TWA85: 'உலகின் மிக நீண்ட, நேர்த்தியான விமானக் கடத்தல்'

  • ரோலண்ட் ஹியூஸ்
  • பிபிசி நியூஸ்
மைனேவின் பாங்கூர் விமான நிலையத்தில் கடத்தப்பட்ட TWA85 ஐ விமான அதிகாரி நோர்மன் கெய் பார்வையிடுகிறார்

பட மூலாதாரம், Bangor Daily News

படக்குறிப்பு,

மைனேவின் பாங்கூர் விமான நிலையத்தில் கடத்தப்பட்ட TWA85 ஐ விமான அதிகாரி நோர்மன் கெய் பார்வையிடுகிறார்

விமானக் கடத்தல்கள் தொடர் கதையாக இருந்த 1960களில் அமெரிக்காவில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை விமானக் கடத்தல் நடந்துள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே வாரத்தில், ரபேலே மினிசியெல்லோ என்பவர் ``நீண்ட நேர மற்றும் அதிக கவனத்தை ஈர்த்த'' கடத்தல் சம்பவத்துக்குக் காரணமாக இருந்தார். அந்த கால கட்டத்தில் அப்படித்தான் விவரிக்கப்பட்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்தவர்கள் அவரை மன்னிப்பார்களா?

21 ஆகஸ்ட் 1962

இத்தாலியின் தெற்குப் பகுதியில் மலைகளின் அடிவாரத்தில், நேப்பிள்ஸ் நகருக்கு வடகிழக்கில், திடீரென பூமி அசையத் தொடங்கியது. ஐரோப்பாவில் அடிக்கடி நில அதிர்வு நடைபெறும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அது பழக்கமான விஷயம் தான். 6.1 அளவிற்கான அந்த நில அதிர்வு மாலை நேரத்தின் தொடக்கத்தில் நடந்தபோது எல்லோருமே பயந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த இரண்டு நில அதிர்வுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

நில அதிர்வு மையம் கொண்ட பகுதியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில், வடக்கில் சில நூறு மீட்டர்கள் தொலைவில் மினிசியெல்லோவின் குடும்பம் வசித்து வந்தது. 12 வயது சிறுவன் ரபேலேவும் அதில் ஒருவனாக இருந்தான். மூன்றாவது நில அதிர்வு அடங்கியபோது, அவர்கள் வசித்த மெலிட்டோ இர்ப்பினோ கிராமம், மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. மினிசியெல்லோ குடும்பத்திற்கு எதுவும் மிச்சமாகக் கிடைக்கவில்லை. அதிகாரிகள் யாரும் உதவிக்கு வரவில்லை என்று பின்னர் ரபேலே நினைவுகூர்ந்தார்.

ஏறத்தாழ கிராமம் முழுக்கவே காலியாகும் அளவுக்கு மோசமான பாதிப்பாக இருந்தது. எல்லாம் தரைமட்டமாகிவிட்டன. மீண்டும் புதிதாகக் கட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. பல குடும்பங்கள் திரும்பி வந்தன. ஆனால் மினிசியெல்லோ குடும்பம் நல்ல வாழ்க்கை தேடி அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்தது.

அங்கே போர், மன அழுத்த சூழ்நிலைகள், அதிகமான கெட்ட செயல்கள் ஆகியவற்றைத் தான் அவர் கண்டார்.

01:30; 31 அக்டோபர் 1969

தோற்றத்தை மறைக்கும் வகையில் உடையணிந்திருந்த ரபேலே மினிசியெல்லோ 15.50 டாலர் கட்டணம் செலுத்தி வாங்கிய டிக்கெட்டுடன் லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் நுழைந்தார்.

அமெரிக்காவில் டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் 85-ன் பயணத்தில் அதுதான் கடைசியாகச் செல்லும் இடமாக இருந்தது. செயின்ட் லூயிஸ் மற்றும் கன்சாஸ் நகரங்களுக்கு முன்னதாக பால்டிமோரில் பல மணி நேரங்கள் முன்னதாக அது புறப்பட்டது.

விமானிகள் அறையில் இருந்த மூன்று பேருக்கு, பெண் விமான உதவியாளர்கள் உதவி செய்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களாக இருந்தனர். மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 23 வயதான, பாப் கட்டிங் செய்திருந்த, சார்லெனே டெல்மோனிகோ என்பவர் தான் அதிக அனுபவம் கொண்டவராக இருந்தார். முன்னோர் வழிபாடு நிகழ்ச்சி நாள் இரவில் விடுமுறை எடுத்துக் கொள்ள வசதியாக அவர் பணியை வேறொருவருடன் மாற்றிக் கொண்டிருந்தார்.

கன்சாஸ் நகரில் இருந்து புறப்படுவதற்கு முன்பு 31 வயதான கேப்டன் டொனால்டு குக் விமான உதவியாளர்களிடம், வழக்கமான ஒரு நடைமுறையில் மாற்றத்தைத் தெரிவித்தார்: விமானிகள் அறைக்குள் நுழைய விரும்பினால் கதவைத் தட்டக் கூடாது என்றும், கதவுக்கு வெளியில் இருந்து பெல் அடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னிரவில் விமானம் லாஸ் ஏஞ்சலீஸில் தரையிறங்கியது. பயணிகள் இறங்கிச் சென்றது போக, மற்றவர்கள் களைப்புற்ற கண்களுடன் காணப்பட்டனர். சான் பிரான்சிஸ்கோவுக்கான குறுகிய இரவு நேரப் பயணத்தில் அவர்கள் சேர்ந்து கொண்டனர். விமானத்தில் இருந்தவர்கள் தூக்கத்தைத் தொடர்வதற்கு வசதியாக, விளக்குகள் வெளிச்சம் குறைக்கப்பட்டது. பயணிகள் வந்தபோது விமான உதவியாளர்கள் அமைதியாக அவர்களுடைய டிக்கெட்களை சரிபார்த்தனர். ஆனால் புதிதாக வந்தவர்களில் ஒருவரை, குறிப்பாக அவருடைய பையின் மீது டெல்மோனிகோ சிறப்பு கவனம் செலுத்தினார்.

அடையாளத்தை மறைக்கும்படி உடை அணிந்திருந்த அந்த இளைஞர் , அலைபாயும் பிரவுன் நிற முடிகளைக் கொண்ட அவர் பதற்றமாக இருந்தார். ஆனால் உள்ளே வரும்போது சாந்தமாகக் காணப்பட்டார். அவருடைய பின்பக்கத்தில் இருந்த பாக்கெட்டில் தடிமன் குறைந்த ஒரு பொருள் துருத்திக் கொண்டிருந்தது.

டெல்மோனிகோ முதல் வகுப்புப் பயணிகள் பகுதிக்குச் சென்று, பயணிகளுக்கு இருக்கைகளைக் காட்டிக் கொண்டிருந்த, தன்னுடைய சக அலுவலர்கள் டான்யா நோவாகாப் மற்றும் ரொபெர்ட்டா ஜான்சனிடம் பேசினார். ``இளைஞரின் பின்புற பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருப்பது என்ன?'' என்று அவர்களிடம் டெல்மோனிகோ கேட்டார். அது மீன்பிடி கம்பி என்று பதில் கிடைத்தது - அவருடைய அச்சத்தை அவர்கள் போக்கினர். விமானத்தின் பின்பகுதிக்கு அவர் திரும்பிச் சென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடத்தலின்போது அதிக சத்தம் எழுப்பும் கடற்படை போயிங் 707 விமானங்களில் ஒன்றான TWA85

விமானத்தில் பரபரப்பு அடங்கிவிட்டது. 40 பயணிகள் மட்டும் விமானத்தில் இருந்தனர். தாங்கள் தூங்குவதற்கு வசதியான இடத்தை தேர்வு செய்து ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

நீண்ட தலைமுடியுடன் கூடிய ஹார்ப்பர்ஸ் பிஸ்ஸேர் என்ற பாப் இசைக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேரும் அதில் இருந்தனர். அன்றிரவு பசடேனாவில் நிகழ்ச்சி நடத்திய களைப்புடன் வந்திருந்தனர். கலையரங்கின் பால்கனியில் இருந்து ஒருவர் அலறியதால் சிறிது நேரம் அந்த இசை நிகழ்ச்சி தடைபட்டிருந்தது. அந்தக் குழு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி நடத்தி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. சைமன் & கராபுன்கெலின் 59வது ஸ்ட்ரீட் பிரிட்ஜ் பாடலை அவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து அவர்களின் நிகழ்ச்சி உச்சகட்ட வரவேற்பைப் பெற்றது.

பாடகர் மற்றும் கித்தார் கலைஞர் டிக் ஸ்கோப்பெட்டோன் மற்றும் டிரம்ஸ் கலைஞர் ஜான் பீட்டர்சன் ஆகியோர் விமானத்தின் இடதுபுறம் இருந்த இருக்கைகளில் சாய்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கினர். அவர்கள் சிகரெட்களை பற்ற வைத்திருந்தனர். 1969 அக்டோபர் 31, வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணி, டி.டபிள்யூ.ஏ. 85 விமானம் சான் பிரான்சிஸ்கோ நோக்கி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருந்து புறப்பட்டது. பயணம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கழித்து கடத்தல் அரங்கேறியது.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்தாலும், விமானம் மேலே எழும்பும்போது தூக்கத்திற்கு சற்று இடையூறு ஏற்படும். விமானத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு, விமானம் மேலே எழும்பும்போது போயிங் 707 விமானத்தில் என்ஜின்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். அதனால் அதை விமானத் துறையில் வாட்டர் வேகன் என்று குறிப்பிடுவார்கள். விமானத்துக்குள் அதிக சப்தமாக, கரடுமுரடான அசைவுகளாக, அதிக குலுங்கல் தோன்றும்.

விமான அலுவலர்கள் ஏறத்தாழ எல்லா மின்விளக்குகளையும் அணைத்துவிட்டதால், விமானத்தில் இருள் படர்ந்தது. அமைதியான சூழ்நிலை உருவானதும், டிரேசி கோலமனுடன் சேர்ந்து விமானத்தின் பின்பகுதியில் இருந்த உணவகப் பகுதியை டெல்மோனிகோ சுத்தம் செய்யத் தொடங்கினார். 21 வயதான கோலமன் மொழியியல் துறையில் பட்டம் பெற்றவர். ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்திருந்தார்.

தோற்றத்தை மறைக்கும் வகையில் உடையணிந்து, பதற்றத்தில் இருந்த பயணி, உணவுப் பொருள் வைக்கும் பகுதிக்கு வந்து அவர்களுடன் நின்று கொண்டார். அவருடைய கையில் எம்1 துப்பாக்கி இருந்தது. அமைதி மற்றும் தொழில் முறை அனுபவம் கொண்டவராக அவரிடம் டெல்மோனிகோ இயல்பாகப் பேசினார். ``அதை நீங்கள் வைத்திருக்க அனுமதி இல்லை'' என்று கூறினார். டெல்மோனிகோவிடம் 7.62 மி.மீ. துப்பாக்கி குண்டு ஒன்றை கையில் வைத்த அந்த நபர், தனது துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டுள்ளன என்பதை உணர்த்தினார். அதை விமானிகளிடம் காட்டுவதற்காக, தம்மை விமானிகள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு டெல்மோனிகோவுக்கு அவர் உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தான்யா நோவகாஃப் (இடது) மற்றும் ராபர்ட்டா ஜான்சன் (நடுவில்) ஆகியோருடன் கடத்தல் நடந்தததை ஊடகங்களுக்கு விளக்கும் சார்லின் டெல்மோனிகோ (வலது).

டிக் ஸ்கோப்பெட்டோன் தூக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் அருகில் நடந்த நகர்வுகள் அவரை எழுப்பிவிட்டன. டெல்மோனிகோவுக்குப் பின்னால் ஒரு ஆண் பின்தொடர்ந்து செல்வதையும், டெல்மோனிகோவின் கழுத்தில் அவர் துப்பாக்கி வைத்திருப்பதையும் ஸ்கோப்பெட்டோன் ஓரக்கண்ணால் கவனித்தார். சில இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவருடைய குழுவைச் சேர்ந்த ஜான் பீட்டர்சன் அவரைப் பார்த்து, கண்கள் விரிய, ``நிஜமாகவே அது நடக்கிறதா?'' என்பது போல பார்த்தார்.

விமானத்தின் பின் பகுதியில் ஜிம் பின்ட்லே என்ற பயணி மினிசியெல்லோவை தடுப்பதற்காக எழுந்தார். கடத்தல்காரர் திரும்பிப் பார்த்தார். ``நின்று கொள்!'' என்று டெல்மோனிகோவை பார்த்து அவர் கத்தினார்.

அவர் ராணுவ வீரர் என்று டெல்மோனிகோ நினைத்தார்.

இருக்கையில் அமருமாறு மினிசியெல்லோ உத்தரவிட்டார். பிறகு அவரும் டெல்மோனிகோவும் விமானிகள் அறையை நோக்கி நகர்ந்தனர். திரைச்சீலையை விலக்கிவிட்டு டெல்மோனிகோ முதல் வகுப்புப் பகுதிக்குள் நுழைந்தார். பதற்றத்தில் அவருடைய கால் முட்டிகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தனக்கு முன்னால் இருந்த இரண்டு விமான அலுவலர்களை அவர் எச்சரிக்கை செய்தார். ``ஒரு ஆண் துப்பாக்கியுடன் எனக்குப் பின்னால் வருகிறார்'' என்று அவர் கூறினார். இருவரும் சட்டென பாதையைவிட்டு விலகி நின்றனர்.

கோபம் அதிகமான நிலையில் டெல்மோனிகோவை பார்த்து மினிசியெல்லோ கத்தியதை சில பயணிகளால் கேட்க முடிந்தது. விமானிகள் அறையை அவர்கள் நெருங்கினர். பெரும்பாலான நேரம் அவர் சாந்தமாக, மரியாதையுடன் நடந்து கொண்டார். ``அருமையான நன்கு அலங்காரம் செய்த குழந்தை'' என்பதைப் போல அவர் இருந்தார் என டெல்மோனிகா குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது மனநிலை பாதித்தவராக, அந்தக் குணங்கள் மேலோங்கி நின்றிருந்தது.

கேப்டனின் அறிவுறுத்தல் டெல்மோனிகாவுக்கு நினைவு இருந்தது: உள்ளே வருவதற்கு கதவைத் தட்டக் கூடாது, பெல் அடிக்க வேண்டும் என்று கேப்டன் கூறியிருந்தார். ஆனால், ஏமாற்று வேலை செய்துவிடுவார்கள் என்று மினிசியெல்லோ அஞ்சியதால் அவ்வாறு செய்ய டெல்மோனிகாவை அனுமதிக்கவில்லை. மாறாக, டெல்மோனிகா கதவைத் தட்டினார். இதன் மூலம் விமானிகள் எச்சரிக்கை அடைவார்கள் என்று அவர் நம்பினார். கதவு திறந்ததும், எச்சரிக்கையுடன் இருந்த விமானிகளிடம், தனக்குப் பின்னால் துப்பாக்கியுடன் ஓர் ஆண் நின்றிருப்பதாகத் தெரிவித்தார். மினிசியெல்லோ உள்ளே நுழைந்து, அங்கிருந்த, கேப்டன் குக், முதல்நிலை அதிகாரி வென்ஜெல் வில்லியம்ஸ், விமானப் பொறியாளர் லாயிட் ஹோல்ராஹ் ஆகிய மூன்று பேரையும் நோக்கி துப்பாக்கியை நீட்டினார்.

மினிசியெல்லோ நன்கு பயிற்சி பெற்றவராக, போதிய ஆயுதம் வைத்திருப்பவராக இருக்கிறார் என வில்லியம்ஸ் நினைத்தார். விமானிகளிடம் எதை எதிர்பார்க்கிறாரோ அதை செய்ய வைக்கக் கூடியவராக மினிசியெல்லோ இருப்பார் என்று அவர் அறிந்திருந்தார். விமானிகள் அறையில் இருந்து டெல்மோனிகா வெளியேறியதும், விமானிகளை நோக்கித் திரும்பிய மினிசியெல்லோ, ``நியூயார்க் நோக்கி திருப்புங்கள்''என்று நல்ல ஆங்கிலத்தில் உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எஃப்.பி.ஐ சிறப்பு முகவர் ஸ்காட் வெர்னர் புல்லட்டை சார்லின் டெல்மோனிகோவிடம் ஒப்படைத்தார்

துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ஆண் ஒருவர் விமானத்திற்குள் நடமாடும், வழக்கத்திற்கு மாறான காட்சியை, விழித்துக் கொண்டிருந்த பயணிகள் கவனிக்கத் தவறவில்லை.

துப்பாக்கி ஏந்திய நபர் சென்றதும், ஹார்ப்பர்ஸ் பிஸ்ஸேர் இசைக் குழுவைச் சேர்ந்த அனைவரும் வேக வேகமாக ஓடிச் சென்று அருகருகே அமர்ந்து கொண்டனர். வித்தியாசமான அனுபவத்தைத் தந்த மாலைப் பொழுதுக்குப் பிறகு, மேலும் விநோத அனுபவம் ஏற்பட்டது. துப்பாக்கியுடன் அவர் எப்படி விமானத்துக்குள் வந்திருப்பார் என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். தாங்கள் எங்கே செல்லப் போகிறோம்? ஹாங்காங்காக இருக்குமா? அதுவரை ஹாங்காங் சென்றது இல்லை என்பதால் அது நல்ல அனுபவமாக இருக்கலாம்.

ஜூடி புரோவனாஸ்-ன் பயிற்சி நினைவுக்கு வந்தது. டி.டபிள்யூ.ஏ. விமானத்தில் எட்டு நாள் பணியை முடித்துக் கொண்ட பெண் அலுவலரான அவர் சொந்த நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கடத்தல் உள்ளிட்ட அவசர நேரங்களில் நிலைமையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து ஆண்டுதோறும் அவருக்கும், விமானத்தின் மற்ற அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். அமைதியாக இருக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான விஷயம். கடத்தல்காரனுக்கு பரிந்து நடந்து கொள்ளக் கூடாது என்பது அடுத்த விஷயம் - அது எளிதாக நடக்கும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. விமானிகளிடம் அனுதாபத்தைப் பெறுவதற்கு கடத்தல்காரர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இவற்றை அறிந்திருந்த புரோவனாஸ் தன் அருகில் இருந்தவர்களிடம், துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர் உள்ளே நடந்து சொல்கிறார் என்று கூறினார். பதற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும், சூழ்நிலையை அமைதியானதாக பராமரிக்க வேண்டும் என்றும் அவருக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் தலையீடு செய்ய முயன்ற ஜிம் பின்ட்லே, டி.டபிள்யூ.ஏ. விமானி, இப்போது பயணியாக பயணித்துக் கொண்டிருந்தார். கடத்தல் நபரின் பைகளை அவர் சோதனை செய்து, அவரைப் பற்றிய அடையாளம் ஏதும் கிடைக்குமா என பார்த்தார். விமானத்தில் வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்யவும் அந்தச் சோதனை உதவியது. துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததை அதன் பிறகு தான் பயணிகள் அறிந்தனர்.

ஒலிபெருக்கியில் கேப்டன் குக் பேசினார். ``பதற்றமான இளைஞர் ஒருவர் இங்கே இருக்கிறார். அவர் விரும்பும் இடத்துக்கு நாங்கள் அழைத்துச் செல்லப் போகிறோம்'' என்று அவர் கூறினார்.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து விலகி, விலகி விமானம் சென்றபோது, பயணிகளுக்கு மற்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டன அல்லது தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்: இத்தாலி, டென்வெர், கெய்ரோ, கியூபா நோக்கி தங்கள் விமானம் செல்வதாகப் பேசிக் கொண்டனர். விமானிகள் அறையில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்தபடி இருந்தனர். ஆனால், சாகசத்தின் அங்கமாக தாங்கள் இருப்பதாக சில பயணிகள் கருதினர். விநோதமானது தான், ஆனால் அது சாகச நிகழ்ச்சியாகத்தான் இருந்தது.

கடத்தல்காரர்கள் அதிகம் விரும்பும் இடம் கியூபாவாக இருந்தது. அதனால் இந்த விமானமும் கியூபா நோக்கி தான் செல்கிறது என்று அதில் இருந்தவர்கள் நினைப்பது இயல்புதான்.

1960களின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கர்கள் பலருக்கு தாயகத்தின் மீது அதிருப்தி இருந்தது. பிடல் காஸ்ட்ரோவின் புரட்சியைத் தொடர்ந்து கியூபாவுக்கு செல்வதில், கம்யூனிஸ சிந்தனையினால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக அமெரிக்க விமானங்கள் அங்கு செல்வதில்லை என்பதால், கடத்தல்காரர்கள் செல்வதற்கு விரும்பும் இடமாக அது இருந்தது. அமெரிக்காவில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு அனுமதி தருவதன் மூலம், தன்னுடைய பகை நாட்டுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவும், விமானத்தை திருப்பி ஒப்படைக்க பெரும் தொகையை கேட்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

1961ல் மூன்று மாத காலம்தான் விமானக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்த காலமாக இருந்தது. மே 1 ஆம் தேதி மியாமியில் பொய்யான பெயர் விவரங்களைக் கூறி நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய அன்டுலியோ ரமிரெஜ், ஒரு கத்தியை வைத்து கேப்டனை மிரட்டி விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். காஸ்ட்ரோவை கொல்ல சதி நடப்பது பற்றி அவரிடம் தெரிவிக்க விரும்புவதால் விமானத்தை கியூபாவுக்கு செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காஸ்ட்ரோவை கொல்ல சதி நடக்கிறது என்பது அவருடைய சொந்தக் கற்பனையாக இருந்தது.

அடுத்த இரு மாதங்களில் மேலும் இரண்டு கடத்தல் சம்பவங்கள் நடந்தன. அடுத்த 11 ஆண்டுகளில் வணிக ரீதியிலான பயணம் மேற்கொண்ட 159 விமானங்கள் அமெரிக்காவில் கடத்தப்பட்டன என்று The Skies Belong To Us: Love and Terror in the Golden Age of Hijacking என்ற புத்தகத்தில் பிரென்டன் ஐ கோயர்னர் பதிவு செய்துள்ளார்.

கடத்தல் சம்பவங்கள் கியூபாவில் முடிவது வழக்கமானதாக இருந்தது என்று அவர் எழுதியுள்ளார். எதிர்பாராத வகையில் ஹவானாவுக்கு விமானத்தைச் செலுத்த நேரிட்டால், நிலைமையைக் கையாள வசதியாக ஒரு கட்டத்தில் அமெரிக்க விமான கேப்டன்களுக்கு கரீபியன் வரைபடங்களும், ஸ்பானிய மொழி வழிகாட்டிகளும் அளிக்கப்பட்டன. புளோரிடா விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் கியூபாவுக்கும் இடையில் நேரடி தொலைபேசி இணைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தாங்கள் கியூபாவை அடைந்துவிட்டோம் என்று கடத்தல்காரர்களை நினைக்க வைத்து ஏமாற்றுவதற்காக, ஹவானா விமான நிலையத்தைப் போன்ற தோற்றத்தில் புளோரிடாவில் விமான நிலையம் உருவாக்கவும் ஓர் ஆலோசனை இருந்திருக்கிறது.

விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக விமானக் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. பயணிகளின் லக்கேஜ்களை பரிசோதனை செய்ய வேண்டிய தேவை அப்போது எழவில்லை. ஏனெனில் கடத்தல் சம்பவங்களுக்கு முன்பு வரை, யாரும் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, சோதனை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஏர்லைன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஏனெனில் அது பயணிக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் உள்ளே வருவதற்கான நேரத்தை தாமதப்படுத்தும் என்றும் விமான நிறுவனங்கள் அஞ்சின.

``நாங்கள் வேறு உலகில் வாழ்வது போல இருந்தோம்'' என்று 1960களில் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் டி.டபிள்யூ.ஏ. நுழைவாயில் ஏஜென்ட்டாக இருந்த ஜான் பிராக்டர் பிபிசியிடம் கூறினார். ``விமானங்களை யாரும் தகர்க்கவில்லை. ஏதும் நடந்தால் அது கடத்தலாக இருக்கும், கியூபா செல்ல அவர்கள் விரும்புவார்கள். ஆனால் விமானத்தை வெடிவைத்து தகர்க்க யாரும் முயற்சி செய்தது இல்லை'' என்று அவர் கூறினார்.

ரபேலே மினிசியெல்லோ துப்பாக்கியை பிரித்து விமானத்திற்குள் எடுத்துச் சென்று, கழிவறையில் வைத்து மீண்டும் ஒன்று சேர்த்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது. விமானத்துக்குள் அதை எடுத்துச் செல்வது ``மிகவும் எளிதானதாக'' இருந்திருக்கும் என்று பிராக்டர் கூறினார். நுழைவாயிலில் உள்ள ஏஜென்ட்கள் பைகளின் எடையைப் பார்ப்பார்களே தவிர, அவற்றை பரிசோதிப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

டி.டபிள்யூ.ஏ. 85 விமானம் கடத்தப்படுவதற்கு முன்பு 1969ல் அமெரிக்காவில் 54 விமானக் கடத்தல் சம்பவங்கள் நடந்திருந்தன என்று அப்போது அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஆறு நாட்களுக்கு ஒரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் விமானத்தைக் கடத்தி யாரும் வேறொரு துணைக் கண்டத்திற்கு கொண்டு சென்றதில்லை.

பதற்றமாக இருந்த தங்கள் பயணியிடம் இருந்து விமானிகளுக்கு வெவ்வேறு தகவல்கள் வந்தன: நியூயார்க் அல்லது ரோம் நகருக்குச் செல்ல அவர் விருப்பம் தெரிவித்தார். நியூயார்க் செல்வதாக இருந்தால், அது பிரச்சினையாக இருக்கும்: சான் பிரான்சிஸ்கோ வரை செல்வதற்குப் போதிய அளவில் தான் விமானத்தில் எரிபொருள் இருந்தது. எனவே எரிபொருள் நிரப்ப வழியில் இறங்கியாக வேண்டும். ரோம் செல்வதாக இருந்தாலும் பெரிய பிரச்சினை இருந்தது. சர்வதேச விமானத்தை இயக்குவதற்கு உரிமம் பெற்ற விமானிகள் யாரும் விமானிகள் அறையில் இல்லை.

கடைசியாக, பயணிகளுடன் கேப்டன் குக் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ``நீங்கள் சான் பிரான்சிஸ்கோ செல்ல ஏதும் திட்டம் வைத்திருந்தால், அந்தத் திட்டத்தைத் தொடர வேண்டாம். ஏனெனில் நீங்கள் நியூயார்க் செல்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.

சிறிது பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கிழக்கு கடலோரப் பகுதிக்குச் செல்வதற்குத் தேவையான அளவிற்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக டென்வெர் விமான நிலையத்தில் விமானத்தை கேப்டன் தரையிறக்குவதற்கு மினிசியெல்லோ ஒப்புக்கொண்டார். கொலராடோவுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, விமானம் கடத்தப்பட்டிருப்பதாக முதன்முறையாக கட்டுப்பாட்டு அறைக்கு கேப்டன் குக் தகவல் தெரிவித்தார்.

திட்டத்தில் சீக்கிரம் மாற்றம் ஏற்பட்டது: டென்வெரில் மற்ற பயணிகள் 39 பேரை விடுவிக்க மினிசியெல்லோ ஒப்புக்கொண்டார். ஆனால் விமான பணிப்பெண்களில் ஒருவர் உள்ளேயே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். யார் உள்ளே தங்கியிருப்பது என்பது பற்றி சிறிது நேரம் விவாதம் நடந்தது. தன்னை விமானிகள் அறைக்கு அழைத்துச் சென்ற டெல்மோனிகோ உள்ளேயே இருக்க வேண்டும் என்று கடத்தல்காரர் விருப்பம் தெரிவித்தார். நான்கு அலுவலர்களில் தனக்கு நன்கு தெரிந்த ரொபெர்ட்டா ஜான்சன் உள்ளே இருக்க வேண்டும் என்று குக் விரும்பினார்.

விமானத்தில் இருந்த பயணிகளின் மனநிலை பற்றி டெல்மோனிகோ எழுதத் தொடங்கியபோது, டிரேசி கோலமன் விமானிகளுக்கு காபி எடுத்துக் கொண்டு, விமானிகளின் அறைக்குச் சென்றார். அவர் வெளியில் வந்தபோது, ``நான் போக வேண்டும்'' என்று டெல்மோனிகோவிடம் கூறினார். கோலமனுக்கு நியூயார்க்கில் ஆண் நண்பர் ஒருவர் இருப்பதாகவும், அவரை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். ஆனால் நியூயார்க் உடன் பயணம் முடியப் போவதில்லை என்பதை டெல்மோனிகோ அறிந்திருந்தார். ``நீங்கள் நியூயார்க்கில் தங்கிவிடப் போவதில்லை'' என்று அவர் கோலமனிடம் கூறினார். ``அவர் அங்கே தங்கிவிட முடியாது. அவர் வெளியே வந்தால் கைது செய்து விடுவார்கள். வேறு எங்கோ அவர் போகப் போகிறார் - அது எங்கே என எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேறு எங்கோ செல்லப் போகிறார்.''

கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு டி.டபிள்யூ.ஏ. ஸ்கைலைனர் இதழுக்குப் பேட்டியளித்த கோலமன், என்ன நடக்கும் என்று தாம் அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

டென்வெரில் ஸ்டேப்பிள்டன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது மின் விளக்குகளை அணைத்துவிட வேண்டும் என்று மினிசியெல்லோ வலியுறுத்தினார். அதிரடி நடவடிக்கை எதற்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்று அவர் விரும்பினார். பிரச்சினை எதுவும் இல்லாமல் இருந்தால் மட்டுமே பயணிகளை விடுவிக்கமுடியும் என்று அவர் கூறினார்.

அவர் சாந்தமாகிக் கொண்டிருந்தார். எதிர்பாராத அளவுக்கு அவர் இணக்கமாக மாறினார். ஜிம் பின்ட்லே வெளியே சென்றபோது, முன்னோர் வழிபாட்டு நாளுக்காக ஹாங்காங்கில் இருந்து கொண்டு வந்த உடையை உள்ளேயே விட்டிருப்பதை உணர்ந்தார். அதை எடுத்துக் கொள்ள மீண்டும் விமானத்துக்குள் செல்லலாமா என்று மினிசியெல்லோவிடம் அவர் கேட்டார். அவர் பணிவாக ``நிச்சயமாக வரலாம்'' என்று கூறினார்.

சூரியன் உதிப்பதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்த நிலையில், குளிரான, பனிபடர்ந்த சூழ்நிலையில் பயணிகள் வெளியே வந்தபோது, புன்னகையை மறந்து கோட் அணிந்திருந்த எப்.பி.ஐ. ஏஜென்ட் ஒருவர் வரவேற்றார். வெளியில் வந்ததில் ஏற்பட்ட நிம்மதி பயணிகளின் முகத்தில் தெரிந்தது. அங்கு இருளான ஒரு பகுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கடைசியில் எப்.பி.ஐ. ஏஜென்ட்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். குறுகிய அவகாசத்துக்குள் அவர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்திருந்தனர். 39 பயணிகள் மற்றும் மூன்று விமான சிப்பந்திகளிடம் தகவல்களைக் கேட்டறிவதற்கு அவர்கள் காத்திருந்தனர்.

பட மூலாதாரம், Denver Post/Getty Images

ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொண்டால், காவல் துறை அல்லது மருத்துவமனைக்கு தொடர்பு கொள்வதற்கு முன்னதாக, தம்மைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தங்களுடைய மேலாளர் கூறியிருப்பது ஹார்ப்பர்ஸ் பிஸ்ஸேர் குழுவினருக்கு நினைவுக்கு வந்தது. விமான நிலையத்தை அடைந்ததும் அவர்கள் முதலில் அதைத்தான் செய்தார்கள்.

அந்த உத்திக்குப் பலன் கிடைத்தது. தகவல்களை அவர்கள் கூறி முடித்ததும், வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கேமரா விளக்கு வெளிச்சத்துடன் நிருபர்கள் காத்திருந்தனர். குழுவின் பெயரைக் கூறி சப்தம் போட்டுக் கொண்டிருந்தனர். தங்களுடைய அனுபவத்தைக் கூறுவார்கள் என அமெரிக்காவில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் எதிர்பார்த்ததால் தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. ``அது தான் எங்களுக்குக் கிடைத்த சிறந்த விளம்பரமாக இருந்தது''என்று டிக் ஸ்கோப்பெட்டோன் பிபிசியிடம் கூறினார்.

அங்கு கூடியிருந்த புகைப்பட செய்தியாளர்கள், களைப்பால் சுவரில் சாய்ந்திருந்த பயணிகளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். புன்னகையுடன் இருந்த மற்ற சில பயணிகள், உள்ளே நடந்தவற்றை நினைவுபடுத்தி சொல்லிக் கொண்டிருந்தனர். விமான அலுவலர்கள் எப்.பி.ஐ.-யிடம் வாக்குமூலம் அளித்தனர். டெல்மோனிகோவின் வாக்குமூலம் மட்டும் கையால் எழுதப்பட்டதாக 13பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

ஒரு நாள் முழுக்க பேட்டிகள் அளித்த பிறகு, விமான அலுவலர்கள் அனைவரும் மாலையில் கன்சாஸ் நகருக்குத் திரும்பினர். வழக்கமில்லாத வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் விமானக் கடத்தல் பற்றிய செய்திகளை டிவி சேனல்கள் அளித்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் முழுக்க தூக்கத்தைத் தொலைத்த நிலையில் டெல்மோனிகோ வீட்டுக்குச் சென்று சேர்ந்தார். மாலை நேரத்தில் அவருடைய தொலைபேசி ஒலித்தது. அது எப்.பி.ஐ. ஏஜென்ட்டின் அழைப்பு. அவரை சந்திக்க வீட்டுக்கு வரலாமா என்று கேட்டார். இரவு 23.00 மணி அளவில் அவர்கள் வந்து, ஒரு புகைப்படத்தைக் காட்டினர். அது ரபேலே மினிசியெல்லோ திரும்பி தம்மைப் பார்க்கும் படம். ``ஆமாம், இவர்தான் அது'' என்று அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சந்திக்கப் போகும் முகமாக அது இருந்தது.

டென்வெரில் இருந்து மூன்று மணி நேர விமானப் பயணம் அமைதியாக இருந்தது.

மினிசியெல்லோ முதல் வகுப்பு பயணிகள் பகுதியில் ஓர் இருக்கையில் சாய்ந்து கொண்டு, துப்பாக்கியை அருகில் வைத்துக் கொண்டார். சிறிய பாட்டில்களில் இருந்து - கனடியன் கிளப் விஸ்கி மற்றும் ஜின் - வழக்கத்திற்கு மாறான காக்டெயிலாக தாமே கலந்து கொண்டார். டி.டபிள்யூ.ஏ. 85 விமானத்தில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர் - கேப்டன் குக், முதல் நிலை அதிகாரி வென்ஜெல் வில்லியம்ஸ், விமான பொறியாளர் லாயிட் ஹோல்ராஹ், விமான பணிப்பெண் டிரேசி கோலமன் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர் என ஐந்து பேர் மட்டும் இருந்தனர்.

காலை நேரத்தில் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. முனையங்களில் இருந்து அதிக தொலைவில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. டென்வெர் விமான நிலையத்தில் இருந்ததைப் போலவே இங்கும் அறிவுறுத்தல் இருந்தது. மிகச் சிலர் மட்டுமே விமானத்தை அணுக அனுமதிக்கப்பட்டது. ஆனால் எப்.பி.ஐ. தயாராக இருந்தது. கடத்தல் நபர் உள்நாட்டு விமானத்தை வேறொரு கண்டத்திற்கு கொண்டு செல்லும் அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர். டி.டபிள்யூ.ஏ. 85 விமானத்துக்காக சுமார் 100 ஏஜென்ட்கள் காத்திருந்தனர். சிலர் மெக்கானிக் போல இருந்தனர். விமானத்துக்குள் ஊருவிட வேண்டும் என்பதற்காக அப்படி இருந்தனர்.

விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில், எரிபொருள் நிரப்புவதற்கு ஆயத்தம் நடந்தபோது, எப்.பி.ஐ. பிரிவினர் விமானத்தை நெருங்கத் தொடங்கினர். விமானிகள் அறை ஜன்னல் வழியாக ஒரு ஏஜென்டிடம் குக் பேசியபோது, தங்களுடன் பேசுவதற்கு ஜன்னல் அருகே வருமாறு மினிசியெல்லோவை கேட்டுக் கொண்டனர். ஆனால் அதில் மினிசியெல்லோவுக்கு விருப்பம் இல்லை.

``அவர்கள் விமானத்துக்குள் ஊடுருவவில்லை என்பதை உறுதி செய்வதற்காக மினிசியெல்லோ விமானத்தில் முன்னும் பின்னுமாக ஓடிக் கொண்டிருந்தார்'' என்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசியிடம் வென்ஜெல் வில்லியம்ஸ் கூறினார். ``ஜன்னலுக்கு அருகில் சென்றால் தன்னை சுட்டுவிடுவார்கள் என்று அவர் நினைத்தார்.''

பயணிகள் மீது ஒரு பார்வை வைத்திருந்த கேப்டன், விமானத்தில் இருந்து தள்ளியே இருக்குமாறு ஏஜென்ட்களை எச்சரித்தார். அதன் பிறகு துப்பாக்கி குண்டு சப்தம் கேட்டது.

பட மூலாதாரம், Bangor Daily News

படக்குறிப்பு,

TWA85-யின் பிந்தைய பயணத்தில், அதன் புதிய விமானி

சுட வேண்டும் என்று மினிசியெல்லோ எண்ணவில்லை. அவர் பதற்றமாக இருந்ததால், விமானிகள் அறைக்கு வெளியே, துப்பாக்கியின் விசையை தவறுதலாக விரலால் அவர் அழுத்திவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் குண்டு விமானத்தின் கூரையில் மோதி, ஆக்சிஜன் டேங்க் அருகே பாய்ந்தது. ஆனால் அதைத் துளைக்கவில்லை. விமானத்தின் கட்டகப் பகுதியையும் சேதப்படுத்தவில்லை. கட்டகப் பகுதியை சேதமாக்கி இருந்தால், அதன் பிறகு விமானம் பறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆக்சிஜன் டேங்க்கை துளைத்திருந்தால் வெடித்திருக்கும், விமானமோ, விமானிகளோ மிஞ்சியிருக்க முடியாது.

தற்செயலாக குண்டு சுடப்பட்டது என்றாலும், விமானிகளிடம் அது உதறலை ஏற்படுத்தியது. அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நினைத்தனர். தெரிந்தேதான் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது - என்று கேப்டன் குக் கருதினார். அதனால் ஜன்னல் வழியாக ஏஜென்ட்களை நோக்கி சப்தம் போட்டார். எரிபொருள் நிரப்பாமல் உடனடியாக விமானம் புறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

டி.டபிள்யூ.ஏ. விமானிகள் இருவர், சர்வதேச விமானங்களை இயக்க உரிமம் பெற்றவர்கள், 24 ஆண்டு அனுபவம் உள்ள பில்லி வில்லியம்ஸ், ரிச்சர்ட் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் எப்.பி.ஐ. ஏஜென்ட்களுடன் வந்து விமானத்துக்குள் நுழைந்திருந்தனர். மற்ற அனைவருமே விமானத்திலேயே இருந்தனர்.

``எப்.பி.ஐ. திட்டம் தவறுதலாகி இருந்தால், விமானிகள் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம்'' என்று பின்னர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குக் கூறியுள்ளார்.

``அந்தப் பையனுடன் நாங்கள் ஆறு மணி நேரம் அமர்ந்திருந்தோம். கோர்வையாகப் பேசாமல் இருந்த நிலையில் இருந்து அமைதியான மனநிலைக்கு அவன் மாறினான். நகைச்சுவை உணர்வு கொண்ட இளைஞனாக தெரிந்தான். எதுவுமே தெரியாமல், நிலைமையை எப்படி கையாள்வது என்று தாங்களாகவே இந்த முட்டாள்கள் பொறுப்பில்லாமல் வியூகம் வகுத்து, சுமார் ஆறு மணி நேரமாக நாங்கள் உருவாக்கியிரும்த நம்பிக்கையை முழுமையாகத் தகர்த்துவிட்டனர்.''

கடத்தல் நபரின் நகைச்சுவைக்கு இடம் அளிக்கும் மனநிலையில் இல்லாதிருந்த, புதிய விமானிகள் இருவரும் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். மற்ற அனைவரும் விமானிகள் அறையில், தலையில் கைகளை வைத்தபடி இருக்க வேண்டும் என்று மினிசியெல்லோ உத்தரவிட்டார்.

விமானம் சீக்கிரமே புறப்பட்டது. உத்தேசிக்கப்பட்டிருந்தபடி ரோம் செல்வதற்குப் போதிய எரிபொருள் இல்லாத நிலையில் விமானம் புறப்பட்டது.

நியூயார்க்கில் இருந்து விமானம் புறப்பட்ட இருபது நிமிடங்கள் கழித்து, கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்த நிலையில் இருந்த விமானத்திற்குள் நிலைமை சுமுக நிலைக்கு மாறியது. கென்னடி விமான நிலையத்தில் நடந்த குழப்பங்களில், விமானிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மினிசியெல்லோவை குக் நம்ப வைத்தார்.

அங்கு நடந்த சம்பவங்களால் எரிபொருள் நிரப்ப முடியாமல் போனது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், டி.டபிள்யூ.ஏ. 85 விமானம் அமெரிக்காவின் வடகிழக்கு மூலையில் பாங்கோர், மெய்னேவில் தரையிறங்கியது. அட்லாண்டிக்கை கடப்பதற்குப் போதுமான அளவுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. மதிய வேளை நெருங்கிய அந்த நேரத்திற்குள், கடத்தல் பற்றியும், நியூயார்க்கில் நடந்த சம்பவங்கள் பற்றியும் அமெரிக்க ஊடகத்தில் முழு இடத்தைப் பிடித்தன. புகைப்படக்காரர்களும், செய்தியாளர்களும் பாங்கோர் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

விமானத்தில் இருந்து முடிந்த அளவுக்கு தொலைவில் செய்தியாளர்களை தடுத்து நிறுத்துவதற்கு சுமார் 75 காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடத்தல் நபர் கோபமடைந்து சுட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்தியாளர்கள் அருகில் செல்லாமல் தடுக்கப்பட்டனர். இந்த செயல்பாடுகளை நேரில் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் இருந்து இரண்டு பேர் விமானத்தைக் கண்காணிக்கிறார்கள் என்று கடத்தல் நபர் கவனித்தார். ``கட்டடத்தில் உள்ளவர்கள் நகராவிட்டால், கட்டடத்தை நோக்கி சுடப்போவதாக கடத்தல் நபர் சொல்கிறார். எனவே விரைந்து செயல்படுங்கள்''என்று கட்டுப்பாட்டு அறைக்கு குக் தகவல் அனுப்பினார். அந்த இருவரும் வேகமாக வெளியேறினர்.

விமானம் சர்வதேச விண்வெளிப் பகுதியை நோக்கி பயணித்த நேரத்தில், ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக ஏற்பட்ட பழக்கத்தால், விமானத்துக்குள் ஒரே மாதிரி மனநிலை உருவானது. ஆனால் கடத்தல் நபரை மகிழ்வாக வைத்துக் கொள்வதில் விமான அலுவலர்கள் முயற்சி செய்து கொண்டிருந்த போதிலும், உள்ளுக்குள் அவர்களுக்கு உயிர்மேல் பயம் இருந்தது.

விமானிகள் அறைக்கு புதிய விமானிகள் வந்துவிட்டதால், முதல் வகுப்பு பயணிகள் பகுதியில் மினிசியெல்லோ உடன் குக் அமர்ந்து கொண்டார். அவர்கள் பல கதைகளைப் பேசினர். அமெரிக்க விமானப் படையில், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய தன் அனுபவத்தை குக் கூறினார். அவர்களுக்கு இடையில் துப்பாக்கி இருந்தது. ஆனால் எந்த சமயத்திலும் அதை எடுக்க விமானிகள் முயற்சிக்கவில்லை. கடத்தல் நபர் என்ன செய்வார் என்று தெரியாத நிலையில் ஏற்பட்ட பயமே அதற்குக் காரணமாக இருந்தது.

குக் திருமணம் ஆனவரா என்று மினிசியெல்லோ திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலும், திருமணமாகிவிட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.``அது புத்திசாலித்தனமான பதிலாக அமைந்துவிட்டது'' என்று பின்னர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குக் கூறியுள்ளார். ``எனக்கு எத்தனை குழந்தைகள் என அவர் கேட்டார். ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினேன். விமானத்தில் மற்ற குழுவினர் பற்றி கேட்டார். ``ஆமாம் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது''என்று நான் கூறினேன். உண்மையில் குழுவினர் நால்வரில் ஒருவருக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது.

டிரேசி கோலமனும் மினிசியெல்லோ உடன் உரையாடலில் பங்கேற்றிருந்தார். அவர் அமெரிக்காவை விட்டு வெளியில் செல்வது அதுவே முதல் முறையாக இருந்தது. நான்கு மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் பயணிப்பதும் அதுவே முதல் முறையாக இருந்தது. சாலிட்டேர் உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகளை அவருக்கு மினிசியெல்லோ கற்றுக்கொடுத்திருக்கிறார். ``பேசுவதற்கு மிகவும் எளிமையானவராக அவர் இருந்தார்'' என்று பின்னர் டிரேசி நினைவுகூர்ந்தார். தமது குடும்பம் அமெரிக்காவுக்கு வந்தது பற்றி மினிசியெல்லோ கூறினார். ``அமெரிக்காவுக்கு வந்தபோது ராணுவத்தினரால் சில பிரச்சினைகள் ஏற்பட்டது.இத்தாலிக்கு திரும்பிச் செல்ல விரும்பினேன்'' என்று அவர் கூறியதாக ஏர்லைன் துறை இதழுக்கு பின்னர் அளித்த பேட்டியில் கோலமன் தெரிவித்துள்ளார்.

பாங்கோரில் இருந்து அயர்லாந்தின் மேற்கு கடலோரம் உள்ள ஷான்னோன் நகருக்கு சென்ற ஆறு மணி நேர பயணத்தில் டிரேசி சிறிது நேரம் மட்டுமே தூங்கினார். அங்கு நடு இரவு நேரத்தில் விமானத்துக்கு மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானத்தில் இருந்த வேறு சிலரும் தூங்க முடிந்தது. ``நாங்கள் அதற்குப் பழகி விட்டிருந்தோம்'' எனஅறு வென்ஜெல் வில்லியம்ஸ் நினைவுகூர்ந்தார். கன்சாஸ் சிட்டியில் இருந்து லாஸ் ஏஞ்சலீஸ் புறப்பட்ட போது விமானத்தில் இருந்தவற்றில் எஞ்சியிருந்த கப் கேக்குகள் மட்டுமே விமானத்திற்குள் உணவுப் பொருளாக இருந்தன. ``உணவு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை'' என்று பிபிசியிடம் வில்லியம்ஸ் தெரிவித்தார். ``பெரும்பாலான நேரம் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற எல்லாமே எங்களுக்கு மறந்து போயிருந்தது'' என்றார் அவர்.

அயர்லாந்து நோக்கிய பயணத்தில், நேர அட்டவணையை விமானம் கடந்த போது, அக்டோபர் 31ம் தேதி, நவம்பர் 1 என மாறியது. மினிசியெல்லோ வயது 20 ஆனது. யாரும் அதைக் கொண்டாடவில்லை.

அயர்லாந்தில் தரையிறங்கிய அரை மணி நேரம் கழித்து, விமானம் மீண்டும் புறப்பட்டது. ரோம் நோக்கி 6.900 மைல்கள் (11,000 கி.மீ. ) தொலைவுக்கான இறுதிக் கட்ட பயணத்தைத் தொடங்கியது.

அதிகாலையில் ரோமில் பியூமிசினோ விமான நிலையத்திற்கு மேலே டி.டபிள்யூ.ஏ. 85 விமானம் வட்டமடித்தது. முனையத்தில் இருந்து வெகு தொலைவில் விமானத்தை நிறுத்த வேண்டும் என்று இன்னொரு கோரிக்கையை மினிசியெல்லோ முன்வைத்தார். ஆயுதம் இல்லாத காவல் அதிகாரி தம்மை சந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடத்தல் சம்பவம் முடிவுக்கு வரவிருந்தது. மத்திய கலிபோர்னியா வான்வெளியில் தொடங்கிய கடத்தல் சுமார் 18 மணி மற்றும் 30 நிமிடங்களில் முடிவடைய இருந்தது. ``உலகின் மிக நீண்ட நேரமான, மிகவும் நேர்த்தியான கடத்தல் சம்பவம்'' என்று அப்போது நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

விமானம் தரையிறங்கவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னதாக, விமானிகளை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்வதாக கடத்தல்காரர் முன்வந்ததாகவும், அதை தாங்கள் நிராகரித்துவிட்டதாகவும் வில்லியம்ஸ் கூறினார். வாய்ப்பு இருந்தும் தன்னுடைய துப்பாக்கியைப் பறிக்கத் தவறியதற்காக விமான அலுவலர்கள் தண்டிக்கப்படலாம் என்று மினிசியெல்லோ நினைத்திருக்கிறார். ``உங்களுக்கு நான் நிறைய சிரமம் கொடுத்துவிட்டேன்'' என்று குக் -கிடம் அவர் கூறியுள்ளார். ``பரவாயில்லை. அதை தனிப்பட்ட முறையிலானதாக நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்''என்று கேப்டன் பதில் அளித்துள்ளார்.

அதிகாலை 5.00 மணிக்கு சற்று பின்னர், ஆல்பா ரோமியோ வாகனம் தனியாக விமானத்தை நோக்கி வந்தது. அதில் இருந்து பியட்ரோ குலி என்ற சுங்கத் துறை துணை அதிகாரி வெளியே வந்தார். கடத்தல் நபரை சந்திக்க அவர் முன் வந்தார். கைகளை தூக்கியவாறு அவர் விமானத்தின் படிகளை நோக்கிச் சென்றார். அவரை சந்திக்க மினிசியெல்லோ வெளியில் வந்தார்.

கேப்டன் வெளியே சென்ற போது, அவரை நோக்கி ``மிக நீண்ட நேரம் டான்'' என்று கடத்தல் நபர் கூறியுள்ளார். ``என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த சிரமத்தை ஏற்படுத்திவிட்டேன்'' என்று கூறியுள்ளார். கன்சாஸ் நகரில் இருந்த போதே குக் -இன் முகவரியை மினிசியெல்லோ குறித்து வைத்துக் கொண்டார். தாங்கள் பிரிந்த பிறகு என்ன நடந்தது என்பதை விவரமாக எழுதுவதற்காக முகவரியை அவர் வாங்கியிருந்தார்.

இருவரும் காரை நோக்கி படிகளில் இருந்து இறங்கி வந்தனர். மினிசியெல்லோ இன்னும் துப்பாக்கியை கையில் வைத்திருந்தார். விமானத்தில் இருந்த ஆறு பேரும் ``முழு நிம்மதியை'' உணர்ந்தனர் என்று முதல்நிலை அதிகாரி வென்ஜெல் வில்லியம்ஸ் கூறியுள்ளார். அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால் கடத்தலின் அடுத்த கட்டம் பாதுகாப்பாக முடியும், மினிசியெல்லோவுக்கும் அவருடைய புதிய பிணைக்கைதிக்கும் நல்லபடியாக முடியும் என்று அவர்கள் நம்பினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வெர், நியூயார்க், பாங்கோர், ஷன்னோன் மற்றும் ரோம் என வந்த பிறகு, இப்போது மினிசியெல்லோ செல்ல விரும்பியது ஒரே இடம் தான். ``என்னை நேப்பிள்ஸ் அழைத்துச் செல்லுங்கள்'' என்று பியட்ரோ குலிக்கு மினிசியெல்லோ உத்தரவிட்டார். அவர் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டார்.

ஆல்பா ரோமியோ வாகனத்தை காவல் துறையினரின் நான்கு கார்கள் பின்தொடர்ந்து சென்றன. பிணையாக பிடிக்கப்பட்டவரின் ரேடியோவில், அதிகாரிகளின் குரல்கள் வந்து கொண்டிருந்தன. பின் இருக்கையில் அமர்ந்திருந்த மினிசியெல்லோ ரேடியோவை அணைத்துவிட்டு, எங்கே செல்ல வேண்டும் என்று பிணைக் கைதியிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், AFP/Getty Images

ரோமின் மையப் பகுதியில் இருந்து வெளியே ஆறு மைல்கள் தொலைவில், பின்தொடர்ந்து வந்த கார்களின் பார்வையில் இருந்து விலகிவிட்ட ஆல்பா ரோமியோ வாகனம் குறுகலான சாலைகளுக்குச் சென்றது. கடைசியாக பாதை முடிந்த பகுதிக்கு வாகனம் சென்றதும் இருவரும் இறங்கினர். தனக்கான வாய்ப்புகள் குறைவு தான் என்பதை அறிந்து கொண்ட மினிசியெல்லோ பதற்றத்தில் வேகமாக ஓடத் தொடங்கினார்.

டி.டபிள்யூ.ஏ. 85 விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து புறப்பட்டு 23 மணி நேரம் கழித்து, மினிசியெல்லோ பயணம் முடிவுக்கு வந்தது. கடத்தலுக்கு கிடைத்த விளம்பரத்தால்தான் அப்படி நடந்தது. ரோமை சுற்றியுள்ள மலைகளில் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக, நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள், மோப்ப நாய்களுடன் சில காவலர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடத்தல் நபரைத் தேடும் நடவடிக்கை நடைபெற்றது. கடைசியாக மதகுரு ஒருவரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

நவம்பர் 1 சனிக்கிழமை அனைத்துத் துறவியர் நாள். தெய்வீக நேசத்துக்கான சரணாலயம் காலை வழிபாட்டுக்காக நிரம்பி வழிந்தது. பனியன் மற்றும் கீழாடை அணிந்திருந்த இளைஞரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். தனது உடைகளை மாற்றிவிட்டு, துப்பாக்கியை அங்கு சேமிப்பகத்தில் போட்டுவிட்டு, தேவாலயத்தில் தஞ்சம் கோரினார் மினிசியெல்லோ. ஆனால் அதற்குள் அவருடைய முகம் பிரபலமாகிவிட்டது. துணை ரெக்டர் டான் பாஸ்குவலே சில்லா அவரை அடையாளம் கண்டு கொண்டார்.

கடைசியாக தேவாலயத்துக்கு வெளியே மினிசியெல்லோவை காவல் துறையினர் சுற்றி வளைத்தபோது, அவர் குழப்பத்துடன் பேசினார் - இளம் கிரிமினலின் மூர்க்கத்தனம் என நிருபர்கள் கூறினர் - தன்னை சிறையில் அடைக்க தன் நாட்டவர்கள் விரும்புவதாக அவர் கூறினார். ``என் மக்களே, என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு,

ரோமில் கைது செய்யப்பட்ட மினிச்செல்லோ: "என்ன விமானம்? நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"

ரோம் காவல் நிலையத்தில் சிறிது நேர விசாரணைக்குப் பிறகு, பல மணி நேரங்கள் கழித்து, கை விலங்குகள் இல்லாமல் நிருபர்களிடம் பேசியபோதும் அதே தொனி இருந்தது. ``ஏன் அப்படி செய்தீர்கள்'' என்று ஒரு நிருபர் கேட்டார். ``நான் ஏன் அப்படி செய்தேன்? எனக்குத் தெரியவில்லை'' என்று அவர் பதில் அளித்தார். கடத்தப்பட்ட விமானம் பற்றி வேறொரு நிருபர் கேட்டதற்கு, குழப்பமான தொனியில், ``எந்த விமானம்? நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை'' என்று அவர் பதில் அளித்தார்.

ஆனால் வேறொரு பேட்டியின் போது, கடத்தலுக்கான உண்மையான காரணங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மினிசியெல்லோ கைது செய்யப்பட்ட செய்தி அன்றைய நாளின் பிற்பகுதியில் உலகம் முழுக்க பரவியபோது, ஓட்டிஸ் டர்னர் கலிபோர்னியாவில் கடற்படை முகாம் உணவகத்தில் காலை உணவுக்காக அமர்ந்திருந்தார்.

துணிச்சலான கடத்தல் பற்றியும், இத்தாலியில் ஊருக்கு வெளியில் கடத்தல் நபர் கைது செய்யப்பட்டது பற்றியும் மூலையில் இருந்த தொலைக்காட்சியில் செய்திகள் வந்து கொண்டிருந்தது. ``பின்னர் ரபேலே -வின் புகைப்படத்தைக் காட்டினார்கள். நான் அதிர்ச்சியானேன். உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன்'' என்று பிபிசியிடம் டர்னர் கூறினார்.

இருவரும் வியட்நாமில் ஒரே படைப் பிரிவில் பணியாற்றியுள்ளனர். அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னதாக இருவரும் பிரிந்துவிட்டனர். ``முதலில் நான் குழப்பம் அடைந்தேன்'' என்று டர்னர் தெரிவித்தார். ``ஆனால் நான் யோசித்தபோது, அவருக்கு சில பிரச்சினைகள் இருந்ததை அறிந்தேன். எல்லாம் ஒன்றாக சேர்ந்துவிட்டன'' என்றார் டர்னர்.

கடத்தல் நடந்தபோது, வியட்நாமுக்கு அமெரிக்க படைகள் சென்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருந்தது. சாய்கான் நகரம் வீழ்வதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது. முழுமையான தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்க படையினர் 50,000 பேர் மற்றும் வியட்நாம் போராளிகள் மற்றும் மக்கள் என பல லட்சம் பேர் பலியான நிலையில், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன.

போருக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடு 1969ல் உச்சகட்டத்தில் இருந்தது. வியட்நாமில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கெடு விதிக்கக் கோரி அமெரிக்கா முழுக்க நடந்த போராட்டத்தில் இரண்டு மில்லியன் பேர் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய போராட்டமாக அது கருதப்பட்டது. கடத்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் போராட்டம் நடைபெற்றது.

வியட்நாம் போருக்குச் செல்பவர்களைத் தேர்வு செய்யும் லாட்டரி முறை அமலுக்கு வருவதற்கு ஒரு மாதம் இருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே அதற்கு முன்வந்திருந்தனர். கம்யூனிஸ்ட்களின் வடக்கு வியட்நாமுக்கு எதிராகப் போராடுவது சரியானது என்று அவர்கள் நினைத்திருந்தனர். அப்படி முன்வந்தவர்களில் ஒருவராக ரபேலே மினிசியெல்லோ இருந்தார்.

பட மூலாதாரம், Raffaele Minichiello

படக்குறிப்பு,

வியட்நாமில் ரஃபேலே மினிசியெல்லோ

1962ல் இத்தாலியில் நில அதிர்வால் பாதிக்கப்பட்ட பிறகு தன்னுடைய குடும்பம் குடியேறிய சியாட்டிலில் வீட்டில் இருந்து 17 வயதான இளைஞன் 1967 மே மாதத்தில் புறப்பட்டான். கடற்படையில் சேருவதற்காக பிறகு அவன் சான் டியாகோ சென்றான். அவனை அறிந்தவர்களுக்கு - கொஞ்சம் பிடிவாதமான, முரட்டுத்தனம் கொண்டவனாக - புரிந்து கொண்டிருப்பார்கள். இந்த சம்பவத்தில் அவன் ஈடுபட்டது ஆச்சர்யத்தை தந்திருக்காது.

மினிசியெல்லோவுக்கு அதிகமாக ஆங்கிலம் பேச வராது. அவனுடைய நேப்பிள்ஸ் நகர உச்சரிப்புக்காக அவனுடன் படித்த நண்பர்கள் கேலி செய்வது உண்டு. பின்னர் பள்ளிப் படிப்பை கைவிட்டான். வர்த்தக ரீதியிலான விமானத்தில் விமானியாக வேண்டும் என்ற அவனுடைய ஆசைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் தன்னை ஏற்றுக் கொண்ட நாடு குறித்து அவன் பெருமையாகக் கருதினான். அந்த நாட்டுக்காக போரிடுவது தன்னை இயல்பான அமெரிக்கக் குடிமகனாக ஆக்கும் என்று நம்பினான்.

மினிசியெல்லோ வியட்நாம் சென்ற அதே காலத்தில் ஓட்டிஸ் டர்னரும் அங்கு சென்றார். ஒரே கடற்படை பிரிவில் வெவ்வேறு குழுக்களில் அவர்கள் பணியாற்றினர். இருவரும் ``உறுமல் பிரிவு வீரர்களாக'' இருந்தனர் - காட்டுக்குள் இறக்கிவிடப்படும் நபர்களாக, கம்யூனிஸ்ட் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த காலத்தில் சில மாதங்களுக்கு முன்வரிசையில் செல்லும் வீரர்களாக இருந்தனர்.

``கடற்படைப் பிரிவில் உறுமல் பிரிவினரின் பணி தான் கடுமையானது என்பதை எல்லோரும் அறிவார்கள்'' என்று தற்போது இயோவாவில் வசிக்கும் டர்னர் கூறினார். ``நாங்கள் 120 டிகிரி (49 டிகிரி செல்சியஸ்) வெப்ப நிலையில் இருந்தோம். அது கொடூரமானது. இருப்பதிலேயே மோசமான நிலைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.''

தங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது, அவற்றுக்கு எப்படி கீழ்ப்படிந்து நடந்தோம் என்பதை 2019ல் அவமானத்துடன் நினைகூர்ந்தார் டர்னர். அவர்களுடைய நோக்கம் கொடூரமானதாக இருந்தது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் நுழைந்து எதிரிகளைக் கொல்வது தான் அவர்களுக்கான கட்டளையாக இருந்தது. ``கடற்படைப் பிரிவில் சேர்ந்ததில் இருந்து, கொல், கொல், கொல் என்பது தான் எங்களுடைய தாரக மந்திரமாக இருந்தது'' என்றார் அவர். ``அதை மட்டும் தான் நாங்கள் செய்ய வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே எங்களிடம் அந்த மனநிலையைத் தான் உருவாக்கி இருந்தார்கள்.''

முன்வரிசையில் பணியாற்றியவர்களில், பெரும்பாலும் மினிசியெல்லோ தான் பொறுப்பு எடுத்துக் கொண்டு வழிநடத்திச் செல்வான். அவ்வாறு செய்ததால் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்பட்ட மோதல்களுக்கு ஆளாகியிருக்கிறான். ஆபத்தில் இருந்த பலரைக் காப்பாற்றியும் இருக்கிறான். வீரச் செயலுக்கான விருதும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. போரில் வீரச் செயல் புரிந்த வீரர்களுக்கு தெற்கு வியட்நாம் அளிக்கும் விருதாக அது உள்ளது.

ஒரு விஷயம் மட்டுமே ஆண்களுக்கு தெரிந்திருந்தது - அவர்கள் கடற்படையினர், போரிடுவதற்காகப் பிறந்தவர்கள் - என்பதாக இருந்தது. தினசரி வாழ்வை ஏற்றுக் கொள்வது சிரமமானதாக இருந்தது. ``குழுவாக சேர்வது அல்லது மனதையும் உடலையும் ஒருநிலைப் படுத்தி ஒன்றாக செயல்படுவதற்கான வாய்ப்பே கிடையாது'' என்று பிபிசியிடம் டர்னர் கூறினார். ``அமர்ந்து சிந்திப்பதற்கோ, என்ன செய்திருக்கிறோம் என உணர்வதற்கோ நேரம் கிடையாது.''

``நோயுற்ற, குழப்பமடைந்த பலர் இருந்தனர். மினிசியெல்லோ ஒரு மாதிரி மனநிலையில் இருந்தார். வியட்நாமை விட்டு வெளியேறிய போது நாங்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தோம்.''

தன்னுடைய மற்றும் மினிசியெல்லோ படைப் பிரிவுகளில் இருந்த பெரும்பாலானோருக்கு, பி.டி.எஸ்.டி. என்ற மன அழுத்தக் குறைபாடு இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக டர்னர் கூறுகிறார். வியட்நாமில் ராணுவப் பணியாற்றியவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு பி.டி.எஸ்.டி. பாதிப்பு, வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க முன்னாள் ராணுவத்தினர் நல துறை தெரிவித்துள்ளது. அதாவது 810,000 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 வரையில் மினிசியெல்லோவுக்கு அந்தக் குறைபாடு கண்டறியப்படவில்லை.

நேப்பிள்ஸ் அருகே செய்தியாளர்கள் அவருடைய தந்தையைக் கண்டுபிடித்தனர். அப்போது அவர் புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். இத்தாலிக்கு திரும்பியிருந்தார். அவரது மகன் எதனால் விமானத்தைக் கடத்தினார் என்பதை நிருபர்கள் உடனடியாக அறிந்து கொண்டனர். ``போர் காரணமாக அவருடைய மனதில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்''என்று லூயிகி மினிசியெல்லோ கூறினார். ``அதற்கு முன்னதாக அவன் எப்போதும் நல்ல மன நிலையில் தான் இருந்தான்.'' அடுத்த முறை அவனைப் பார்க்கும் போது காதோடு சேர்த்து அறையப் போவதாக அவர் கூறினார்.

கடத்தலுக்கான இன்னொரு காரணமும் சீக்கிரம் தெரிய வந்தது. வியட்நாமில் இருந்தபோது கடற்படை சேமிப்பு நிதிக்கு மினிசியெல்லோ பணம் அனுப்பி வந்தார். அதில் 800 டாலர்கள் சேர்த்திருந்தார். ஆனால் கலிபோர்னியாவில் பென்டில்டன் முகாமுக்கு திரும்பி வந்தபோது தன் கணக்கில் 600 டாலர்கள் மட்டுமே இருப்பதை அறிந்தார். மரணத்தின் பிடியில் இருந்த தனது தந்தையைப் பார்க்க இத்தாலி செல்வதற்கு அந்தப் பணம் போதுமானதாக இருக்கவில்லை.

தனது உயரதிகாரிகளிடம் மினிசியெல்லோ இதுபற்றி விளக்கியுள்ளார். தனக்கு உரிய 200 டாலர் பணத்தைத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் உயரதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. புகாரை நிராகரித்துவிட்டனர். அதனால் பிரச்சினையை தன் கையிலேயே எடுத்துக் கொண்டார். ஒரு நாள் இரவு கிடங்கில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அவர் 200 டாலர்கள் மதிப்புக்கு பொருட்களை எடுத்துக் கொண்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக எட்டு பாட்டில் பீர் குடித்த பிறகு, பொருட்களை எடுத்ததால், கிடங்கிலேயே தூங்கிவிட்டார். மறுநாள் காலை அவர் பிடிபட்டார்.

டி.டபிள்யூ.ஏ. 85 விமானத்தைக் கடத்துவதற்கு முந்தைய நாள், பென்டில்டன் முகாமில் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் அங்கு ஆஜராகாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். வியட்நாமில் போர் டிராபியாக அவர் பதிவு செய்து வைத்திருந்த சீன துப்பாக்கியையும் எடுத்துச் சென்றார்.

வழக்கத்திற்கு மாறாக, இத்தாலியில் கிராமப்புற ஹீரோவாக மினிசியெல்லோ மாறினார். விமானத்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியவர் என்பதாக அல்லாமல், தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கு எதையும் செய்யக் கூடிய இளைஞனாக அவரைப் பார்த்தனர். இத்தாலியில் அவர் விசாரணையை எதிர்கொண்டார் - அவர் கைது செய்யப்பட்டதும் அதிகாரிகள் இதில் உறுதியாக இருந்தனர் - அமெரிக்காவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என்று முடிவு செய்தனர். அமெரிக்காவுக்கு அனுப்பி இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

விசாரணையின் போது, மினிசியெல்லோ ஏழை பலியாடு போல மினிசியெல்லோ சிக்கிக் கொண்டார் என்று அவருடைய வழக்கறிஞர் கியுசெப்பே சோட்கியூ கூறினார். பொருத்தமற்ற காரணத்துக்கான வெளிநாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இத்தாலியராக அவர் சிக்கிக் கொண்டார் என வழக்கறிஞர் குறிப்பிட்டார். ``விமானம் மற்றும் போர் வன்முறை கலாச்சாரத்தில் பிறந்தவரின் செயல்பாட்டை, கலாச்சார முதிர்ச்சி இல்லாத உழவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய செயலை இத்தாலிய நீதிபதிகள் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்'' என்று அவர் கூறினார்.

இத்தாலிய வான்வெளியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மட்டும் இத்தாலியில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அப்பீலின் பேரில் அது குறைக்கப்பட்டு, 1971 மே 1 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

பிரவுன் சூட் அணிந்து வாடிகன் அருகே குயின் ஆஃப் ஹெவன் சிறையில் இருந்து 21 வயதான அவர் வெளியே வந்தபோது, புகைப்படக்காரர்கள், விடியோகிராபர்கள் காத்திருந்தனர். பிறருடைய கவனத்தை ஈர்க்கும் நிலையால் தயக்கம் கொண்ட நிலையில் இருந்து, பதற்றத்தில் இருந்து தன்னம்பிக்கையான நிலைக்கு மாறியுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேச நின்றார். ``நீங்கள் செய்த செயலுக்காக வருந்துகிறீர்களா?''என்று ஒருவர் கேட்டார். ``ஏன் வருந்த வேண்டும்?'' என்று அவர் திருப்பிக் கேட்டார்.

ஆனால் அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. நிர்வாண மாடலாக எடுத்துக் கொண்ட தொழில் கை கொடுக்கவில்லை. மினிசியெல்லோவை மேற்கத்திய திரை நட்சத்திரமாக உருவாக்குவதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஜான் ராம்போ கதாபாத்திரம் மினிசியெல்லோவை அடிப்படையாகக் கொண்டது தான் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ராம்போ கதாபாத்திரம் நன்கு உருவாக்கப்பட்டிருந்தது ஆனால், சதியில் தவறிய வியட்நாம் முன்னாள் வீரர் என தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் ராம்போ கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அந்தத் தகவல்களை மறுத்துவிட்டார்.

சிறைவாசத்துக்குப் பிறகு மினிசியெல்லோ ரோம் நகரில் பார் ஊழியராக வேலை பார்த்தார். பார் உரிமையாளரின் மகள் சின்ஜியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஒரு காலத்தில் ஹைஜாக்கிங் என்ற பெயரில் பிஸ்ஸா உணவகம் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார்.

23 நவம்பர் 1980

1962ல் ரபேலே மினிசியெல்லோ குடும்பம் வாழ்ந்த நகரை சின்னாபின்னமாக்கிய நில அதிர்வு ஒரு முன்னோட்டமாக தான் இருந்தது. 18 ஆண்டுகள் கழித்து இத்தாலியின் தெற்கில் 6.9 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அது 1962ல் இருந்த நில அதிர்வின் மையப்புள்ளியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருந்தது.

இத்தாலியில் 70 ஆண்டு காலத்தில் நடந்த அதிக தீவிரமான நில அதிர்வாக அது இருந்தது. இர்பினியா பகுதியில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. 4,690 பேர் வரை கொல்லப்பட்டனர். 20,000 வீடுகள் - பெரும்பாலானவை 1962 நில அதிர்வால் பலம் குறைந்து போனவை - அழிந்து போயின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1980 இர்பினியா பூகம்பத்தில் அழிக்கப்பட்ட கிராமம்

அதன்பிறகு நேப்பிள்ஸின் கிழக்கில் உள்ள பகுதிக்கு உதவிகளை வழங்குவதற்காக ஏராளமானோர் வந்தனர். அவர்களில் ரபேலே மினிசியெல்லோவும் இருந்தார்.

அப்போது 31 வயதான அவர் ரோமில் வசித்து வந்தார். ஆனால் உதவிகளை வழங்குவதற்காக இரண்டு வார காலத்தில் மூன்று முறை 300 மைல் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் உணர்ந்தார். ``இர்பினியாவில் நில அதிர்வு பற்றி எனக்குத் தெரியும்'' என்று 1980 டிசம்பரில் பீப்பிள் என்ற இழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.``அங்கு தான் நான் பிறந்தேன். என்னுடைய பிரச்சினைகள் அனைத்தும் அங்கு தான் தொடங்கின'' என்று அவர் குறிப்பிட்டார்.

கடற்படையில் இருந்தபோது, அதிகாரவர்க்கத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை, மாறவில்லை. ``நிறுவனங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே நானே நேரில் வந்து உதவுகிறேன்'' என்று அவர் கூறினார். ``தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் பற்றி எனக்குத் தெரியும்'' என்றார் அவர்.

இரிபியானாவில் இடிபாடுகளுடன் சேர்த்து மினிசியெல்லோ அறியப்படுகிறார். ஆனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு டி.டபிள்யூ.ஏ. 85 விமானத்தைக் கடத்தியபோது இருந்த சிறிய பிரபலஸ்தராக இப்போது இல்லை. அந்த சமயத்தில் அவருடைய தோற்றம் - சுருண்ட முடி, வலது கையில் சிகரெட், முகத்தில் இயல்பான சிரிப்பு - ஆகியவை உலகெங்கும் வெளியான இதழ்களில் அட்டைப்படங்களில் இடம் பெற்றன.

நில அதிர்வு பாதிப்புகளுக்குப் பிந்தைய காலத்தில் அதிக வருத்தமுற்ற நிலையில் மினிசியெல்லோவின் இயல்பு வெளிப்பட்டது. ``நான் முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் மாறிவிட்டேன். விமானத்தில் இருந்த அந்த நபர்களுக்கு செய்த செயல்களுக்காக மிகவும் வருந்துகிறேன்''என்று அவர் கூறுகிறார்.

இர்பினியா நில அதிர்வால் அவருடைய எண்ணம் மாறிவிடவில்லை. மற்றொரு முயற்சி வெற்றிகரமாக அமைந்திருந்தால், அவருடைய கதை வேறு மாதிரியாக முடிந்திருக்கும். அவருடைய கடத்தலைவிட மிக மோசமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.

1985 பிப்ரவரியில் சின்ஜியா இரண்டாவது குழந்தைக்காக கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரும், அப்போது பிறந்த குழந்தையும் மருத்துவ கவனிப்பு குறைபாடு காரணமாக இறந்துவிட்டனர். அதிகாரவர்க்கத்தினர் மறுபடியும் துரோகம் செய்துவிட்டதாக மினிசியெல்லோவுக்கு அதிக கோபம் ஏற்பட்டது. என்ன செய்வது என அறிந்திருந்தார். ரோம் நகருக்கு வெளியே முக்கியமான மருத்துவ மாநாட்டை அவர் குறிவைத்தார். தனது மனைவி மற்றும் மகனின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்த மருத்துவர்களின் அலட்சியம் குறித்து கவனத்தை ஈர்க்க திட்டமிட்டார். பழிவாங்கும் தாக்குதல் நடத்துவதற்காக, தெரிந்த ஒருவர் மூலமாக அவர் துப்பாக்கிகள் வாங்கினார்.

அவர் சதித் திட்டம் உருவாக்கிய சமயத்தில், இளவயது சகாவான டோனி என்பவருடன் மினிசியெல்லோவுக்கு நட்பு ஏற்பட்டது. மினிசியெல்லோவின் துயரை அறிந்த டோனி, பைபிளை அறிமுகம் செய்து, சப்தமாக படித்துக் காட்டினார். மினிசியெல்லோ அவற்றைக் கேட்பார். பிறகு இறைபணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். தனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டார்.

கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக 1999ல் மினிசியெல்லோ அமெரிக்காவுக்குச் சென்றார்.

அமெரிக்காவில் தனக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்டார். ஆனால் தலைமறைவாக இருப்பது என்ற அவருடைய முடிவுக்கு பின்விளைவுகள் இருந்தன. ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவு ஆகிவிட்டார். கடற்படையால் அவருக்கு ``கவுரவமற்ற பிற பணிமுடிப்பு''வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வியட்நாமில் ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு, பொதுவான பணிமுடிப்பாக அதை மாற்ற வேண்டும் என்று அவருடன் பணிபுரிந்தவர்கள் தீவிர முயற்சிகள் செய்தனர். ஆனால் இன்று வரை அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ரபேலே சிறந்த கடற்படை வீரராக இருந்தார்'' என்று அவருடன் பணியாற்றிய ஓட்டிஸ் டர்னர் பிபிசியிடம் கூறினார். ``எப்போதும் முன்வரிசையில் செல்லக் கூடியவராக அவர் இருந்தார். எதுவாக இருந்தாலும், தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்பவராக இருந்தார். பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகள், வியட்நாமில் ஆற்றிய சேவைகளைப் பார்த்தால், யாரையும் இப்படி ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

அவருடைய பெயரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க சக வீரர்கள் முயற்சிக்கும் நேரத்தில், வேறொரு முயற்சியில் உதவுமாறும் மினிசியெல்லோ கேட்டுக் கொண்டார். கடத்தப்பட்ட விமானத்தில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விரும்பினார்.

8 ஆகஸ்ட் 2009

2009 கோடைக்காலம் வந்தபோது டெல்மோனிகோ தனது 35 ஆண்டு கால பணிக்குப் பிறகு ஓய்வு பெற்று 8 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தது. ஜனவரி 2001ல் ஓய்வு பெற்ற ஒரு மாத காலத்திற்குள், அந்த விமான நிறுவனம் திவாலாகி, அதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.

எதிர்பாராத விதமாக டெல்மோனிகாவுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு காலத்தில் துப்பாக்கிமுனையில் மிரட்டிய நபரை சந்திக்க அவர் விரும்புவாரா?

ஓட்டிஸ் டர்னர் மற்றும் ரபேலே இருந்த படைப் பிரிவின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. ``அது பைத்திகாரத்தனமான சிந்தனையாக இருக்கும் என்று நினைத்தேன்'' என்று டர்னர் கூறினார். ``ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று நினைத்தேன்.''

அழைப்புக்கு டெல்மோனிகா முதலில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தக் கடத்தல் சம்பவம் அவருடைய வாழ்வை மாற்றி அமைத்ததாக இருந்தது. தன்னுடைய முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டிய ஒருவரை எதற்காக சந்திக்க வேண்டும்? சர்ச்சுக்கு செல்பவராக அவருடைய இரண்டாவது எதிர்வினை மாறுபட்டதாக இருந்தது. ``எனக்கு ஆச்சர்யமாக இருந்தது'' என்று அவர் பிபிசியிடம் கூறினார். ``எனக்கு விநோதமான அனுபவம் ஏற்பட்டது. அது மிகவும் பயத்தை தரக் கூடியாக, நிலைகுலையச் செய்யக் கூடியதாக இருந்தது - உண்மையில் அப்படி நடந்தது.''

``மன்னிப்பதற்கு நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என நினைத்தேன். ஆனால் அவரை எப்படி வரவேற்பது என எனக்குத் தெரியவில்லை.''

ஆகஸ்ட் 2009ல் தன்னுடைய நகரில் இருந்து தெற்கில் 150 மைல்கள் பயணம் செய்து மிசோரியில் பிரான்சனுக்கு சென்றார். மினிசியெல்லோ மற்றும் அவருடைய சக வீரர்கள் அங்கு மறு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு டி.டபிள்யூ.ஏ. 85 விமானத்தின் முதல் நிலை அதிகாரி வென்ஜெல் வில்லியம்ஸை அவர் சந்தித்தார். மினிசியெல்லோவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட இரண்டாவது நபராக அவர் வந்திருந்தார். கேப்டன் குக் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். பழைய கடத்தல் நபருக்கு அது உறுத்தலாக இருந்தது. முதலாவது வகுப்பு பயணிகள் பகுதியில் அமர்ந்து தன்னுடயன் உரையாடி, நல்ல பிணைப்பை ஏற்படுத்தியவர் வர மறுத்துவிட்டது அவருக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

கிளாரியான் ஹோட்டலில் பக்கவாட்டு அறை ஒன்றில் வில்லியம்ஸ் மற்றும் டெல்மோனிகோ ஆகியோர் படைப் பிரிவினருடன் வட்டமான மேசையை சுற்றி அமர்ந்திருந்தனர். அதில் மினிசியெல்லோ இல்லை. இந்தச் சந்திப்பின் மூலம் என்ன நடக்கும் என்பது பற்றி முன்னாள் வீரர்கள், அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தனர். மினிசியெல்லோவுக்கு அவர்கள் காட்டிய ஆதரவு, இதுபோன்ற மனிதருக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்று டெல்மோனிகாவுக்கு சமாதானத்தை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Otis Turner

படக்குறிப்பு,

ரஃபேல் மினிச்செல்லோ (தொலை இடது) மற்றும் ஓடிஸ் டர்னர் (தொலை வலது) ஆகியோர் தங்கள் படைப்பிரிவின் மறு இணைப்பில்

சிறிது நேரம் கழித்து மினிசியெல்லோ நடந்து வந்து அமர்ந்தார். சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஆனால் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் என்ன நடந்தது என்று மினிசியெல்லோ விவரிக்கத் தொடங்கிய போது, சக வீரர்கள் நெருங்கி வந்தனர்.

வில்லியம்ஸ்-க்கு மினிசியெல்லோ வேறுபட்டவராக - சிறிய, அதிக மென்மையாகப் பேசக் கூடியவராக - தெரிந்தார். கடத்தல் சம்பவத்தால் குற்ற உணர்வில் இருப்பது தெரிந்தது. ஆனால் இந்த மன்னிப்பு உளப்பூர்வமானது என்பதாகத் தோன்றியது.

``ஒரு வகையில் நான் கொஞ்சம் நெருக்கத்தைக் கண்டேன், வேறுபட்ட பார்வையில் பார்த்தேன்'' என்று டெல்மோனிகோ கூறினார். ``அநேகமாக அவருக்காக நான் வருத்தப்பட்டிருப்பேன். அவர் மிகவும் பணிவானவர் என்று நினைத்தேன். எப்போதும் பணிவானவராகவே இருந்தார்.''

புறப்படுவதற்கு முன்னதாக அவர்கள் இருவருக்கும் புதிய ஏற்பாடு புத்தகங்களை மினிசியெல்லோ அளித்தார்.

உள்ளே இப்படி எழுதியிருந்தார்:

உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு மிக்க நன்றி.

உங்களை ஆபத்தின் விளிம்பில் நிறுத்திய என் செயல்களை மன்னித்தமைக்காக உங்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்க்கையை மாற்றிய இந்தப் புத்தகத்தை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இறைவன் உங்களை ரொம்பவும் ஆசிர்வதிப்பார், ரபேலே மினிசியெல்லோ

கீழே லூகாஸ் 23:34 வசனங்களை அவர் எழுதியிருந்தார்.

``தந்தையே அவர்களை மன்னியும், அவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறார்கள்'' என்று அந்த வரிகளில் எழுதப்பட்டிருந்தது.

அடுத்து என்ன நடந்தது?

வாஷிங்டன் மற்றும் இத்தாலி இடையே தனது நேரத்தை ரபேலே மினிசியெல்லோ பிரித்துக் கொள்கிறார். தாயகத்துக்குச் செல்கிறார். இசைக்காக நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குகிறார். அவருடைய பணி முடிப்பை கவுரவத்துடன் கூடியது என்ற நிலைக்கு மாற்றுவதற்காக, அவருடன் பணிபுரிந்த வீரர்கள் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதைச் செய்து தர வேண்டும் என்று கோரி அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆகஸ்ட் மாதம் அவர்கள் நிறைய கடிதங்கள் அனுப்பினர்.

இந்த மாற்றம் செய்யப்படாத வரையில், பி.டி.எஸ்.டி.க்கு சிகிச்சை பெறுவதற்கு அவருக்கு தகுதி கிடைக்காது. முன்னாள் வீரர்களுக்கான பயன்கள் எதுவும் அவருக்குக் கிடைக்காது. தனது வாழ்க்கைக் கதை பற்றிய திரைப்படம் ஒன்றிற்கு கையெழுத்திட்டுள்ளதால் இந்தக் கட்டுரைக்கு பேட்டி அளிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டி.டபிள்யூ.ஏ. கேப்டன் டொனால்ட் குக் ``2012 செப்டம்பர் 30 ஆம் தேதி, புற்றுநோய்க்கு எதிராக நீண்ட போராட்டத்தின் முடிவில் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார்'' என்று தனது இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான பணிப் பெண்ணாக இருந்த டெல்மோனிகோ - இப்போது சார்லெனே டெல்மோனிகோ நீல்சன் - 35 ஆண்டு கால சேவைக்குப் பிறகு டி.டபிள்யூ.ஏ.வில் இருந்து 2001 ஜனவரி 1ல் ஓய்வு பெற்றார். அவர் இப்போது மிசோரியில் வசிக்கிறார்.

மினிசியெல்லோ சிறையில் இருந்த போது விமான பணிப் பெண் டிரேசி கோலமன் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கடத்தல் சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, வாழ்நாள் முழுக்க வேலைக்கு உத்தரவாதம் அளித்த நிலையிலும் அந்த நிறுவனத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

முதல்நிலை அதிகாரி வென்ஜெல் வில்லியம்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார். டெக்சாஸில் போர்ட் ஒர்த்தில் வசிக்கிறார்.

ஹார்ப்பர்ஸ் பிஸ்ஸேர் குழு 1970களின் மத்தியில் பிரிந்துவிட்டது. டிக் ஸ்கோப்பெட்டோன் கலிபோர்னியாவில் சான்டா குரூஸில் வானொலி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

1972 டிசம்பரில், கடத்தல்காரர்கள் பெருமளவு தொகை கேட்டு, அணுசக்தி நிலையத்துக்கு விமானத்தை கொண்டு செல்வோம் என்று மிரட்டியபோது, விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிக்சன் அரசாங்கம் உருவாக்கியது. அனைத்துப் பயணிகளையும் எலெக்ட்ரானிக் முறையில் பரிசோதிப்பதும் அதில் அடங்கும். ``புதிய வகையிலான கடத்தல் நபர்கள் உருவாகி வருவதால், மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருப்பதால்'' இந்த ஏற்பாடுகள் தேவை என தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :