ஜெர்மனியில் இறுதிச்சடங்கில் பரிமாறப்பட்ட போதையூட்டும் கேக் மற்றும் பிற செய்திகள்

கேக்

ஜெர்மனியில் இறுதிச்சடங்கிற்கு வந்திருந்தவர்களுக்கு தவறுதலாக "ஹாஷ் கேக்" அதாவது போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டுள்ளது என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் விதாகென் என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றில் இந்தப் போதையூட்டும் கேக்கை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது.

இந்த உணவகத்தில் வேலைசெய்யும் பெண் தொழிலாளி ஒருவரின் மகளிடம் கேக் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டதாகவும், 18 வயதான இந்த இளம் பெண் வேறொரு நிகழ்வுக்காக செய்து வைத்திருந்த ஒரு "ஹாஷ் கேக்கை", அவரது தாயார் தவறுதலாக பரிமாறி விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இறுதிச்சடங்கின்போது காபியோடு, கேக் பரிமாறுவது ஜெர்மனியில் ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.

இந்த தொழிலாளியின் மகள் விசாரிக்கப்பட்டு வருவதாக அருகிலுள்ள ரோஸ்டாக் நகர போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சுஜித் தந்தை உருக்கம்: "ஆழ்துளையில் விழும் கடைசி குழந்தை என்னுடையதாக இருக்கட்டும்"

"ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் கிடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்," என்கிறார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கு வெட்டி வைத்திருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். பெரும் போராட்டத்திற்கு பிறகு சுஜித் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

சுஜித்தின் உயிரை பறித்த அந்த ஆழ்துளை கிணறு சுஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு குடும்பத்துடன் 10 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பம் தண்ணீருக்காக 600 அடிக்கு ஆழ்துளை கிணற்றை தோண்டியுள்ளது. ஆனால் அதன் பின் தண்ணீர் வராததால் அதனை மண் போட்டு மூடிவிட்டனர் தனது பெற்றோர் என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சுஜித்தின் தந்தை.

அபுபக்கர் அல் பாக்தாதி: திருடப்பட்ட உள்ளாடை மூலம் அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ். தலைவர்

பட மூலாதாரம், Getty Images

அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பே டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரின் உள்ளாடையை தங்கள் உளவாளி திருடியதாக குர்துக்கள் தலைமையிலான தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை(SDF) கூறுகிறது.

சிரியாவிலுள்ள அமெரிக்க சிறப்பு படையினர் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு பாக்தாதியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் தாங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டதாகவும் சிரியா ஜனநாயகப் படையின் மூத்த தளபதி போலேட் கேன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின்போது பாக்தாதி தானே தன் உயிரை மாய்த்து கொண்டார்.

சுஜித் வில்சன் மரணம்: சோகத்தில் மூழ்கியுள்ள வீடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல், நிதியுதவி

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் வீட்டில், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, செவ்வாய்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக கட்சி சார்பில் ரூ.10 லட்ச ரூபாயும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்ச ரூபாயும் அவர் குடும்பத்திற்கு நிதியுதவியாக அளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் வந்திருந்தார்.

பிளாஸ்டிக் பைகளை விட பேப்பர் பைகள் சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் - எப்படி?

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் சென்ற முறை பொருட்கள் வாங்க சென்றபோது உங்களிடம் என்ன கைப்பை கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவுள்ளதா?

அது பிளாஸ்டிக்கால் ஆனதா? பேப்பராலானதா? அல்லது பருத்தியால் ஆனதா? அது எதுவாக இருந்தாலும், நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு செய்தி உள்ளது.

அவை அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில் நீங்கள் புதியதாக ஒரு பையை வாங்கினாலே அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல் என்கின்றனர் நிபுணர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :