இடதுசாரி சார்புடைய புதிய அதிபர் - அர்ஜென்டினா தேர்தல் முடிவுகள் வெளியீடு

Argentina படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தே கீயர்ச்சனர் (இடது) ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் (வலது) போட்டியிட்ட கூட்டணியின் துணை அதிபர் பதவிக்கு இம்முறை போட்டியிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் புதிய அதிபராகியுள்ளார் மத்திய-இடதுசாரி கொள்கையுடைய எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்.

ஏற்கனவே பதவியில் இருந்த பழமைவாத கட்சியின் மௌரிசியோ மக்ரியை, அதிபர் தேர்தலில் 47%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் வென்றுள்ளார். தேர்தலில் வெல்ல குறைந்தபட்சம் 45% வாக்குகளே தேவை.

அர்ஜென்டினா மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வறுமையில் உழலும் நிலையை தற்போதைய பொருளாதார நெருக்கடி உண்டாக்கியுள்ளது.

தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள மௌரிசியோ மக்ரி 40.7% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆட்சி நிர்வாகத்தை முறையாக ஒப்படைக்க அதிபர் மாளிகைக்கு வருமாறு ஆல்பர்ட்டோவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தலில் முக்கியமாக இருந்த வறுமை

வறுமையை முற்றிலும் ஒழிக்கப்போவதாக மௌரிசியோ மக்ரி உறுதியளித்திருந்தார். எனினும், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் தேர்தலில் வெல்ல அவருடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தே கீயர்ச்சனர் ஒரு முக்கிய காரணமாவார்.

2007 முதல் 2015 வரை அதிபர் பதவியில் இருந்த இவர் தமது சமூக நலத் திட்டங்கள் மூலம் ஏழைகளை ஆதரித்தவர்.

அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றாலும், அவருக்காகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பதாக பலரும் தெரிவித்தனர்.

எனினும், பொருளாதார மேலாண்மையில் பொறுப்பற்றவர் மற்றும் ஊழல்வாதி என்று அவர் மீது விமர்சனங்கள் உள்ளன.

கிறிஸ்டினாதான் இந்த முறை மத்திய - இடதுசாரி சார்புடைய எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆகஸ்டு மாதம் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :