தண்ணீர் பிரச்சனை: ஐந்து ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் - உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை

ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

கொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிகின்றன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர் மக்கள். இதுதான் இப்போதைய தென் ஆப்ரிக்க நகரங்களின் நிலை.

தென் ஆப்ரிக்காவில் உள்ள க்ராஃப் ரெயினெட் நகரத்திலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ அங்கு மழை பெய்து ஐந்து வருடமாகிறது என்கிறார். அணைகள் எல்லாம் வற்றிய பிறகு சில ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே அம்மக்களின் தாகத்தைத் தணிக்கின்றன.

ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. உண்மையில் இது மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்கின்றனர் சூழலியலாளர்கள்.

அதாவது தென் ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட இந்த பகுதி சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வெப்பமடைவதாகக் கூறுகிறார்கள். புவி வெப்பமயமாதலை மற்ற நாடுகள் தடுக்கவில்லை என்றால் இந்த நிலை பிற இடங்களிலும் ஏற்படலாமென எச்சரிக்கிறார்கள்.

இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன?

படத்தின் காப்புரிமை HOCKEY INDIA

"பயப்பட வேண்டாம். பேசுங்கள்" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜின் பிப்ரவரி 2017ல் முதல் கட்டமாக நடத்திய சந்திப்பிலேயே ராணி இவ்வாறு கூறினார்.

ஹாலாந்தில் இருந்து புதிதாக வந்திருந்த மரிஜின், தம்மிடம் ஏன் இந்த அணியில் இருக்கும் பெண்கள் பேச தயங்குகிறார்கள் என்ற காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தார்.

இதே அணிதான் இரு நாட்களுக்கு முன்பு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி மைதானத்தில் நம்பிக்கையுடன் அற்புதமாக விளையாடி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இருக்கிறது.

விரிவாகப் படிக்க:இந்திய பெண்கள் ஹாக்கி: வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன?

ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி: கனடாவுக்கு குடிபெயர இதுதான் சரியான நேரமா?

படத்தின் காப்புரிமை Getty Images

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனடிய நாடாளுமன்ற பொதுச்சபைக்கு (House of Commons) நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மொத்தமுள்ள 388 தொகுதிகளில் குறைந்தது 170 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே பெரும்பான்மை பெற முடியும்.

எனினும், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியைவிட கூடுதலாக 36 தொகுதிகள், அதாவது 157 தொகுதிகளில் வென்றுள்ள லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைக்க உள்ளது.

விரிவாகப் படிக்க:ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி: கனடாவுக்கு குடிபெயர இதுதான் சரியான நேரமா?

வண்டலூர் அருகே துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

சென்னை அருகே உள்ள வண்டலூரில் கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வீடியோ கேம் விளையாட்டு தொடர்பில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வண்டலூருக்கு அருகே உள்ள வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். செவ்வாய்க்கிழமையன்று முகேஷ் குமார் தனது நண்பர்கள் விஜய் மற்றும் உதயா ஆகியோருடன் தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். முகேஷும் விஜய்யும் வீட்டின் உள்ளே இருக்க, விஜய்யின் சகோதரரான உதயா, வீட்டிற்கு வெளியே நின்றபடி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

விரிவாகப் படிக்க:துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலி: வீடியோ கேம் விளையாட்டில் நடந்ததா?

சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளியாகும் போர்க் குற்றங்கள்

படத்தின் காப்புரிமை AFP

வடகிழக்கு சிரியாவில், குர்து கிளர்ச்சியாளர்களுடன் சண்டை இட்டுவரும் துருக்கி ஆதரவுப் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் வெளியாகத் தொடங்கிய கைபேசி காணொளிகளின் உதவியோடு இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இத்தகைய செயல்பாடுகளுக்கு துருக்கியே பொறுபாக்கப்படும் என்று ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தபடும் என்று துருக்கி உறுதியளித்துள்ளது.

விரிவாகப் படிக்க:சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளியாகும் போர்க் குற்றங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :