காஷ்மீர் பற்றிய மலேசிய பிரதமர் மகாதீரின் கருத்து: இந்திய - மலேசிய உறவில் விரிசல் பெரிதாகுமா?

மகாதீர் மொஹமத் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மகாதீர் மொஹமத்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐநா தீர்மானத்தைப் பின்பற்றி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து இந்தியா, மலேசியா உறவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிறு விரிசல் பெரிதாகுமா? அல்லது இந்தியா தொடர்ந்து மௌனம் காக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது என்று மகாதீர் அண்மையில் தெரிவித்த கருத்து இந்திய தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மலேசிய பாமாயிலை இந்தியா புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் பரவலாகச் செய்தி வெளியான வண்ணம் உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தீர்மானத்தைப் பின்பற்ற வலியுறுத்தும் மலேசியா

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிறார் பிரதமர் மகாதீர்.

"நாம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுகிறோம். அதிலிருந்து பின்வாங்குவதில்லை, மாற்றிப் பேசுவதும் இல்லை.

"ஐநா பேரவையின் தீர்மானத்தால் காஷ்மீர் மக்கள் பலன் அடைந்துள்ளதாக நாங்கள் (மலேசியா) கருதுகிறோம். எனவேதான் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளும் அந்தத் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்," என்று செவ்வாய்க்கிழமை (அக். 22) செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

இல்லையெனில், ஐநா என்ற அமைப்பை வைத்திருப்பதால் என்ன நன்மை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சில சமயங்களில் பரஸ்பர உறவுகள் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய சூழ்நிலையிலும் மலேசியா அனைவருடனும் நட்பு பாராட்டவே விரும்பும் என்றார்.

"நமது கருத்துக்கள் சிலருக்குப் பிடிக்கும் எனில், மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். எனினும் மக்களுக்காக நாம் பேசத்தான் வேண்டும்," என்று மகாதீர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்ததாகக் கருதப்படுகிறது.

இணக்கமான தீர்வு காண வேண்டும்: அடுத்த பிரதமராக கருதப்படும் அன்வார்

இந்நிலையில், மலேசியா, இந்தியா இடையேயான நல்லுறவில் திடீரென ஏற்பட்டுள்ள விரிசலுக்கு சுமூகமாக முறையில் தீர்வு காண வேண்டும் என மலேசியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுடன் நல்லிணக்கத்தைப் பேணுவது மலேசியப் பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று என அவர் கூறியுள்ளார்.

"காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மலேசியாவில் உள்ள ஒருதரப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கலாம். பிரதமர் எப்போதும் உறுதியான, சீரான கருத்துக்களையே தெரிவிப்பார். எனினும் இந்த விவகாரத்தில் இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்," என்கிறார் அன்வார்.

இருவழி வர்த்தகத்தில் மலேசியாவுக்கான ஆதாயம் அதிகம்

மலேசியா, இந்தியா இடையேயான வர்த்தகத்தைப் பொருத்தவரை ஒப்பீட்டளவில் மலேசியாவுக்கு தான் சாதகமாக உள்ளது. மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பை விட, இந்தியாவில் இருந்து மலேசியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு குறைவு தான்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாமாயில் விதை

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகச் சங்கம் திடீரென மலேசிய பாமாயிலை புறக்கணிக்குமாறு தனது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது வருத்தம் அளிப்பதாக பாமாயில் சார்ந்துள்ள தொழில்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள மலேசியாவின் முதன்மை தொழில்களுக்கான அமைச்சர் திரேசா கோக் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன்புதான் அக்குறிப்பிட்ட சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தாம் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாமாயில் இறக்குமதி தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

"இந்தியாவின் முக்கியமான வர்த்தக அமைப்பு மலேசிய பாமாயிலை புறக்கணிக்குமாறு கூறியிருப்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அச்சங்கம் தனித்து முடிவெடுக்காமல், இரு நாடுகளும் இணக்கமான தீர்வு காணும் வரை காத்திருக்க வேண்டும்," என்று திரேசா கோக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மிகச் சிறப்பான ராஜீய ரீதியிலான உறவும், வர்த்தக உறவும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுப்பூர்வமான தொடர்புகளும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

"இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு வாய்ப்புகளை மலேசிய அரசு ஆராய்ந்து வருகிறது. பாமாயிலுடன் மட்டும் இந்தியாவுடனான வர்த்தகம் முடிந்துவிடவில்லை.

"எண்ணெய், ஆட்டோமொபைல், மின்னணுப் பொருட்கள், உணவு மற்றும் ரசாயனம் என இருதரப்புக்கும் இடையேயான வர்த்தகத்தில் மேலும் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

"ஒரேயொரு வர்த்தக அமைப்பு இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தின் அடுத்த நகர்வு குறித்து பிரதமரும், மலேசிய வெளியுறவு அமைச்சரும் முடிவெடுப்பார்கள்," என்று அமைச்சர் திரேசா கோக் மேலும் தெரிவித்துள்ளார்.

கோகிலன்: காஷ்மீர் குறித்து மகாதீர் கருத்து ஆச்சரியம் அளிக்கிறது

இதற்கிடையே, இந்தியாவுடன் பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வந்த நிலையில், பிரதமர் மகாதீர் காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்து தமக்கு மட்டுமல்லாமல், மலேசியர்கள் பலருக்கும் மிகுந்த ஆச்சரியம் அளித்திருப்பதாகச் சொல்கிறார் மலேசியாவின் தோட்டப்புறம் மற்றும் மூலப்பொருள் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கோகிலன்.

இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதை பிரதமர் தவிர்த்திருக்கலாம் என்று பிபிசி தமிழிடம் ஏற்கெனவே தாம் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

படத்தின் காப்புரிமை KOHILAN/FACEBOOK
Image caption கோகிலன்

ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, இந்திய தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது மலேசியாவுக்கு பாதிப்பாக அமையும் என்று குறிப்பிடும் டத்தோ கோகிலன், இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் தீர்வு காணலாம் என்கிறார்.

"மிக மூத்த அரசியல்வாதியான எங்கள் பிரதமர் ஏன் காஷ்மீர் விவகாரம் குறித்து இப்படியொரு கருத்தை வெளிப்படுத்தினார் என்பது தெரியவில்லை. பாலஸ்தீன் விவகாரத்தில் கூட குறிப்பிட்ட தரப்பு தான் தவறு செய்தது என்று மலேசியா சுட்டிக்காட்டியதாக நினைவில்லை. எனவே இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டிருக்கக் கூடாது.

"மலேசியாவின் நான்காவது பிரதமராக மகாதீர் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவுடனான எங்களது உறவு மிகச் சிறப்பானதாக இருந்தது. இப்போதும் அவர் தான் எங்கள் பிரதமர். காஷ்மீர் விவகாரம் என்பது அன்று தொட்டு இன்று வரை நீடித்து வருகிறது. ஆனால் அன்று இது குறித்து பேசாதவர், இன்று திடீரென கருத்து தெரிவித்திருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

"மலேசிய பாமாயிலை அதிக அளவில் வாங்கி, ஆதரவு கொடுத்த நாடு இந்தியா. கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்தை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அச்சமயம் மலேசிய பாமாயிலின் விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்திருந்தது.

"அமைச்சர் கமல்நாத் இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். இந்திய அரசு பாமாயிலை அதிக அளவில் வாங்கி கைகொடுத்ததால் அதன் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. தற்போது பாமாயில் விலை ஏற்கெனவே வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், மலேசியப் பிரதமரின் கருத்தால் இந்திய தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.

25 சதவீதம் மலேசிய பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்படக் கூடும்

"என்னைப் பொறுத்தவரை இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மலேசிய பாமாயில் ஏற்றுமதி 20 முதல் 25 விழுக்காடு வரை பாதிக்கப்படலாம் என கணிக்கிறேன். ஏனெனில் இந்திய வர்த்தகர்கள் தான் பாமாயிலை அதிகளவு வாங்குகிறார்கள். தமிழகத்தில் கூட நான்கைந்து பெரிய நிறுவனங்கள் பாமாயிலை இறக்குமதி செய்கின்றன.

"தற்போது பாமாயிலுக்கு இந்திய அரசு 45 விழுக்காடு இறக்குமதி வரி விதித்துள்ளது. அது 50 விழுக்காடாக உயர்த்தப்படும் பட்சத்தில் மலேசியாவுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியா அதிகளவில் பாமாயில் வாங்கினால் தான் சர்வதேச சந்தையில் மலேசியாவுக்கு நல்ல விலை கிடைக்கும்.

"மேலும் மலேசியா தற்போது பதப்படுத்தப்பட்ட பாமாயிலை தான் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் பதப்படுத்தப்படாத பாமாயிலே போதும் என இந்தியா கூறி வருகிறது. ஏனெனில் அங்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அப்படி இருந்தும், மலேசியா நட்பு நாடு என்பதால் பதப்படுத்தப்பட்ட பாமாயிலையே இந்திய அரசு மலேசியாவிடம் வாங்கி வருகிறது என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்," என்று டத்தோ கோகிலன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மகாதீர் பேச்சால் மலேசியா - இந்தியா வர்த்தக உறவு தலைகீழாக மாறாது

ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில், உலக அரசியல் குறித்து ஐநா பேரவையில் இதர உலகத் தலைவர்கள் முன்னிலையில் தன் கருத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் முன்வைத்தது வழக்கமான நடைமுறை தான் என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (MAICCI - Malaysian Associated Indian Chambers of Commerce and Industry) பொதுச் செயலர் டத்தோ ஏ.டி.குமாரராஜா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை KUMARARAJAH TAMBYRAJA/ FACEBOOK
Image caption ஏ.டி.குமாரராஜா

இந்திய தரப்பில் ஏதேனும் எதிர்வினை இருந்தாலும், அதனால் மலேசியாவுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என்று பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.

"நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும் பட்சத்தில், பாமாயில் உற்பத்தியும் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்ப சந்தையில் பாமாயில் விலை தொடர்பாக ஏற்ற இறக்கங்கள் இருக்கக் கூடும். எனினும் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து காரணமாக ஏதேனும் தாக்கம் இருக்கும் என நான் கருதவில்லை," என்கிறார் ஏ.டி.குமாரராஜா.

அரசியல் தலைவர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்களை வர்த்தக தளத்திற்கு கொண்டு வந்து விவாதிப்பது தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்ட அவர், மலேசியாவுக்கு வலி கொடுக்கும் என்பதைக் கணக்கிட்டே சில தரப்பினர் பாமாயில் விஷயத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

"மலேசியா, இந்தியா இடையேயான வர்த்தக உறவு என்பது நீண்ட நாட்களாகவே நல்ல நிலையில் தான் உள்ளது. எனவே பிரதமர் தெரிவித்த ஒரு கருத்தின் காரணமாக இந்த நிலை தலைகீழாக மாறிவிடும் என நான் நம்பவில்லை. அந்தளவுக்கு நிலைமை மோசமடைய வர்த்தக அமைப்புகள் விட்டுவிடாது என்பதும் உண்மை.

"இந்திய தரப்பில் அதிருப்தி இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். பாமாயில் வாங்கப் போவதில்லை என இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், வர்த்தகர்கள் மத்தியில் தயக்கம் இருக்கவே செய்யும். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும்.

"இரு அரசுகளும் ஏதும் சொல்லாத நிலையில், இருதரப்பிலும் இந்த விவகாரத்தை வைத்து குளிர்காய நினைக்கும் சில தரப்பினர் குழப்பம் ஏற்படுத்தக் கூடும். தற்போதுள்ள சிறு அதிருப்தியால் நீண்ட கால அடிப்படையில் சேதாரம் ஏற்படும் என்று நம்பவில்லை. மலேசிய பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிடும் எனும் அளவிற்கு யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாமாயில் விதை தரும் மரம்.

"கடந்த ஆண்டு 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாமாயில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதியின் மதிப்பு 1.8 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

"ஆனால் மலேசியாவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் சீனாவின் முதலீட்டு உதவியோடு செயல்படுத்தப்பட இருந்த 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரயில் திட்டம் (ECRL), 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பண்டார் மலேசியா திட்டம் ஆகியவற்றை கைவிடுவதாக பிரதமர் அறிவித்தார். இவ்வளவு பெரிய தொகையுடன் ஒப்பிடும் போது பாமாயில் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த தொகையான 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது மிகக் குறைவானது தான். எனவே மலேசியாவின் பொருளாதாரத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

"சீனாவுடனான உறவு முற்றிலுமாக முடிந்து போகும் எனப் பலரும் ஆருடம் தெரிவித்தனர். ஆனால் இரு அரசுகளும் பொறுமை காத்ததில் முன்னை விட ஆக்கப்பூர்வமாக தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்தியாவுடனும் இப்படியொரு உறவு நீடிக்கும் என நம்புகிறேன்," என்றார் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (MAICCI) பொதுச் செயலர் டத்தோ ஏ.டி.குமாரராஜா.

முருகையா: மகாதீர் கருத்தை இந்திய அரசு புறந்தள்ள வேண்டும்

பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ள கருத்தின் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள இந்திய அரசு, மலேசிய பாமாயில் இறக்குமதியை குறைத்தாலோ, நிறுத்திவிட்டாலோ மலேசியா பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் என பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MURUGIAH/FACEBOOK
Image caption முருகையா

மலேசியப் பிரதமரின் பேச்சால் இந்தியாவுடன் பேணப்பட்டு வந்த நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

"துன் மகாதீர் இன்னும் குறுகிய காலம் தான் பிரதமராக இருப்பார். அதன் பிறகு புதிய பிரதமர் பொறுப்பேற்பதாக ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஒப்பந்தம் உள்ளது. எனவே மகாதீர் பேசியதை இந்தியா புறந்தள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

"இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சை சேர்ந்த அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண வேண்டும். தற்போது மலேசியாவில் மழைக்காலம் என்பதால் பாமாயில் உற்பத்தி அதிகரிக்கும். இந்த நேரம் பார்த்து இந்தியாவுடனான நல்லுறவு பாதிக்கப்படுவது மலேசியாவுக்கு நல்லதல்ல.

"அதே சமயம் இந்தியாவிடம் இருந்தும் மலேசியா சில பொருட்களை இறக்குமதி செய்கிறது. எனவே இருதரப்புக்குமே பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முத்தரசன்: மலேசியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் எனத் தோன்றவில்லை

மலேசிய பாமாயில் இறக்குமதி அளவை இந்தியா குறைக்கும் பட்சத்தில் மலேசியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.

படத்தின் காப்புரிமை MUTHARASU/FACEBOOK
Image caption முத்தரசு

மேலும் காஷ்மீர் குறித்து மலேசியப் பிரதமர் மகாதீர் தவறானப் புரிதலைக் கொண்டிருக்கிறாரா என்று பார்க்க வேண்டியிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.

"காஷ்மீர் குறித்து மலேசியப் பிரதமர் கூறிய கருத்துக்களால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய தரப்பு மூன்று விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. முதலில் மலேசிய பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரிக்கக்கூடும். இரண்டாவதாக இறக்குமதி அளவைக் குறைக்கும் வாய்ப்புண்டு. மூன்றாவதாக மலேசிய பாமாயிலைக் கடுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

"இத்தகைய நடவடிக்கைகளால் மலேசிய பாமாயிலின் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சந்தை நிலவரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் பாமாயிலுக்கான தேவை அதிகரித்துள்ளதே தவிர, குறைந்ததாகத் தெரியவில்லை.

"எனவே இந்தியா, மலேசிய பாமாயிலை வழக்கம் போல் கொள்முதல் செய்யவில்லை என்றாலும் மலேசியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏதும் இருக்காது என்றே தோன்றுகிறது. அதே சமயம் மலேசியாவை புறக்கணிக்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு தனது பாமாயில் தேவையை பூர்த்தி செய்து கொள்ள குறைவான தேர்வுகளே உள்ளன.

"மலேசியா இல்லையென்றால், இந்தோனீசியாவிடம் செல்வதே இந்தியாவுக்கான மாற்று ஏற்பாடாக இருக்கும். ஆனால் இந்தியாவின் தேவையை கடந்த பல ஆண்டுகளாக மலேசியா கச்சிதமாகப் பூர்த்தி செய்து வந்தது போல், இந்தோனீசியாவால் இயலுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

"அதே சமயம் இந்தியாவில் பாமாயில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மகாதீர் சொன்ன ஒரு கருத்தால் நாடு முழுவதும் உள்ள பாமாயில் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட வேண்டுமா? என்று இந்திய அரசு யோசிக்க வாய்ப்புண்டு," என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிட்டதே இல்லை

காஷ்மீர் விவகாரத்தில் மகாதீர் கருத்து தெரிவித்திருப்பது மலேசிய மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருப்பதாகவும் இவர் கூறுகிறார். மலேசியாவைப் பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளில் இஸ்‌ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் மட்டுமே உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், வேறு எந்தவொரு நாட்டின் விவகாரங்களிலும் மலேசியா தலையிட்டது இல்லை என்றும் முத்தரசன் சுட்டிக் காட்டுகிறார்.

"காஷ்மீர் விவகாரத்தில் மலேசியப் பிரதமரின் புரிதல் தவறாக இருக்கலாம் எனப் பலரும் கருதுகிறார்கள். ஏனெனில் காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா என்று மகாதீர் குறிப்பிடுவது சரியல்ல. இது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு அவருக்கு தவறான கோணத்தில் விளக்கம் அளித்திருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.

"காஷ்மீரை அன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டே இந்தியாவுடன் இணைத்துள்ளனர். அங்கு பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், ஆட்சி செய்தது ஒரு இந்து மன்னர் என்பதும் தான் பிரச்சினையின் துவக்கப் புள்ளியாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

"எனவே காஷ்மீர் குறித்த தமது கருத்தை பிரதமர் மகாதீர் திரும்பப் பெறுவாரா? அல்லது மலேசிய வெளியுறவு அமைச்சு அதில் திருத்தங்கள் செய்யுமா? என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்றார் முத்தரசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :