இங்கிலாந்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து அகற்றப்பட்ட 39 சடலங்கள்

39 உடல்கள் இருந்த இங்கிலாந்து கண்டெய்னர்.

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்த 39 பேரின் சடலங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

சீன குடிமக்கள் என்று கருதப்படும் 11 பேரின் உடல்கள் டில்பர்ரி துறைமுகத்தில் இருந்து செலம்ஃபேர்டிலுள்ள புரூம்ஃபீல்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்களை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 25 வயதான லாரி ஓட்டுநர் ராபின்சனை விசாரிக்க மேலதிக நேரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை புலனாய்வின் அடுத்த கட்டமாக இருக்கும்.

பிரிட்டன் நேரப்படி 24ம் தேதி மாலை 7:41 மணிக்கு துறைமுகத்தில் இருந்து இந்த சடலங்கள் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டன.

வடக்கு அயர்லாந்தை சேர்ந்த இந்த ஓட்டுநரோடு தொடர்புடைய 3 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இதனை குற்ற குழுக்கள் ஒருங்கிணைந்து செய்தனவா என்ற கோணத்திலும் தேசிய குற்ற முகமை ஆராய்ந்து வருகிறது.

பட மூலாதாரம், PA Media

முன்னதாக, இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் ராபின்சனிடம் தொடர்ந்தது விசாரணை நடைபெற்று வருகிறது.

வடக்கு அயர்லாந்தில் அதிகாரிகள் மூன்று இடங்களை சோதனை செய்துள்ளனர். மேலும் திட்டமிட்டு குற்றங்களை செய்யும் கும்பல்களின் தலையீடு இதில் இருக்க வாய்ப்புள்ளதாக தேசிய குற்றவியல் முகமை கூறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு ஈஸ்டர்ன் அவென்யூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் இந்த இறந்த உடல்கள் அடங்கிய கண்டெய்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

புதன்கிழமை அன்றே டில்பரி டாக்ஸில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்கு லாரியை கொண்டுசென்றனர். மீட்கப்பட்ட உடல்களை பாதுகாத்து நடந்தது என்ன என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 39 உடல்களையும் ஆராய்ந்து இறந்தது யார் யார் என்று அடையாளம் காண்பது "மிக நீண்ட செயல்முறையாக இருக்கும்" என்று எஸ்செக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

முதலில் பல்கேரியாவிலிருந்து இந்த லாரி வந்ததாக எசெக்ஸ் காவல்துறையினர் சந்தேகித்தனர், ஆனால் பிறகு அது பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் நினைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த லாரி ஐரிஷ் குடியுரிமையுள்ள ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் தங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பல்கேரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இறந்தவர்களின் சடலங்கள் எப்போது கன்டெயினருக்கு மாற்றப்பட்டது அல்லது இந்த சம்பவம் பெல்ஜியத்தில் நடந்ததா என்ற தெளிவு இன்னும் கிடைக்கவில்லை என்று பெல்ஜியன் ஃபெடரல் அரசு வழக்குரைஞர் அலுவலகம் கூறியுள்ளது.

இது "கற்பனை செய்யமுடியாத சோகம். இது உண்மையிலேயே இதயத்தை நொறுக்குகிறது " என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு , ஜூன் 2000ல், சீனக் குடியேறிகள் 58 பேர் மூச்சுத் திணறி இறந்த நிலையில் டோவர் எனும் இடத்தில் கண்டெயினர் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டில், ஆஸ்திரிய நெடுஞ்சாலையில் தனியாக நின்ற ஒரு லாரியில் 71 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வாகனம் பல்கேரிய-ஹங்கேரிய ஆள் கடத்தல் கும்பலின் செயலாக இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :