அபுபக்கர் அல் பாக்தாதி: திருடப்பட்ட உள்ளாடை மூலம் அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ். தலைவர்

அபுபக்கர் அல் பாக்தாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அபுபக்கர் அல் பாக்தாதி

அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பே டி என் ஏ பரிசோதனைக்காக அவரின் உள்ளாடையை தங்கள் உளவாளி திருடியதாக குர்துக்கள் தலைமையிலான தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை(SDF) கூறுகிறது.

சிரியாவில் உள்ள அமெரிக்க சிறப்பு படையினர் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு பாக்தாதியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் தாங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டதாகவும் சிரியா ஜனநாயகப் படையின் மூத்த தளபதி போலேட் கேன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின்போது பாக்தாதி தானே தன் உயிரை மாய்த்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதலில் குர்திஷ் படைகளின் பங்கு குறித்து அதிகம் கூறவில்லை.

அக்டோபர் 27 அன்று தாக்குதல் குறித்து அறிவித்தபோது, குர்துகள் "பயனுள்ள" தகவல்களை வழங்கியதாகக் டிரம்ப் கூறினார், ஆனால் அவர்கள் "ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை" என்றும் டிரம்ப் கூறினார்.

திங்களன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில் ''இந்த தாக்குதலில் எஸ்.டி.எஃப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது'' என்று கேன் வலியுறுத்திக் கூறினார்.

அனைத்து உளவுத் தகவல்கள், அல்-பாக்தாதியை அணுகியது, அவரது இடத்தை அடையாளம் காட்டியது என அனைத்தும் தங்களின் சொந்த முயற்சியின் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலை நடத்த கடைசி நிமிடம் வரை தங்களின் உளவுத்துறையை ஈடுபடுத்தியதாகவும், வான்தாக்குதலை தாங்களே வழி நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மே 15 முதல் அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு அமைப்புடன் சேர்ந்து பாக்தாதியை சிரியா ஜனநாயகப் படையினர் தேடி வந்தனர் என்றும் அவர் இட்லிப் மாகாணத்தில் பதுங்கியிருந்ததை தாங்களே கண்டுபிடித்ததாகவும் அங்கேதான் கடைசியாக பாக்தாதி மீது தாக்குதல் நடந்ததாகவும், கேன் கூறினார். மேலும் பாக்தாதி, ஜராபூலூஸ் என்னும் புதிய இடத்திற்கு செல்லவிருப்பதாக சில தகவல்கள் கிடைத்தன என்றும் கேன் கூறினார்.

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து கொள்ளும் குழுவுக்கு எதிரான போரில் சிரியா ஜனநாயகப் படையினர் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக இருந்து வருகிறன்றனர். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க துருப்புக்களை வடக்கு சிரியாவிலிருந்து அதிபர் டிரம்ப் வெளியேற்றினார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடங்க துருக்கிக்கு பச்சை விளக்கு காண்பித்த செயல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து நமக்கு என்ன தெரியும் ?

துருக்கி, ஈராக், வடகிழக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் மற்றும் இட்லிப் வான்வெளியைக் கட்டுப்படுத்தும் ரஷ்யா ஆகிய நாடுகள், இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்குள்ள சக்திகளுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

துருப்புகள் இந்த இடத்துக்கு வந்தபோது தரையில் இருந்து கடும் தாக்குதலை எதிர்கொண்டது.

தரையிறங்கியபோது, ஒரு சுரங்கத்துக்குள் தப்பி ஓடிய பாக்தாதியை வெளியே வந்து சரணடையுமாறு அமெரிக்கப் படை அழைத்தது. பின்வாங்கிய பாக்தாதி பின்னர் தனது தற்கொலைக் குண்டினை வெடிக்கச் செய்து தமது மூன்று குழந்தைகளோடு இறந்தார்.

எஞ்சியுள்ள உடல் பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் இறந்தவர் பாக்தாதி என்று உடனடியாக, உறுதியாக, முற்றிலும் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டது,என்று அதிபர் டிரம்ப் விளக்கினார்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு சிறப்புப் படையினருடன் சென்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவர்களிடம் பாக்தாதியின் டி.என்.ஏ மாதிரிகள் இருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்ப வல்லுநர்கள் உடலின் எஞ்சிய பாகங்களை ஹெலிகாப்டர்களில் கொண்டு வந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

திங்களன்று, அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்கள் ஜெனரல் மைக் மில்லே, அமெரிக்க அதிகாரிகள் பாக்தாதியின் உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறினார். மேலதிக விவரங்களை வழங்காமல் சரியான முறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். பாக்தாதியின் உடலுக்கு இஸ்லாமிய வழக்கப்படி மத சடங்குகள் செய்யப்பட்டன என்றும் அவரின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

2011ம் ஆண்டு பாகிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோதும் இதேபோன்று அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :