தாய்லாந்து மன்னர் துணைவி சின்னிநாட் புகழ் உச்சியில் இருந்து எப்படி சறுக்கினார்?

சினீநட் வோங்வஜிரபக்டி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சின்னிநாட்

மன்னரின் மனைவியாக அறிவிக்கப்பட்டிருந்த சின்னிநாட் வோங்வஜிரபக்டியின் வசமிருந்த பட்டங்கள் மற்றும் தரநிலைகளை திங்கள்கிழமை ரத்து செய்ததன் மூலம் தாய்லாந்து மன்னர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சினீநட் வோங்வஜிரபக்டிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் மன்னரின் துணைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

மன்னரின் "அதிகாரபூர்வ மனைவி'' என்ற அந்தஸ்து சின்னிநாட் வோங்வஜிரபக்டிக்கு கடந்த ஜூலை மாதம் தான் வழங்கப்பட்டது. ``அரசிக்கு இணையான நிலைக்கு'' தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ததால், இந்த தண்டனைக்கு ஆளாகியுள்ளார் என்று அரண்மனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து ராஜ குடும்பத்தின் மனப்போக்கைக் காட்டுவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது, அவருடைய தவறுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சில பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

புதிய மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன் 2016ல் தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்தார். தாய்லாந்தில் அமலில் உள்ள அரச குடும்ப துவேஷ சட்டத்தின்படி, அரச குடும்பத்தை விமர்சிப்பது கடும் சிறைத் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

மன்னரின் துணைவி என்பது என்ன?

பதவியில் இருக்கும் ராஜ குடும்பத்தவரின் மனைவி, கணவர் அல்லது துணைவர் கன்சோர்ட் என குறிப்பிடப்படுகிறார். இந்த விஷயத்தில் தாய்லாந்து - "ராயல் கன்சோர்ட்" என்ற சொல், துணைவி என குறிப்பிடுவதாகவும் உள்ளது.

34 வயதான சின்னிநாட் வோங்வஜிரபக்டி, ஒரு நூறாண்டு காலத்துக்குப் பிறகு தாய்லாந்தில் ராயல் கன்சோர்ட் என அறிவிக்கப்பட்டார். ஜூலை மாதம் அவருக்கு அந்தப் பட்டம் தரப்பட்ட போது , அவர் அதிகாரப்பூர்வ துணைவராக அறிவிக்கப்பட்டார் - ஆனால் ராணியாக அறிவிக்கப்படவில்லை.

பெரிய சாம்ராஜ்யத்தில் அனைத்து மாகாணங்களிலும் அதிகாரமிக்க குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்வதற்கு தாய்லாந்து மன்னர்கள், பல திருமணங்கள் செய்து கொள்வது வரலாற்றுப்பூர்வமாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து மன்னர்கள் பல மனைவிகள் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். கடைசியாக தாய்லாந்து மன்னர் அதிகாரபூர்வ மனைவியாக ஒருவரை அறிவித்தது 1920 ஆம் ஆண்டில் தான். அதற்குப் பிறகு அரசியல் சாசனப்படியான முடியாட்சியாக 1932ல் நாடு மாறிய பிறகு அந்தப் பட்டம் பயன்படுத்தப்படவில்லை.

பட மூலாதாரம், Reuters

யார் இந்த சின்னிநாட் வோங்வஜிரபக்டி ?

அரச குடும்பத்தால் வெளியில் தெரிவிக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்பைத் தவிர வேறு தகவல்கள் பெரிய அளவில் வெளியில் தெரியாது.

``நமக்கு என்ன தெரிய வேண்டும் என்று அரச குடும்பம் கருதுகிறதோ அவை மட்டுமே அவரைப் பற்றி நமக்கு தெரியும்'' என்று கியோட்டோ பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய கல்வித் துறை இணைப் பேராசிரியராக இருக்கும் பவின் சச்சவல்போங்பன் கூறினார்.

