சிலி போராட்டம்: மாற்றத்துக்காக 10 லட்சம் பேர் அமைதிப் பேரணி

சிலி போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

சீர்திருத்தம் கோரியும், பாகுபாடுகளைக் களையவேண்டும் என்று வலியுறுத்தியும் சிலி நாட்டின் தலைநகரில் சுமார் 10 லட்சம் பேர் பல மைல் தூரம் அமைதியான முறையில் பேரணியாகச் சென்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் பல மைல்கள் நகரைச் சுற்றி நடந்து சென்று பானைகளைத் தட்டியும், கொடிகளை அசைத்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பல நாள்களாக நடக்கும் இந்தப் போராட்டம் நாட்டின் வரலாற்றுத் தருணம் என்று கூறியுள்ளார் சாண்டியாகோ ஆளுநர் கர்லா ரூபிலார்.

"நாங்கள் மாறிவிட்டோம். இன்றைய மகிழ்ச்சிகரமான, அமைதியான பேரணி மூலம் மேலதிக நீதி நிலவும், மேலும் ஒருங்கிணைந்ததாக இருக்கும் சிலி வேண்டும் என்று கோரி மக்கள் கோரியுள்ளனர். அத்துடன் எதிர்காலத்துக்கான நம்பிக்கையளிக்கும் பாதையையும் அவர்கள் திறந்துள்ளனர்" என்று அவர் டிவிட்டரில் குறிப்பிட்டார்.

பேரணியில் பங்கேற்ற 10 லட்சம் மக்கள், நகரின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் ஆவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வால்பரைசோ நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைய முயன்றதால் அரசியல்வாதிகளும், அலுவலர்களும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

பின்னணி என்ன?

மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்துதான் இந்தப் போராட்டம் தொடங்கியது. பிறகு அந்த கட்டண உயர்வு கைவிடப்பட்டது. ஆனாலும், வாழ்க்கை செலவுகள் உயர்வது, பாகுபாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து போராட்டம் தொடர்கிறது.

சில நாள்கள் முன்பு போராட்டத்தில் கொள்ளை, தீவைப்பு ஆகிய சம்பவங்களும் நடந்தன. ஒரு வாரம் முன்பு இந்தப் போராட்டம் தொடங்கியதில் இருந்து 16 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் காயமடைந்தனர். 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலி நாட்டு ராணுவம் சாண்டியாகோ நகரப் பாதுகாப்பை கையில் எடுத்துள்ளது. இந்த நகரில் தற்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

வீதிகளில் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :