இயேசு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம் மற்றும் பிற செய்திகள்

இயேசு கிறிஸ்து படம்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

சமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி?

பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை ஏற்பத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போல மறுமலர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த பிரபல ஓவியரான சிமாபு வரைந்த ஓவியமாகும்.

இவர் 13ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமாக இயங்கியவர். எனவே இந்த ஓவியம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

இந்த ஓவியத்துக்கு ஆறு மில்லியன் பவுண்டுகள் ஏலத்தில் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி இந்த ஓவியத்துக்கு நான்கு மடங்கு அதிகமாக ஏலத்தில் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பிரான்சின் கோம்பின் நகரில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் தட்டுகளை சூடாக வைக்கும் இயந்திரத்துக்கு மேலாக இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக யாரின் கவனிப்பும் இன்றி தொங்கி கொண்டிருந்தது.

அந்த பகுதியில் பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவர் ஒருவர் இதை கவனித்து, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் மேற்கூறிய ஓவியத்தை நிபுணர்களால் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.

இது மத அடையாளங்கள் கொண்ட ஒரு பழைய ஓவியமென்றும், இதற்கு பெரிய மதிப்பில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஜித்தின் தற்போதைய நிலை என்ன? 10 முக்கிய தகவல்கள் #BBCGroundReport

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அங்குள்ள கள நிலவரத்தை 10 முக்கிய தகவல்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

சிறுவன் சுஜித் சுமார் 80 லிருந்து 90 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கீழே சென்றுவிடாமல் இருக்க சிறுவனின் கைகள் பிடித்து (ஏர் லாக்) வைக்கப்பட்டிருக்கின்றன.

"ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்" - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பட மூலாதாரம், AFP

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் சிறப்பு படைகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டை ஒன்றில் பாக்தாதி, தான் தரித்திருந்த ஆயுதங்களை வெடிக்க செய்தார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாக்தாதி குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிடுவார் என வெள்ளை மாளிகை தரப்பு கூறியிருந்தது.

வடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை அமெரிக்கப் படை அபுபக்கர் அல்-பாக்தாதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மனைவிகளை 'ரகசிய கண்காணிப்பு' மென்பொருட்கள் மூலம் வேவு பார்க்கும் கணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"என் நண்பர்கள் குறித்த அந்தரங்க தகவல்களை என் கணவர் அறிந்திருந்தார்", அப்போதுதான் இவை அனைத்தும் தொடங்கியது என்கிறார் ஏமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

"என் தோழி சாராவின் குழந்தை குறித்த தகவல்கள் போல, நான் என் நண்பர்களோடு நடத்திய உரையாடல்களிலிருந்து சில வசனங்களை சொல்வார். அவை குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. உங்களுக்கு இதுகுறித்து எப்படி தெரியும்? என்று கேட்டால், நானே அவரிடம் முன்பு கூறியுள்ளேன் என்றும், இப்போது, மறந்துபோய் கேட்கிறேன் என்றும் கூறுவார்" என்கிறார் ஏமி.

ஒரு நாள் முழுவதும், தான் எங்கு இருந்தேன் என்பது தனது கணவருக்கு எப்படி தெரியும் என்பதை தெரியாமல் பல நேரம் வியந்துள்ளதாக கூறுகிறார் ஏமி.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் வெற்றி கொள்ள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்களின் வாக்குகள் மிக முக்கியமானதாகும்.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் மிக அத்தியாவசியமாகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்கள், இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குகளை பதிவு செய்தால், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கதாக அமையும் என அரசியல் ஆய்வாளரும், பேராதனை பல்கலைக்கழக அரசியல் பிரிவின் முன்னாள் பிரதம அதிகாரியுமான பேராசிரியர் நவரத்ன பண்டார தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :