காதலியின் தொடர் வசவுகளால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மற்றும் பிற செய்திகள்

காதலியின் தொடர் வசவுகளால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்

பட மூலாதாரம், URTULA FAMILY VIA SUFFOLK DA'S OFFICE/CBS BOSTON

அமெரிக்காவில் தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பாஸ்டன் கல்லூரியின் மாணவி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்யங்க் யூ என்ற அந்த 21 வயது பெண் மீது அலெக்சாண்டர் உர்டுலா என்ற 22 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவை பூர்வீகமாக கொண்ட இன்யங்க் யூ , உர்டுலாவை தொடர்ந்து கடுமையான வார்த்தைகளால் வசைபாடி கொண்டிருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

தனது பட்டக்கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் அலெக்சாண்டர் உர்டுலா தற்கொலை செய்து கொண்டார்.

அலெக்சாண்டர் உர்டுலா தற்கொலை செய்து கொள்வதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், இவ்விருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 75,000க்கும் மேற்பட்ட குறுந்தகவல் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

இன்யங்க் யூ அடிக்கடி உர்டுலாவை திட்டிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் , 'நீ செத்து போய்விடு' , 'தற்கொலை செய்துகொள்' போன்ற வாசகங்களை அவர் உர்டுலாவுக்கு அனுப்பியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதில் கடந்தகால அனுபவங்கள் கூறுவது என்ன?

கடந்த பத்தாண்டுகளில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்தவர்களில் 4 குழந்தைகள் சடலமாகவே மீட்கப்பட்டனர். மேலும் நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 குழந்தைகள் மட்டுமே, மீட்கப்பட்டு உயிர் தப்பினர்.

இந்த வரிசையில் மீட்புப்பணி தோல்வியடைந்து, உயிரிழந்தோர் பட்டியலில் சுஜித் வில்சனும் சேர்ந்துள்ளார்.

இதில் உயிர் பிழைத்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஐம்பதடி ஆழத்திலும் மற்றொரு குழந்தை 18 ஆழமுள்ள கிணற்றிலும் விழுந்து மீட்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியில் 3 வயதுச் சிறுவன் ஹர்ஷன் 18 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்தான். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.

TWA85: 'உலகின் மிக நீண்ட, நேர்த்தியான விமானக் கடத்தல்'

பட மூலாதாரம், BANGOR DAILY NEWS

விமானக் கடத்தல்கள் தொடர் கதையாக இருந்த 1960களில் அமெரிக்காவில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை விமானக் கடத்தல் நடந்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே வாரத்தில், ரபேலே மினிசியெல்லோ என்பவர் ``நீண்ட நேர மற்றும் அதிக கவனத்தை ஈர்த்த'' கடத்தல் சம்பவத்துக்குக் காரணமாக இருந்தார்.

அந்த கால கட்டத்தில் அப்படித்தான் விவரிக்கப்பட்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்தவர்கள் அவரை மன்னிப்பார்களா?

தீபாவளி தினத்தன்று சென்னையில் மாசுபாடு அதிகரித்ததா?

பட மூலாதாரம், Getty Images

பட்டாசு வெடித்ததால் தீபாவளி தினத்தன்று சென்னையில் மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவைத் தாண்டி அதிகரிக்கவில்லையென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி காற்றில் உள்ள மாசின் அளவும் ஒலி அளவும் எவ்வளவு அதிகரிக்கின்றன என்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளவிட்டு வெளியிடுகிறது. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவும் தீபாவளி தினத்தன்றும் காற்று மாசுபாடு அளவிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதியன்றும் 27ஆம் தேதியன்றும் சென்னையின் ஐந்து இடங்களில் - பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை - காற்று மாசின் அளவும் ஒலி மாசின் அளவும் கணக்கிடப்பட்டது.

பிரெக்ஸிட்: பிரிட்டன் வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்

பட மூலாதாரம், EPA

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) தேதியை 2020ம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனால், முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த தேதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12-ம் தேதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :