உலக அளவில் நடைபெறும் போராட்டங்களில் பொதுவான அம்சம் என்ன?

சில்லி, ஹாங் காங் லெபனானில் நடைபெற்ற போராட்டங்கள்

பட மூலாதாரம், AFP/Getty/Reuters

சமீபத்திய வாரங்களில் லெபனான் தொடங்கி ஸ்பெயின் மற்றும் சிலி வரையில் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. எல்லாமே மாறுபட்டவை - வெவ்வேறு காரணங்கள், வழிமுறைகள், நோக்கங்களைக் கொண்டவை - ஆனால் அவை அனைத்தையும் இணைக்கும் பொதுவான சில அம்சங்கள் அவற்றில் உள்ளன.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பல நாடுகளில் ஒரே மாதிரி காரணங்களுக்காகப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. போராட்டங்களுக்கு எப்படி ஆயத்தம் செய்வது மற்றும் லட்சியங்களை எப்படி அடைவது என்பதில் ஒரு போராட்டத்தில் இருந்து இன்னொரு போராட்டத்துக்கு உத்வேகம் கிடைக்கிறது.

இப்போதைய பிரச்சனை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது - பெரும்பாலானவர்களை சாலைக்கு வந்து போராடச் செய்துள்ளவர்களை ஒன்று சேர்க்கும் அம்சம் எது?

சமத்துவமின்மை

தங்கள் நாட்டின் சொத்துகளில் இருந்து நீண்டகாலமாக தள்ளிவைக்கப் பட்டிருப்பதை எதிர்த்து போராடுபவர்களாக பலரும் உள்ளனர். பல நேர்வுகளில், முக்கிய சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு தான் கடைசியில் போராட்டத்தை தொடங்குவதற்கான உந்துதலைத் தந்திருக்கிறது. பல தசாப்தங்களாக வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியத்தை நிறுத்தப் போவதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஈக்குவடாரில் இந்த மாதம் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

பன்னாட்டு நிதியத்தில் (ஐ.எம்.எஃப்.) ஒப்புக்கொண்டபடி இந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தது. இதை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதனால் பொதுப் போக்குவரத்து செலவுகளும், உணவுப் பொருட்களின் விலைகளும் உயரும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். கிராமப்புற மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, எரிபொருளுக்கு மீண்டும் மானியம் வழங்க வலியுறுத்தி போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்தனர், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர், பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பல நாட்கள் தீவிரப் போராட்டம் நடந்ததை அடுத்து அரசு இறங்கி வந்தது. அந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

சிலியில் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது. கரன்சி மதிப்பு குறைந்ததாலும், எரிபொருள் விலை உயர்வாலும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்ததாக அரசு கூறுகிறது. ஆனால் ஏழைகளை நசுக்கும் சமீபத்திய நடவடிக்கை இது என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை பாதுகாப்புப் படையினருடன், போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில், வசதி படைத்தவர்கள் செல்லும் இத்தாலிய உணவகத்தில் அதிபர் செபஸ்டியன் பிரெய்ரா உணவருந்திக் கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகின. சிலி நாட்டு மேல்தட்டு அரசியல்வாதிகளுக்கும், தெருவில் உள்ள மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டுவதாக இது உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

லத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்று சிலி. ஆனால், அதிக சமத்துவமின்மை உள்ள நாடாகவும் உள்ளது - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (ஓஇசிடி) உறுப்பினர்களாக உள்ள 36 நாடுகளில், வருமான ஏற்றத்தாழ்வு மிக மோசமாக உள்ள நாடாக அது உள்ளது.

வருமான ஏற்றத்தாழ்வு

ஓ.இ.சி.டி. நாடுகளில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி சிலி நாட்டில் மிகவும் மோசமாக உள்ளது.

ஈக்குவடாரைப் போல, போராட்டங்களை அடக்கும் முயற்சியில், இந்த முடிவில் இருந்து அரசு பின்வாங்கி கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதிக கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்கின்றன.

பட மூலாதாரம், Reuters

``மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டும் இந்தப் போராட்டம் நடக்கவில்லை. பல ஆண்டுகளாக நீடித்த அடக்குமுறைகளுக்கு எதிரான, குறிப்பாக ஏழைகள் மீதான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக உள்ளது'' என்று போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரு மாணவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

லெபனானில் இதுபோன்ற போராட்டம் நடக்கிறது. வாட்ஸப் அழைப்புகளுக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொருளாதாரப் பிரச்சினைகள், சமத்துவமின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளை முன்வைத்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

கடன் அளவுகள் உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச நன்கொடையாளர்களிடம் இருந்து பெரிய அளவில் நிதி உதவிகள் பெறுவதற்காக, பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்ய அரசு முயற்சிக்கிறது. ஆனால், அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் தாங்கள் துன்புறுவதாக சாமானிய மக்கள் கூறுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசின் மோசமான நிர்வாகம் தான் காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

``வாட்ஸப் பிரச்சனைக்காக மட்டும் நாங்கள் போராட வரவில்லை. எரிபொருள், உணவு, ரொட்டி மற்றும் அனைத்து விஷயங்களுக்காகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்று பெய்ரூட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்துல்லா கூறினார்.

ஊழல்

அரசில் ஊழல்கள் அதிகரித்துள்ளன என்பது தான் போராட்டக்காரர்களில் பலரும் கூறும் குற்றச்சாட்டாக உள்ளது. சமத்துவமின்மைக்கு நெருக்கமான தொடர்பு கொண்டதாகவும் அது இருக்கிறது.

தாங்கள் பொருளாதார நெருக்கடியில் துன்பத்தில் உள்ள நிலையில், நாட்டின் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, லஞ்சம் மற்றும் சாதகமான பேரங்கள் மூலம், தங்கள் வசதியை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று லெபனானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.

``இங்கே பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் லெபனாலில் உள்ளதைப் போன்ற ஊழல் அரசாங்கத்தைப் பார்த்தது இல்லை'' என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 வயதான ரபாப் தெரிவித்தார்.

போராட்டத்தை அடக்கும் முயற்சியாக, அரசியல்வாதிகளின் சம்பளத்தைக் குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களின் தொகுப்புக்கு அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

தங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசியல் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரி இராக்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பணிகளுக்கு தகுதி அடிப்படையில் நியமனங்கள் செய்யாமல், இனம் மற்றும் வேண்டப்பட்ட குழுவினர் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

அரசியல் அமைப்பில் ஊழல் உள்ளதாக இராக்கில் மக்கள் போராடினர்

இதனால் அரசு பணத்தை தங்களுக்கும், தங்களைப் பின்தொடர்பவர்களுக்கும் ஒதுக்கிக் கொள்ள இது உதவியாக இருக்கிறது என்றும், பெரும்பாலான குடிமக்களுக்கு சிறிதளவு பயன் மட்டுமே கிடைக்கிறது என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

அரசு ஊழலுக்கு எதிராக எகிப்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அதிபர் அப்டெல் பட்டாஹ் அல்-சிசியும் ராணுவமும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, ஸ்பெயினில் தஞ்சம் புகுந்திருக்கும் எகிப்திய தொழிலதிபர் முகமது அலி விடுத்த வேண்டுகோளை ஏற்று செப்டம்பரில் அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.

சிசியும் அவருடைய அரசும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டு, சிக்கன நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மக்களின் கருத்துக்கு ஒத்திசைவு கொண்டதாக அமைந்துவிட்டது.

அரசியல் சுதந்திரம்

சில நாடுகளில் அரசியல் அமைப்பு முறை மீது கோபம் கொண்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த அரசியல் அமைப்பு தங்களை சிக்கலில் மாட்டிவிட்டது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த கோடையில் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடங்கின. குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்துக்கு உரியவர்களை, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பிரதான நாடான சீனாவுக்கு நாடு கடத்தி அனுப்ப வகை செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது. சீனாவின் ஓர் அங்கமாக ஹாங்காங் உள்ளது. ஆனால் அந்த மக்களுக்கு சிறப்பு சுதந்திரங்கள் உண்டு. சீனா கூடுதல் அதிகாரத்தை ஹாங்காங் மீது செலுத்த முயற்சிக்கிறது என்ற தீவிர சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிலி மற்றும் லெபனானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் போல, ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்திலும், சர்ச்சைக்குரிய மசோதா திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன. முழுமையான வாக்குரிமை, காவல் துறையினரின் கொடுமைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவது, கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அவர்களுடைய அணுகுமுறைகள் உலகின் பாதி அளவு அரசியல் இயக்கவாதிகளை ஈர்த்துள்ளது. கேட்டலான் பிரிவினைவாத தலைவர்களை சிறை வைத்ததைக் கண்டித்து தங்களது கோபத்தை வெளிக் காட்டுவதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் பால்சிலோனாவில் திரண்டனர். 2017ல் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக பிரிவினைவாதிகளுக்கு தேசதுரோக குற்றத்தின் கீழ் அக்டோபர் 14 ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பையும், அதைத் தொடர்ந்து வெளியான சுதந்திரப் பிரகடனத்தையும் ஸ்பெயின் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன.

சிறை தண்டனை அறிவிப்பு வெளியானதும், ஹாங்காங் போராட்டக்காரர்களைப் போன்ற போராட்டம் நடத்துவதற்கு பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்துக்குச் செல்லுமாறு, பார்சிலோனாவில் இருந்த ஏராளமானவர்களுக்கு ரகசிய குறியீடுகள் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.

அவர்கள் விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது, இளைஞர்கள் சிலர் ``ஹாங்காங் போல நாங்கள் செய்யப் போகிறோம்'' என்று முழக்கமிட்டனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் போதும், கண்ணீப் புகைக் குண்டுகள் வீசும் போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஹாங்காங் போராட்டக்காரர்கள் கையாண்ட அணுகுமுறைகளை விவரிக்கும் வகையில் கேட்டலான் போராட்டக்காரர்கள் இன்போகிராபிக்ஸ்களை விநியோகித்தனர். ``இப்போது மக்கள் தெருக்களுக்கு வர வேண்டும், எல்லா போராட்டங்களும் தெருக்களில் தான் தொடங்குகின்றன, ஹாங்காங்கை பாருங்கள்'' என்று பார்சிலோனா போராட்டக்காரர் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Reuters

நீங்கள் கேள்விப்படும் பல போராட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துடன் தொடர்பு இருந்திருக்கும். Extinction Rebellion அமைப்பைச் சேர்ந்த இயக்கவாதிகள் உலகெங்கும் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, பின்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் நடந்துள்ளன. சாலைகள் மற்றும் வாகனங்களை மறித்து கைகளை கோர்த்துக் கொண்டு, நின்று,பரபரப்பான நகரின் மையப் பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

``பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலையை நமது அரசு அறித்து, நம்மைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத வரையில், போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்று ஆஸ்திரேலிய இயக்கவாதி ஜேன் மோர்ட்டன் கூறினார்.

ஸ்வீடனை சேர்ந்த 16 வயதான கிரேட்டா டூன்பெர்க் தந்த உத்வேகத்தால், வாராந்திர பள்ளிக்கூட போராட்டங்களில் உலகெங்கும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

பள்ளிக்கூட சிறுவர்கள் முன்னெடுத்து கடந்த மாதம் நடத்திய உலகளாவிய பருவநிலை மாற்ற போராட்டத்தில் பல மில்லியன் பேர் கலந்து கொண்டனர். பசிபிக் தீவுகளில் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, மெல்போர்ன், மும்பை, பெர்லின், நியூ யார்க் போன்ற நகரங்களில் பெருமளவில் திரண்ட பேரணிகள் வரை அந்தப் போராட்டம் அமைந்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :