

படத்தின் காப்புரிமை Getty Images

லியாங்ஜ்ஹூ பகுதியில் தோராயமாக கி.மு. 3300-2300 காலத்தில் செழிப்பாக இருந்த ஆடம்பரமான நாகரிகம், உயர் அந்தஸ்தான கல்லறைகளில் கிடைத்த மதிப்பு மிக்க பொருட்களால் மட்டுமின்றி, மற்ற கட்டமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவும் தெரிய வருகிறது. நீர்ப் பாசனத்துக்கு கட்டப்பட்டுள்ள அணைகள், கால்வாய்கள், கவனமாக உருவாக்கப்பட்டுள்ள நெல் வயல்கள், அந்தப் பகுதியைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் எல்லாமே அந்தக் காலத்தைய நாகரிகத்தை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன.

நகரில் வாழ்ந்தவர்களுக்கு தொடர்ந்து உணவு கிடைப்பதை இந்த ஏற்பாடுகள் உறுதி செய்திருக்கின்றன. அந்தக் குடியேற்றப் பகுதியிலேயே கருகிய அரிசி கொட்டப்பட்டிருந்த பெரிய குழி ஒன்றையும் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ``அரண்மனையில் அவை சமைக்கப்பட்டு, பின்னர் கொட்டப்பட்டிருக்கலாம்'' என்று ரென்பிரெயூ மற்றும் லியூ கூறுகின்றனர்.

சமூகக் கட்டமைப்பு மற்றும் நீர்ப் பாசன நுட்பங்கள் காரணமாக லியாங்ஜ்ஹூ மக்களுக்கு நிறைய உபரியாக உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் நாகரிகத்துக்கான முக்கிய உந்துதல் ஏற்பட்டிருக்கிறது: அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது. தினமும் உணவைத் தேடியாக வேண்டிய நிலையில் இருந்து விடுதலை பெற்ற நிலையில், லியாங்ஜ்ஹுவில் வாழ்ந்த மேல்தட்டு மக்கள் கலைகள் மீது ஆர்வம் காட்டியுள்ளனர். வெட்டி எடுப்பதே கஷ்டம் என்ற நிலையில் உள்ள பச்சை மாணிக்கக் கல்லில், அற்புதமான கல்லறைப் பொருட்களை உருவாக்குவதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தின் மூலம் இது தெரிய வருகிறது.

ஜோவ் ஆதிக்க காலத்தில்தான் பச்சை மாணிக்கக் கல்லின் மதிப்பு உணரப்பட்டிருந்தது என்பது கடந்த காலத்தில் சீன அறிஞர்களின் நம்பிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து கிமு 1வது நூற்றாண்டில் ஷாங் காலத்தில் அதன் மதிப்பு உணரப்பட்டிருக்கிறது. லியாங்ஜ்ஹூவில் கிடைத்துள்ள ஆதாரங்கள், அதற்கு மாறுபட்ட தகவலை அளிப்பதாக உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

நான் பார்த்த- சுத்தமான கிரீம் நிறத்திலான நெப்ரைட் வகை மாணிக்கக் கல் - உண்மையிலேயே லியாங்ஜ்ஹூ மாணிக்கக் கற்கள் அனைத்தையும் விட சந்தேகத்துக்கு இடமில்லாமல் அற்புதமாக இருந்தன. மெல்லிய நுட்பங்களுடன் அது உருவாக்கப் பட்டிருந்த விதம் - அது பற்றி தெரியாதவர்களிடம், 20 ஆம் நூற்றாண்டில் நவீன சிற்பி கான்ஸ்டன்டைன் பிரான்குசியால் உருவாக்கப்பட்டது என்று கூறினால், மறுக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது. அந்தக் காலத்தில் அவ்வளவு கலை நயம் இருந்துள்ளதைக் காட்டுகிறது.

அந்த `மனிதன்/விலங்கு கலையம்சத்தின்' முக்கியத்துவம் என்னவென்று வரலாற்றாளர்கள் யாரும் விவரித்துள்ளார்களா? நல்லது, லியாங்ஜ்ஹூ தலத்தில் இருந்து எழுத்து பூர்வமான பதிவுகள் எதுவும் கிடைக்காத நிலையில், அறிஞர்கள் யூகித்து மட்டுமே கூற முடியும். இப்போதைக்கு, அந்த உருவம் கடவுளா அல்லது லியாங்ஜ்ஹூ மேல்தட்டு மக்களைச் சேர்ந்தவரா - இறகுகள் பொருத்திய தலைப் பாகை அணிந்தவர்- மாந்த்ரீகர் அல்லது மத குரு போன்றவரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

அல்லது, ``சமூக நிலைகளில் பார்த்தால், லியாங்ஜ்ஹூ பகுதியில் வர்த்தக சமுதாயத்தினரைக் குறிப்பிடும்'' கலைப் பொருளாகவும் இருக்கலாம் என்று ரென்பிரெயூ மற்றும் லியூ ஆகியோர் கூறுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், இந்தப் புதிரான வடிவம் பற்றிய கேள்விக்கான பதில், அது மேற்கத்திய ஆயுதக் கவசம் போன்ற, ஆட்சி முறையின் சிறப்பு அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்