காலநிலை மாற்றம்: பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா - அறிவிக்கை வெளியானது

காலநிலை மாற்றம்: பாரீஸ் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு எதிரானது - டொனால்ட் டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. இதி தொடர்பான தங்கள் நோக்கத்தை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை ஐ.நாவிடம் அளித்தது அமெரிக்கா.

இந்த அறிவிக்கை, பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேற வழிவகுக்கும். அதற்கு ஓராண்டாகும்.

பாரீஸ் ஒப்பந்தம்

காலைநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 188 நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் பாரீஸ் ஒப்பந்தம்.

தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையைவிட இரண்டு டிகிரி செல்ஷியசுக்கு மிகாமல் புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் முன்வைத்தது.

பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் இதற்கு அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், தற்போதைய அதிபர் டொனல்ட் டிரம்ப் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பின் தள்ள மேற்கொள்ளப்படும் சர்வதேச சதி என இதை விமர்சித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போதும், தாம் ஆட்சிக்கு வந்தால், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று உறுதி அளித்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகார மையம் கடந்த டிசம்பர் 2018-ல் எச்சரித்திருந்தது.

பிற நாடுகளும் அமெரிக்காவை பின்பற்றலாம் என்றும் அந்த மையம் கூறி இருந்தது.

துருக்கி மற்றும் ரஷ்யா பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், ஒப்பந்தப்படி செயல்படவில்லை என்றும் அந்த மையம் குறிப்பிட்டிருந்தது.

'நான் பாரீஸுன் பிரதிநிதி அல்ல'

ஆற்றல் துறையில் அமெரிக்காவை 'சூப்பர் பவர்'ஆக மாற்றுவேன் என தேர்தல் சமயத்தில் டிரம் சூளுரைத்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அமெரிக்காவின் ஆற்றல் துறை மீது ஒபாமா ஒரு போர் தொடுத்துள்ளார் என்றும் அப்போது கூறி இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தாண்டே பாரீஸ் ஒப்பந்தத்திலிரிந்து வெளியேற டிரம்ப் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

அப்போது, "நான் பாரீஸின் பிரதிநிதி அல்ல. பிட்ஸ்பெர்க்கின் பிரதிநிதி. அமெரிக்கா நலனுக்கு எதிரான எந்த ஒப்பந்தத்திற்கும் எதிராக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவேன் அல்லது நான் வெளியேறுவேன்," என கூறி இருந்தார்.

ஆனால், எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாமல், டிரம்ப் வெளியேறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சர்வதேச அளவிலான கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு 15 சதவீதம்.

பாரீஸ் ஒப்பந்தம் - விரிவான பார்வை

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான, உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது.

தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பைவிட பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி வெப்பம் இப்போது அதிகரித்திருக்கிறது.

எரியாற்றல் உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம், குடியேற்றம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதால் மனிதர்கள் வெளியேற்றக்கூடிய பசுங்குடில் வாயுக்களால் முக்கியமாக பூமியின் வெப்பம் அதிகரிப்பதாக பருவநிலை அறிவியல் குற்றம் சாட்டுகிறது.

இந்த வாயுக்கள், குறிப்பாக கார்பன் டைஆக்ஸைடு வளி மண்டலத்தில் செறிவாகி, சூரியனிடம் இருந்த வருகின்ற வெப்பத்தை பூமியில் தங்கிவிட செய்கிறது.

இவ்வாறு உலகம் வெப்பமடைவதுதான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அதனால், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள் பூமியின் வெப்பத்தை இரண்டு டிகிரி குறைப்பதாக நாம் கூறுகின்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டியிருப்பதை குறிக்கிறது.

மாசு வெளியேற்றம் குறைவான எரிபொருள் ஆதாரங்களுக்கு மாறுவது செலவு குறைவானது, நீண்டகாலம் நிலைத்திருப்பது என்று நிபுணர்கள் நம்பினாலும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்த ஒப்பந்தம் "அமலுக்கு வருவது" எதைக் குறிக்கிறது?

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவது என்பது, இது சர்வதேச சட்டமாவதை குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், தாங்கள் அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவேற்ற கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு செயல்படத் தொடங்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாமல் இருப்பதால், ஒவ்வொரு நாடுகளின் தன்னார்வ அர்ப்பணிப்பையும் செயல்பாடுகளையும் சார்ந்துதான் இது அமைகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மிக விரைவாக நடைமுறைக்கு வந்த முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தமும் அடங்குகிறது.

தொடக்கத்தில் இது, 2020 ஆம் ஆண்டு நடைமுறையாவதாக இருந்தது. அந்த நேரத்தில் கூட பல நாடுகள் இதனை ஏற்றுகொள்ளாது என்று பலரும் நம்பினர்.

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு உலகின் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயுக்களில் குறைந்தது 55 சதவீதத்தை வெளியேற்றுகின்ற 55 நாடுகள் இதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகியது.

எதிர்பாராத விதமாக அதிக மாசு வெளியேற்ற நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதனை ஏற்றுகொண்டதால், கட்டாயமாக தேவைப்படுகின்ற அளவை எட்டிய இந்த ஒப்பந்தம் செயல்பட தொடங்கியிருக்கிறது.

கவனிக்க... ஒபாமா காலத்தில் அமெரிக்காவும் தொடக்க காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டது.

இது தொடர்பாக விரிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :