மைக்ரோசாஃப்ட் ஜப்பான் ஊழியர்களுக்கு விடுமுறையை அதிகரித்ததால் அடைந்த லாபம்

Microsoft four-day work week 'boosts productivity' படத்தின் காப்புரிமை metamorworks / getty images
Image caption சித்தரிக்கும் படம்

எல்லா நாட்களுக்கும் ஊதியம் பெற்று கொண்டு, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்த சோதனை முயற்சியின்போது, உற்பத்தி திறன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் ஜப்பான் கிளை தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஊதியத்தோடு கூடிய விடுமுறை வழங்கப்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்டன.

அதிகபட்சமாக 30 நிமிடங்களே அலுவலகக் கூட்டங்கள் நடைபெற வேண்டுமென கட்டுப்பாடும் போடப்பட்டிருந்தது. நேரடியாக பார்த்து கலந்துரையாடுவதைவிட ஆன்லைன் மூலம் கலந்துரையாடும்படி கூறப்பட்டது.

உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும்.

"நன்றாக ஓய்வு எடுங்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images

2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஜப்பானிலுள்ள சுமார் 25 சதவீத நிறுவனங்களின் ஊழியர்கள், வேலை நேரம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு 80 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்வது தெரிய வந்தது. இந்த அதிக நேர வேலைக்கு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

2019 கோடைக் காலத்தில் நடந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெர்க் லைஃப் சாயிஸ் சேலஞ்ச் ஆய்வுக்கு பின்னர், அந்த நிகழ்வே மிகவும் பிரபலமாகிவிட்டது. இதில் 92% மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பங்கெடுத்தனர்.

ஒரு மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 2018 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், மின்சார பயன்பாடு 23 சதவீதமும், தாளில் அச்சிடுவது 59 சதவீதமும் குறைந்துவிட்டது என்று மைக்ரோசாஃப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு குளிர்காலத்தில் இரண்டாவது வெர்க் லைப் சாயிஸ் சேலஞ்சை செயல்படுத்த திட்டமிடுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த முறை சிறப்பு விடுமுறையை வழங்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆனால், ஊழியர்கள் நன்றாக ஓய்வு எடுத்துகொள்ள ஊக்கமூட்டப்படுவர் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

ஆறு நாட்கள் வேலை

அந்த கருத்துக்கு மாறாக, சீனாவின் ஆன்லைன் இணைய அங்காடி பெருநிறுவனமான அலிபாபாவின் நிறுவனர்களில் ஒருவரான ஜேக் மா, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் "996" வேலை முறை என அவர் விவரித்தபடி, தொழிலாளர்கள் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணிவரை வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை "வரம்" என்றார்.

பிரிட்டனின் தொழிலாளர் கட்சி வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்பது "எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது" என்று கூறியது.

"சிலர் அவர்கள் விரும்புவதைவிட குறைவான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானோர் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்" என்று செப்டம்பர் மாதம் வெளியான இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தங்களுக்கு கிடைக்கும் அதிக விடுமுறை நாட்களில் பகுதி நேர வேலைக்கு பலரும் செல்வதால், தங்களுக்கு அதிகமாக கிடைக்கும் நேரத்தை ஏதாவது வேலைக்கு உட்படுத்தி தங்களை கசக்கி பிழித்து கொள்கின்றனர் என்றே தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்