நஸ்ரத் ஜஹான் ரஃபி: இளம்பெண்ணை தீவைத்து எரித்த வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை

நஸ்ரத் ஜஹான் ரஃபி படத்தின் காப்புரிமை FAMILY HANDOUT
Image caption நஸ்ரத் ஜஹான் ரஃபி

தனது ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பிறகு, தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட மாணவி தொடர்பான வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஃபெனி என்ற கிராமத்தில், 19 வயதான நஸ்ரத் ஜஹான் ரஃபி எனும் மாணவி கடந்த ஏப்ரல் மாதம் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

நஸ்ரத்தின் மரணம் வங்கதேசத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நஸ்ரத்துக்கு நீதி கோரி அந்த நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

வங்கதேசத்தை பொறுத்தவரை, இதுபோன்ற வழக்குகள் நடந்து முடிவதற்கு பல்லாண்டுகள் ஆகும். இருப்பினும், நஸ்ரத் மரணம் தொடர்பான வழக்கின் தீவிரம் காரணமாக ஆறே மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. "வங்கதேசத்தில் கொலை செய்தவர்கள் யாரும் தப்பித்துவிட முடியாது என்று இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது" என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் வழக்கறிஞர் ஹபிஸ் அஹ்மத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையின்போது, நஸ்ரத்தை அமைதி காக்க செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தில், அவரது இரண்டு வகுப்பு தோழிகள் மற்றும் அதே பகுதியை செல்வாக்கு மிக்க சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நஸ்ரத் புகார் செய்த பின், பதவி பறிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் சிராஜ் உத் டூலா உட்பட மூன்று ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பிறகு அங்கிருந்தே அவர்கள் நஸ்ரத்தை கொலைசெய்வதற்கு ஆட்களை ஏவியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த மூன்று ஆசிரியர்கள், இரண்டு வகுப்பு தோழிகள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த இரண்டு உள்ளூர் தலைவர்கள் உள்பட 16 பேர் இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர்.

மேலும், தற்போது தண்டனை பெற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து, நஸ்ரத் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக தவறான தகவலை சில உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் பரப்பியதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த காவல்துறை அதிகாரிகள் நஸ்ரத் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்