1985ம் ஆண்டு பிறந்த சின்னிநாட் தாய்லாந்தின் வட பகுதியைச் சேர்ந்தவர். முதலில் செவிலியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பட்டத்து இளவரசராக இருந்த வஜ்ராலங்கோர்ன் உடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவருடைய வாழ்க்கை அரண்மனை ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்ததாக மாறிவிட்டது.

மெய்க் காப்பாளராக, பைலட்டாக, பாராசூட் வீராங்கனையாக மாறிய அவர், மன்னர் குடும்பத்தினரின் பாதுகாவலர் படையில் சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சின்னிநாட்

அடுத்தடுத்து அவருக்கு கௌரவங்கள் அளிக்கப்பட்ட நிலையில், நூறாண்டு காலத்துக்குப் பிறகு, முதன்முறையாக ராயல் கன்சோர்ட் என்ற அந்தஸ்து கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்டதுதான் உச்சபட்ச கௌரவமாக அமைந்தது.

அதற்குப் பிறகு குறுகிய காலத்திற்குள் ஜெட் போர் விமானத்தில் அவர் இருக்கும் படங்கள் வெளியாகின. அவருடைய அதிகாரபூர்வ வாழ்க்கைக் குறிப்புகளுடன், அவருடைய ஆக்சன் புகைப்படங்களையும் அரண்மனை வெளியிட்டது. அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து இப்போது அவை நீக்கப்பட்டுள்ளன.

அவருக்கு இப்போது என்ன நடந்தது?

"அரச குடும்பத்துக்கு விசுவாசம் இல்லாத நடவடிக்கை மற்றும் தவறான நடவடிக்கைகள்" காரணமாக அவருடைய அந்தஸ்து மற்றும் பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ராஜ குடும்ப அறிவிக்கையில் வெளியாகியுள்ள விரிவான அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் "பேரார்வம் கொண்டிருந்தார்" என்றும், "ராணியின் அந்தஸ்துக்கு தம்மை உயர்த்திக் கொள்ளும்" முயற்சிகளில் ஈடுபட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ராயல் கன்சோர்ட்டின் நடவடிக்கைகள் கண்ணியக் குறைவாகக் கருதும் அளவுக்கு இருந்தன" என்றும், "மன்னர் மற்றும் ராணிக்கு எதிராக கீழ்ப்படியாத" செயல்பாடுகளைக் காட்டினார் என்றும், மன்னரின் சார்பில் உத்தரவுகள் பிறப்பித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA

அவருக்கு அளிக்கப்பட்ட பட்டத்துக்கு பெருமை சேர்க்கக் கூடியவராகவோ அல்லது தன்னுடைய அந்தஸ்துக்கு ஏற்ற நடத்தை கொண்டவராகவோ இல்லை என்று மன்னர் அறிந்தார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உண்மையில் என்ன நடந்தது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான் இதைப் புரிந்து கொள்வதில் முக்கியமானதாக இருக்கும் என்று கோர்னெல் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தாய் ஆய்வுகள் துறை பேராசிரியராக உள்ள டமாரா லூஸ் கூறுகிறார்.

"திரைமறைவில் ஆதரவு அளிப்பது எந்தவொரு அமைப்பு முறையிலும் இருக்கிறது. அரச குடும்பத்தில் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட மோதலாக இது இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

பட்டங்கள் ரத்து செய்யப்படும் அறிவிப்பில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள தொனியைப் பார்க்கும் போது, பெண்களுக்கு நேரடி அரசியல் அதிகாரம் இல்லாத காலத்தைப் போன்றதாக இது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

``தாய்லாந்தில் நவீன மன்னராட்சி சகாப்தம்'' உருவாவதை அடையாளப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது என்று டமாரா தெரிவிக்கிறார்.

அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

இதுவரை அவருடைய பட்டங்கள் மட்டும் பறிக்கப்பட்டுள்ளன. அடுத்து அவருக்கு என்ன நடக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.

"அவருக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" என்று பவின் கூறுகிறார். நடைமுறைகள் வெளிப்படையானதாக இருக்காது என்கிறார் அவர்.

அவருடைய கடந்த காலம் பற்றிய தகவல்களை அரச குடும்பம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதைப் போல, அவருடைய எதிர்காலம் பற்றிய தகவல்களும் கட்டுப்படுத்தப்படும் என்கிறார் அவர்.

திடீரென சின்னிநாட் பதவி இறக்கம் செய்யப்பட்டிருப்பது மன்னர் வஜ்ரலாங்கோர்னின் இரு முன்னாள் மனைவிகளுக்கு நடந்ததை நினைவுபடுத்துவதாக உள்ளது.

பட மூலாதாரம், Reuters

1996 ஆம் ஆண்டில், அவருடைய இரண்டாவது மனைவி சுஜரினீ விவச்சரவோங்சே இவ்வாறு பதவி இறக்கம் செய்யப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். தன்னுடன் இருந்த நான்கு மகன்களையும் அவர் கைவிட்டுச் சென்றார்.

2014ல் மூன்றாவது மனைவி ஸ்ரீராஸ்மி சுவடீ யின் அனைத்து பட்டங்களும் பறிக்கப்பட்டன. - அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. ராஜதுரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவருடைய பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய மகனுக்கு இப்போது 14 வயதாகிறது. அவரை மன்னர் வளர்த்து வருகிறார். எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் பற்றியும், அவருடைய முந்தைய மனைவிகள் ஒரு போதும் எந்த அறிக்கையும் வெளியிட்டது இல்லை.

இது நமக்கு வேறு என்ன தகவல்களைத் தருகிறது?

வஜ்ரலாங்கோர்ன் பதவிக்கு வந்ததில் இருந்து, தனது தந்தையைப் போல அல்லாமல் தனது அதிகாரங்களை நேரடியான முறைகளில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாங்காக்கில் இரண்டு முக்கிய ராணுவப் பிரிவுகள் அவருடைய நேரடி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. நவீன தாய்லாந்தில் எப்போதும் இல்லாத வகையில் மன்னர் கையில் ராணுவ அதிகாரம் தரப்பட்டிருப்பதைக் காட்டுவதாக இது அமைந்தது.

``சினீநட் பதவி இறக்கம் செய்யப்படுவது தொடர்பாக அரச குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள கடுமையான சொற்கள், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சட்டபூர்வமாக்க மன்னர் விரும்புவதைக் காட்டுவதாக உள்ளது'' என்று பவின் விளக்கினார்.

மன்னரின் துணைவி என்ற தகுதியை இழப்பதையும் தாண்டி அவருடைய அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டமாரா ஒப்புக்கொள்கிறார்.

``தன்னை யாரும் தொட முடியாது என்ற தகவலைத் தெரிவிக்க மன்னர் விரும்பியுள்ளார். அவருக்கு சாதகமானவர் என்ற நிலையை இழந்துவிட்டால், உங்கள் எதிர்காலம் நிச்சயம் உறுதியானதாக இருக்காது என்றும் தெரிவிக்கிறார்.''

``பொருளாதாரம், ராணுவம் அல்லது குடும்பம் என அவருடைய எல்லா நடவடிக்கைகளும், அதிகார துஷ்பிரயோகத்தை அவர் சகித்துக் கொள்ள மாட்டார் என்பதைக் காட்டுவதாக உள்ளது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மன்னர் குடும்பத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்கும் நடைமுறை அமலில் உள்ள நாட்டில், சர்ச்சைக்குரிய வகையில் பதவி இறக்கம் செய்யப்பட்டதை நாட்டில் வெளிப்படையாக விவாதிக்க முடியாது - ஆனால் புகழின் உச்சியில் இருந்து ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு மக்கள் பலரின் மனதில் முக்கியமான விஷயமாக இடம் பெற்றிருக்கும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :