"ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்" - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பட மூலாதாரம், AFP
மோசூலில் தங்களின் கலிபேட்டை உருவாக்கி விட்டதாக 2014ம் ஆண்டு பாக்தாதி அறிவித்தார்.
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் சிறப்பு படைகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டை ஒன்றில் பாக்தாதி, தான் தரித்திருந்த ஆயுதங்களை வெடிக்க செய்தார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாக்தாதி குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தரப்பு கூறியிருந்தது.
வடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை அமெரிக்கப் படை அபுபக்கர் அல்-பாக்தாதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
யார் இந்த பாக்தாதி?
சர்வதேச அளவில் அதிகம் தேடப்படும் நபர் அபுபக்கர் அல்-பாக்தாதி.
தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் விலை அறிவிக்கப்பட்ட பாக்தாதி எங்கே இருக்கிறார் என்பது பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.
இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பே பொறுப்பேற்றது.
மற்ற ஜிஹாதித் தலைவர்களைப் போலல்லாமல் பாக்தாதி, மிக அதிகத் தேவை இருந்தால் மட்டுமே பொதுவெளியில் தோன்றவோ அல்லது பேசவோ செய்திருக்கிறார். கலிஃபகம் அமைந்த அறிவிப்பை வெளியிடும்போது மற்றும் மொசூல் நகரைக் காக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தபோது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு உதாரணம்.
இஸ்லாமிய அரசு குழுவின் தலைமை வரிசையில் , உயரச் செல்லச் செல்ல, மேலிருப்பவர்களுடன் தொடர்பு என்பது அவர்களுக்கு விசுவாசமான சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, பாக்தாதி எங்கிருக்கிறார் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இதுதான், அவரை வலைவீசித் தேட சிறப்புப் படைகளை உருவாக்கியிருக்கும் அமெரிக்காவுக்கு, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதைக் கடினமாக்கியது.
இலங்கை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தலைவர் சொல்லும் காரணம் இதுதான் | abu bakr al-baghdadi |
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்