அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் காட்டுத்தீ - அச்சத்தில் மக்கள் மற்றும் பிற செய்திகள்

காட்டுத்தீயால் எரியும் ஒரு வீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

காட்டுத்தீயால் எரியும் ஒரு வீடு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடுமையான காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அப்பகுதியில் இருந்து சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் சோனோமா பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள இந்த கின்காட் தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று மாநில தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

பெருங்காற்றால் பரவி வரும் இந்த காட்டுத்தீ தெற்கு நோக்கி நகர்வதாக கலிஃபோர்னியா தீயணைப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 100 பேரை பலி வாங்கிய காட்டுத்தீயில் இருந்து கலிஃபோர்னியா இன்னும் மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சான் பிரான்சிஸ்கோவின் வடக்கில் சுமார் 75 மைல் இந்த காட்டுத்தீ பரவி வருகிறது.

கருணாநிதியை நினைவுபடுத்திய சரத் பவார்: மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய கட்சிகள் சாதித்ததும், சறுக்கியதும்

பட மூலாதாரம், BBC/Getty Images

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணித்த நிலையில், கடந்த முறை 122 தொகுதிகளை வென்ற பாஜக தற்போது 105 தொகுதிகள் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது,

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானி மரணம்

பட மூலாதாரம், Getty Images

2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் காலமானார்.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.

காஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்றவந்த இரண்டு லாரி டிரைவர்கள் சுட்டுக் கொலை

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்துக்கு ஆப்பிள் ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த இரண்டு லாரி டிரைவர்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு டிரைவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

கடந்த இரு வாரங்களில் லாரி டிரைவர்கள் மீது இது போன்று தாக்குதல் நடப்பது இது மூன்றாவது முறை

இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் ராபின்சனிடம் தொடர்ந்தது விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :